Print Date: Tuesday, 30 June 2026, 09:38 PM


Life Style

தமிழக அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்: நயினார் நாகேந்திரன் கண்டனம்

Published On: 2026-06-26 23:10:37

News Image

தூத்துக்குடி: தமிழக அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளது தமிழக மக்களுக்கு செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய துரோகம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நிகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வெங்கட நாராயணா என்பவர் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர். மேலும், வெங்கட்ரமணா ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும், இவர் கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார் உடைய நெருங்கிய நண்பராகவும் உள்ளார். இவரை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முதல்வர் விஜய் நியமித்துள்ளார். இது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்?. இது தமிழக மக்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம். ஏற்கனவே கர்நாடகாவுடன் நதிநீர் பிரச்சனை இருக்கும் சூழலில், தமிழக அரசின் சிறப்பு பிரநிதியாக இவர் இருந்தால் எப்படி தமிழ்நாட்டுக்கு நீதி கிடைக்கும்?" என்றார். மேலும் பேசிய அவர், "கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தவெக நிர்வாகிகள் நான்கு பேர் தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்கள். தவெக ஆட்சியில் இருப்பதால் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. எப்படி முந்தைய ஆட்சி காலத்தில் பாலியல் வன்கொடுமை, கஞ்சா, போதை நடமாட்டம் இருந்ததோ அதைவிட மோசமான சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது" என்றார். சட்டமன்றத்தில் முதல்வரின் சைகை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "சட்டமன்றத்தில் நடந்த சம்பவத்திற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் மிகுந்த கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு முதலமைச்சர் என்கிற தன்மையில் அவர் நடந்து கொள்ளவில்லை. முதலமைச்சர் இவ்வாறு சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். 'அப்பாவை காணவில்லை' என்று கூறுகிறார். எந்த அப்பாவை காணவில்லை என்று தெரியவில்லை" என்றார். சென்னையில் நடைபெற்ற போதை ஒழிப்பு மாரத்தான் போட்டி தொடர்பாக பேசிய அவர், "போதைப் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க மராத்தான் ஓடினால் மட்டுமே போதாது. காவல்துறையை சுதந்திரமாக இயங்க விட வேண்டும். அப்போதுதான் போதைப் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க முடியும். சினிமாவில் ஓடுகிற மாதிரி ஓடிக்கிட்டு, ஸ்டூடியோவில் நடக்கிற மாதிரி சட்டமன்றத்தை நடத்தினால் எந்த பலனும் இருக்காது" என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.