Print Date: Wednesday, 01 July 2026, 05:58 PM


Life Style

என்எல்சி பங்கு விற்பனை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

Published On: 2026-06-26 18:22:05

News Image

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்யக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூன் 25) கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், என்.எல்.சி. இந்தியா (NLC India) நிறுவனத்தின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தை, 2% அடிப்படை பங்குகள் மற்றும் 1% கூடுதல் பங்குகள் ஒதுக்கீட்டு விருப்பம் (green-shoe option) உள்ளிட்ட 3% வரையிலான 'விற்பனைக்கான சலுகை' மூலம் விற்பனை செய்வதற்கு இந்திய அரசு எடுத்துள்ள முடிவு குறித்து தமிழ்நாடு அரசின் வருத்தத்தைத் தெரிவிக்கும் முகமாக இக்கடிதத்தை தான் எழுதுவதாகத் குறிப்பிட்டுள்ளார். மேலும், என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகளை மேலும் குறைக்கும் எந்தவொரு முடிவையும், தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியாக ஆட்சேபிக்கிறது என்றும், என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தனது தோற்றம், வளர்ச்சி மற்றும் தொடர்ச்சியான செயல்பாடுகள் என அனைத்திலும், தமிழ்நாட்டுடன் இரண்டறக் கலந்திருப்பதால், இவ்விவகாரம் தமிழ்நாட்டிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் தலைமையகம் தமிழ்நாட்டின் நெய்வேலியில் அமைந்துள்ளது என்றும், இங்குதான் அதன் முதன்மையான பழுப்பு நிலக்கரி சுரங்கச் செயல்பாடுகளான சுரங்கம்-I, சுரங்கம்-IA, சுரங்கம்-II மற்றும் அதன் முக்கிய நிலக்கரி சுரங்க முகப்பு சார்ந்த அனல் மின் நிலையங்களும் அமைந்துள்ளன என்றும், இந்த நிறுவனம், மாநில அரசு நிர்வாகத்தின் விரிவான வசதி வாய்ப்புகள், உள்கட்டமைப்பு மேம்பாடு, மறுவாழ்வு நடவடிக்கைகள் மட்டுமல்லாது, தமிழ்நாட்டு மக்களின் ஒத்துழைப்புடன், மாநில அரசு வாயிலாகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் பல தசாப்தங்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும், இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனத்தில் மாநில அரசுக்கு நியாயமான மற்றும் நீடித்த உரிமை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், என்.எல்.சி இந்தியா நிறுவனம் என்பது வெறும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம் மட்டுமல்லாமல், எரிசக்தி பாதுகாப்பு, கனிமவள மேம்பாடு மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த தேசிய சொத்து என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என்றும், இந்திய அரசின் பங்குகளை மேலும் குறைப்பது, அது எவ்வளவு குறைவாக இருப்பினும், இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் பொது உடைமைத் தன்மைக்கு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்றும், இத்தகைய நடவடிக்கை நிதி சார்ந்த அம்சங்களைக் கடந்து, மாநிலத்தின், மாநில மக்களின் நீண்டகால நலன்கள், நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பாதிப்பதாக அமையுமென்றும் தெரிவித்துள்ளார். மேலும், என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகள் மேலும் குறைக்கப்படக் கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து உறுதியாக இருந்துவருகிறது என்றும், இத்தகைய பொதுத்துறை நிறுவனங்கள், குறிப்பாகப் பல தசாப்தங்களாக அவற்றைச் செயல்படுத்திவரும் மாநிலத்தின் தொடர்ச்சியான ஆதரவோடு நிறுவப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டவை என்பதால், இத்தகைய நிறுவனங்கள் தொடர்ந்து முழுமையாக அரசின் உரிமையிலும் கட்டுப்பாட்டிலும் மட்டுமே நீடிக்கவேண்டும் என்றும், இத்தகைய சூழலில், என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான தனது முடிவை இந்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், தமிழ்நாடு அரசின் எண்ணங்களையும், கொள்கை ரீதியான ஆட்சேபனைகளையும் இந்திய அரசு உரிய முறையில் பரிசீலிக்கும் என்று தாம் உளப்பூர்வமாக நம்புவதாகவும் பிரதமருக்கு முதல்வர் விஜய் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.