Print Date: Wednesday, 01 July 2026, 04:56 PM
Published On: 2026-06-26 18:45:03
ஹைதராபாத்: ஹைதராபாத் ஈ-சாம்பியன்ஸ் அணி, ரங்காரெட்டி ரைசர்ஸ் அணிக்கு எதிரான டிஜி20 லீக் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் நடத்தும் முதலாவது சீசன் 'டிஜி20' (TG20) தெலங்கானா டி20 பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 8ஆவது லீக் போட்டியில் ஹைதராபாத் ஈ-சாம்பியன்ஸ் மற்றும் ரங்காரெட்டி ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் ஈ-சாம்பியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்துப் பேட்டிங் செய்யக் களமிறங்கிய ரங்காரெட்டி ரைசர்ஸ் அணிக்கு, ஆரோன் ஜார்ஜ் மற்றும் அரவெல்லி அவனிஷ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல தொடக்கத்தை அளித்தது. இதில் அதிரடியாக விளையாடிய அரவெல்லி அவனிஷ் தனது அரைசதத்தைப் பதிவு செய்தார். மற்றொரு தொடக்க வீரரான ஆரோன் ஜார்ஜ் 35 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து அவனிஷும் 53 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஆதித்யா ஜவ்வாஜியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி அசத்திய ஆதித்யா ஜவ்வாஜி, 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் அரைசதம் கடந்து 58 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தியாகராஜன் 31 ரன்கள் சேர்த்து சிறப்பான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன் மூலம் ரங்காரெட்டி ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் ஈ-சாம்பியன்ஸ் அணி தரப்பில் பிரனவ் வர்மா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதன்பின் 196 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கிப் பேட்டிங் செய்த ஹைதராபாத் ஈ-சாம்பியன்ஸ் அணிக்குத் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்களான விகாஸ் ரெட்டி மற்றும் அன்வித் ரெட்டி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணிக்கு, பின்னர் இணைந்த கேப்டன் அபிராத் ரெட்டி மற்றும் சண்முகா அஷ்வின் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது. இதில் அபாரமாக விளையாடிய கேப்டன் அபிராத் ரெட்டி அதிரடியாக அரைசதம் கடந்தார். மறுபுறம் அவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்த சண்முகா அஷ்வின் 30 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இப்போட்டியில் சதம் விளாசுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிராத் ரெட்டி, 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 99 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து, வெறும் ஒரு ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த கதுகு தினேஷ் மற்றும் யஷ்வீர் கௌட் ஆகியோரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதில் இறுதிவரை களத்தில் இருந்து அதிரடி காட்டிய கதுகு தினேஷ் 25 ரன்களும், யஷ்வீர் கௌட் 30 ரன்களும் குவித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன் மூலம் ஹைதராபாத் ஈ-சாம்பியன்ஸ் அணி 18 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ரங்காரெட்டி ரைசர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் ஈ-சாம்பியன்ஸ் அணி நடப்பு சீசனில் தங்களது தொடர்ச்சியான இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.