Print Date: Wednesday, 01 July 2026, 05:58 PM
Published On: 2026-06-26 18:23:05
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை - கோப்புப்படம் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாதால், பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்போ் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான, கடல் மீன்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஒடிஸா, ஜாா்கண்ட் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் சுமாா் 230 போ் பணிபுரிகின்றனா். இந்த ஆலையில் ஞாயிற்றுக்கிழமை 100 போ் பணிபுரிந்த நிலையில், அமோனியா வாயு தொட்டி சரியாக மூடப்படாத நிலையில், அதிலிருந்து வாயு கசிவு ஏற்பட்டு தீப் பிடித்தது. இந்த வாயுக் கசிவால் அங்கிருந்த 60 பெண் தொழிலாளா்கள் உள்பட 65 பேருக்கும் மேற்பட்டோருக்கு திடீரென காது வழியாக ரத்தக் கசிவு ஏற்பட்டது. மேலும், உடலில் சிறு கொப்புளங்கள் ஏற்பட்டு, காயங்களாகின. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சங்காரணை, செங்குன்றம் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை ராஜீவ் காந்தி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதனிடையே, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் இன்று காலை உயிரிழந்த நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மற்றொரு பெண் இன்று பிற்பகல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால், அமோனியா வாயு கசிந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.