Print Date: Wednesday, 01 July 2026, 04:56 PM
Published On: 2026-06-26 18:43:03
புவனேஸ்வரம்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், ஒடிசாவில் பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியனின் மனைவியுமான சுஜாதா கார்த்திகேயன் பிஜு ஜனதா தளம் கட்சியில் இன்று இணைந்தார். ஒடிசா மாநிலத்தில் கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும்கட்சியாக இருந்த பிஜு ஜனதா தளம் தோல்வி அடைந்து, ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுத்தது. இதனையடுத்து பிஜு ஜனதா தளத்தின் தலைவர் நவீன் பட்நாயக்கின் வலதுகரமாக அறியப்பட்ட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவருமான வி.கே.பாண்டியனின் மனைவியான ஐஏஎஸ் அதிகாரி சுஜாதா கார்த்திகேயன் ஒடிசா நிதி துறையின் சிறப்புச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து அவருக்கு பாஜக அரசு பல்வேறு நெருக்கடிகள் கொடுத்ததாகவும் அதனால் அவர் 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் விருப்ப ஓய்வு பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், புவனேஸ்வரத்தில் உள்ள பிஜு ஜனதா தளத்தின் தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் முன்னிலையில் சுஜாதா கார்த்திகேயன் இன்று அக்கட்சியில் இணைந்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய நவீன் பட்நாயக், "சுஜாதாவை வரவேற்கிறேன். அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்துள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான இவர், பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். குறிப்பாக, ஒடிசா மாநில பெண்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை பணியில் இருந்தவரை தீவிரமாக செயல்படுத்தினார்" என்றார். "வரும் காலத்தில் கட்சியில் அவரது பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் என நம்புகிறேன். மக்களை குறிப்பாக பெண்களையும் வழி நடத்த அவர் கற்றுக் கொள்வார்" என்று கூறிய நவீன் பட்நாயக், "ஊடகங்கள் மற்றும் அனைத்து மக்களிடமும் ஒன்றை மீண்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதாவது அடுத்த தேர்தலிலும் கட்சியை நானே வழி நடத்துவேன்" என்றார். கட்சியில் இணைந்துள்ள சுஜாதா கார்த்திகேயன், வரும் காலத்தில் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கக் கூடும் என்ற யூகங்கள் நிலவும் நிலையில், அடுத்த தேர்தலிலும் பிஜு ஜனதா தளம் கட்சியை தானே வழி நடத்துவேன் என்று பட்நாயக் திட்டவட்டமாகக் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுஜாதா கார்த்திகேயன், "நவீன் பட்நாயக்கின் தலைமையின் கீழ் 24 ஆண்டுகள் ஒடிசா மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை பெற்றேன். இன்று, அதே தலைமையின் கீழ் மீண்டும் ஒடிசா மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. புரி ஜெகன்னாதர், கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான பிஜு ஜனதா தளம் கட்சியின் தொண்டர்கள் ஆசியுடன், ஒடிசா மக்களுக்காக நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றுவேன்" என்று கூறினார். 'மதுரையின் மருமகள்' சுஜாதா கார்த்திகேயன் ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் சுஜாதா ரௌத். டெல்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில் அரசியல் அறிவியல் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படித்தவர். 2000-ம் ஆண்டு பேட்ச் ஒடிசா கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த சுந்தர்கர் மாவட்டத்தில் பணியை தொடங்கி, அங்குள்ள பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இது பின்னர் ஒடிசா மாநிலம் முழுவதும் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒடிசாவின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் கனவுத் திட்டமான 'மிஷன் சக்தி' மகளிர் சுயஉதவிக் குழு இயக்கத்தை பல ஆண்டுகள் வழி நடத்தினார். இவரது நிர்வாகத்தின் கீழ் இத்திட்டம் சுமார் 70 லட்சம் கிராமப்புறப் பெண்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான பொருளாதார இயக்கமாக வளர்ந்தது. பெண்களுக்கான வட்டி இல்லா கடன் மற்றும் அரசுப் பணிகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல் போன்றவற்றில் முக்கிய பங்காற்றினார். டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்கும்போது, வி.கே. பாண்டியனுடன் நட்பு ஏற்பட்டு, அது காதலாகி 2001-ல் திருமணம் செய்து கொண்டார். 2000-ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான வி.கே. பாண்டியன், முதலில் பஞ்சாப் கேடரில் பணியாற்றினார். பின்னர் சுஜாதா ரௌத்தை மணந்ததால், அவரும் ஒடிசா கேடருக்கு மாற்றப்பட்டார். வி.கே. பாண்டியன் நவீன் பட்நாயக்கின் முதன்மைச் செயலாளராகவும், ஒடிசாவின் மிக செல்வாக்குமிக்கவராகவும் திகழ்ந்தார். 2023-ல் வி.கே. பாண்டியன் விருப்ப ஓய்வு பெற்று பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்து பணியாற்றினார். 2024 ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில் தேர்தல் வியூகங்களை வகுத்து முன்னின்று கட்சியை வழி நடத்தினார். எனினும், பாஜக இவருடைய 'தமிழ்' அடையாளத்தை குறிைத்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டதால் பிஜு ஜனதா தளம் தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று, ஜூன் 2024-ல் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார் வி.கே.பாண்டியன்.