Print Date: Tuesday, 30 June 2026, 11:03 PM


News

காரை தடியால் அடித்த டோல்கேட் ஊழியருக்கு தர்ம அடி கொடுத்த உள்ளூர்வாசிகள்

Published On: 2026-06-26 23:04:38

News Image

மலப்புரம்: காரை தாக்கி அடாவடியில் ஈடுபட்ட டோல்கேட் ஊழியருக்கு வாகனத்தில் வந்தவர்களும், உள்ளூர்வாசிகளும் தர்ம அடி கொடுத்த சம்பவம் கேரளம் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. நேற்றைய (ஜூன் 25) தினம், நமது அண்டை மாநிலமான கேரளத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் காரில் வந்தவர்களுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த மோதல் நிகழ்வு அம் மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலை எண் 66 இல் உள்ள வெட்டிசிறா டோல்கேட்டில் அரங்கேறியிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், டோல்கேட் ஊழியர் ஒருவர் காரின் மீது தடியால் அடித்ததை அடுத்தே இந்த மோதல் நிகழ்வு தொடங்கி உள்ளது. டோலுக்கான கட்டணம் செலுத்தப்படவில்லை என கூறியே இருதரப்புக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. அதேநேரத்தில், காரில் வந்தவர்கள் தரப்பில் ஃபாஸ்டேக் வாயிலாக பணம் எடுக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டு உள்ளது. ஆனாலும், திரையில் பணம் பிடித்ததற்கான தகவல் வரவில்லை என கூறி டோல்கேட் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், காரின் விண்ட்ஷீல்டில் ஒட்டப்பட்டிருந்த ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை ஊழியர் ஒருவர் தடியால் நீக்க முயன்றார். அதேநேரத்தில் கார் மெல்ல மெல்ல அங்கிருந்து புறப்பட்டுள்ளது. உடனே, ஆத்திரமடைந்து அந்த காரின் பின்பக்கத்தில் டோல்கேட் ஊழியர் அதே தடியால் பலமுறை பலமாக தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியுற்ற காரில் வந்தவர் ஒருவர், காரைவிட்டு வெளியே வந்து அவரை தட்டிக் கேட்க முயன்றார். ஆனால், அவரை இறங்க விடாமல் கதவை அழுத்திப் பிடித்து, காருக்குள்ளேயே வைத்து அவரை டோல்கேட் ஊழியர் தாக்கியுள்ளார். ஆகையால், காரின் முன் மற்றும் அடுத்த பக்கத்தில் இருந்து வெளியே வந்த சக பயணிகள் மிக மோசமாக நடந்து கொண்ட டோல்கேட் ஊழியரை பதிலுக்கு தாக்க ஆரம்பித்தனர். இந்த சம்பவத்தில் உள்ளூர்வாசிகள் சிலர் மற்றும் அவ்வழியாக வந்த வேறு சில வாகன ஓட்டிகளும் காரில் வந்தவர்களுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர். அவர்களிடமும் டோல்கேட் ஊழியர்கள் மோதல் போக்கிலேயே வாக்குவாதம் செய்திருக்கின்றனர். ஆகையால், அந்த டோல்கேட்டே களேபரமாகக் காட்சியளித்துள்ளது. மேலும், அங்கிருந்த சிலர் இந்த டோல்கேட்டில் இதுபோல அடிக்கடி முறைகேடு நடப்பதாகக் கூறி அந்த குறிப்பிட்ட லேனில் இருந்த கேட்டை அடித்து நொறுக்கினர். மேலும், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார், இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர். அதேநேரத்தில் இரு தரப்பிலும் புகார் எதுவும் வழங்கப்படாத காரணத்தினால், மோதல் நிகழ்வுகுறித்து வழக்கு பதிவு ஏதும் செய்யப்படவில்லை என காடம்புழா காவல்நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த மோதல் சம்பவம் நேற்று நள்ளிரவு சுமார் 2 மணியளவில் நடைபெற்றதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, குறிப்பிட்ட அந்த சுங்கச்சாவடியில் பணியாற்றும் ஊழியர்கள் பெரும்பாலனோர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இதனாலேயே அங்கு சில நேரங்களில் இதுபோன்ற பதற்றமான சூழல் அமைவதாகவும் அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.