Print Date: Tuesday, 30 June 2026, 11:03 PM
Published On: 2026-06-26 22:32:41
UPDATED : ஜூன் 27, 2026 12:10 AM ADDED : ஜூன் 27, 2026 12:08 AM அயோத்தி: உத்தர பிரதேசத்தில் அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு வழக்கில், எட்டு பேர் கைதான நிலையில், கோவிலை நிர்வகிக்கும் ராம ஜென்மபூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலர் சம்பத் ராய், அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்கள் பதவிகளை நேற்று ராஜினாமா செய்தனர். மேலும் பலரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கும் நிலையில், ''இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதிப்பட தெரிவித்தார். உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோவில், பக்தர்களின் தரிசனத்துக்காக 2024ல் திறக்கப்பட்டது. தினமும் லட்சக்கணக்கானோர் பால ராமரை தரிசிக்கின்றனர். இக்கோவிலை, ராம ஜென்மபூமி தீர்த்தஷேத்ரா அறக் கட்டளை நிர்வகிக்கிறது. கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடைகளில் பெரியளவில் முறைகேடு நடந்ததாக, முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் சமீபத்தில் குற்றஞ்சாட்டின. இது குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்த விவகாரம், உ.பி., அரசியலில் புயலை கிளப்பியது. இதையடுத்து, கோவில் அறக்கட்டளை நிர்வாகத்தின் கோரிக்கையின் படி, மூன்று பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து, கடந்த 14ல் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். இக்குழுவினர், கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்டோரிடம் சில நாட்களாக விசாரணை நடத்தினர். மேலும், அயோத்தி நகரை விட்டு வெளியேறவும் அவர்களுக்கு தடை விதித்தனர். இந்த விவகாரத்தில், நன்கொடை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களான அவினாஷ் சுக்லா, கருணேஷ் பாண்டே, மனிஷ் யாதவ், லவகுஷ் மிஸ்ரா, ராமசங்கர் மிஸ்ரா, அந்த பணியின் தலைவர் அனுகல்ப் மிஸ்ரா, பணத்தை எண்ணும் பணியின் பொறுப்பாளரும், ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியுமான சுபாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் ராம ஜென்மபூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலர் சம்பத் ராயின் டிரைவரும், நெருங்கிய உதவியாளருமான ராமசங்கர் யாதவ் ஆகியோரை, சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த முறைகேட்டில், ராமசங்கர் யாதவ் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ராம ஜென்மபூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலர் சம்பத் ராய், தார்மீக அடிப்படையில் நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். அதே போல், அறங்காவலர் அனில் மிஸ்ராவும் பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் பலரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், கைது எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று கூறியதாவது: சனாதன தர்மத்தின் நம்பிக்கை சின்னமாக அயோத்தி திகழ்கிறது. நன்கொடை முறைகேடு விவகாரத்தில் உறுதி அளித்தபடி, சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கை கிடைத்ததும் எட்டு பேரை கைது செய்துள்ளோம். இதில், சம்பந்தப்பட்டோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் தப்ப முடியாது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன. மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் எந்த செயலையும் அரசு பொறுத்துக் கொள்ளாது. இவ்வாறு அவர் கூறினார்.