திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி வட்டம் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம் கபாலிபாறை கிராமத்தில்..வடகிழக்கு எல்லையில் காவல் தெய்வமாக கோவில் கொண்டு அருள்பாளிப்பவள் வடக்குவாச்செல்வி என்றால்...வடமேற்கு எல்லையில் கிழக்குபார்த்து கோவில் கொண்டு காத்தருள்பவர் பெரியசுடலைச்சாமி.
கோவிலின் பிரதான தெய்வமாக பெரியசுடலை வீற்றிருக்க..அவருக்கு உறுதுணையாக இருபத்தோறு பீடங்களில் பந்திபரிவார தெய்வங்கள் அமர்ந்து பக்தர்களுக்கு அபயம் அளிக்கின்றனர்.
தெய்வங்களுக்கு இங்கே சுதை உருவாரங்களோ...கற்சிற்பங்களோ இல்லை..சுடலைமாடன்..சிவனனைந்த பெருமான்..பேச்சியம்மன்..பிரமசக்தி...மாயாண்டி..தளவாய் மாடசாமி..சங்கிலி பூதத்தார்..முப்புலிமாடன்..மாசான போத்தி..போன்றதெய்வங்களுக்கு பிரமீடு வடிவ மாடங்களும்..அவைகளுக்கு முன்பாக அந்தந்த தெய்வங்களின் ஆயுதங்களும் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.
முன்பொருகாலத்தில் கைலாயமலையில் சிவனும் பார்வதியும் தேவகணங்களோடு பேசிக்கொண்டிருக்க..திடீரென பதறியபடி பரமேஸ்வரன்..'தேவி..கொஞ்சம் பொறு..நான் பூலோகத்தில் அனைத்து உயிர்களுக்கும்..அதனதன் பாவ புண்ணியங்களுக்கேற்ப படியளந்து ரட்சித்துவிட்டு வருகிறேன்'என விரைகிறார்.
சிவனை சோதிக்க எண்ணிய பார்வதிதேவியோ..அப்போது அருகில் ஊர்ந்துகொண்டிருந்த சிற்றெரும்பை பிடித்து சிமிழில் அடைத்துவைக்கிறாள்.
சிவனார் திரும்பியதும்.."தேவா..தாங்கள் அனைத்து ஜீவராசிகளுக்கும்..உணவளித்துவிட்டீரா..எதுவும் விடுபடவில்லையே..?'என வினவ..தன் பணியை கொச்சைப்படுத்தும் விதம் கண்டு வெகுண்டெழுந்து..'ஏன்..விடுபட்டதென்று நிருபிக்க இயலுமா..தேவி?'என கேட்க..'இதோ சாட்சி'என சிமிழை திறக்க...அதிர்ந்தாள் தேவி..சிமிழுக்குள் சிற்றெரும்பு வாயில் சிறு அரிசியை கவ்வியபடியே காட்சியளித்தது.
"நாதா..தாங்கள் மீது சந்தேகப்பட்ட என்னை மன்னித்தருளும்'எனகேட்க...சிவனோ..'என்னது..மன்னிப்பா..நீ பரம்பொருளைச் சந்தேகித்ததால் சாபம் பெற்றே தீரவேண்டும்..நீ பூலோகத்தில் சுடுகாட்டுப்பேய்களுக்கிடையே பேச்சியாக பிறப்பெடுத்து செல்வாயாக...என்னை நாள்தோறும் பூசித்து வர ஒருநாள் உன் முன்வந்து..சாபம் நீக்கி பிறகு ஏற்றுக்கொள்கிறேன்'என்கிறார்.
'ஸ்வாமி..தங்களை பிரிந்து வாழ்வதுதானே சாபம் அதை பிரார்தனையால் கடந்துவிடுவேன்..ஆனால் நமது குழந்தைகளை பிரிந்து வாழ்வதெப்படி நாதா.?'என்கிறாள்.
'நீ..பூலோகவாழ்வுக்கு செல்கிறாய்..அதுவும் பிணங்கள் எரியும் பெருங்காட்டுக்கு..அங்கே தெய்வாம்சங்கள் வந்து வாழ இயலுமா...உமக்கு வேண்டுமானால்..உறுதுணையாக ஒருமகனை தருகிறேன்...பிணம் எரியும் தணல் வெடித்துச்சிதறும்போது..அதை உன் முந்தாணையால் ஏந்தி ஒன்றுசேர்த்து..என்னை நினைத்தபடி அள்ளி எடு...அவன் நமது மகனாக இருந்து காப்பான்'என கூறுகிறார் சிவனார்.
பேச்சியாக சாபம் பெற்ற அன்னை சுடுகாடுகளில் பேய்களுக்கெல்லாம் தலைவியாக வாழ்ந்து...சிவனை பூசித்து வருகிறாள்..ஒருநாள் தான் நிராதரவாக இருப்பதாக கழிவிரக்கம் எழ...சிவபெருமான் சொன்னது நினைவில் கொண்டு..எரியும் சுடலையில் வெடித்து தெரிக்கும் கங்குகளை முந்தாணையில் ஏந்தி..பின் ஒன்றுசேர்க்க..உருவமில்லாத...ஆனால் உயிருள்ள பிண்டம் கிடைக்கிறது.
அழுது..அழற்றி..சிவனாரை வேண்டி கதற..அவர் பார்வதி முன்தோன்றி..அப்பிண்டத்திற்கு பால் புகட்டுமாறும்..அப்படி செய்தால்..அது குழந்தையாக மாறும்...உமக்கும் பாவவிமோசம் கிடைக்குமென்க..அப்படியே செய்த தேவி..சாபம் நீங்கி அக்குழந்தைக்கு 'சுடலை'என பெயரிட்டு..தூக்கிக்கொண்டு கைலாயம் செல்கிறாள்.
அங்கே பகல் முழுதும் குழந்தையாக பாலருந்தி வளரும் சுடலை...இரவில் யாருமறியாமல் அசுர உருக்கொண்டு சுடுகாடுகளுக்கு சென்று அங்கே எரியும் பிணங்களை புசித்தபின்..குழந்தையாக மாறி..திரும்பிவிடுவதுமாக இருக்க..தாதிப்பெண்களின் புகார்களை கண்டும் காணாமல் இருந்த பார்வதி..ஒருநாள் தானே சுடலை மீது பிணவீச்சம் அடிப்பதைக்கண்டு...பரமேஸ்வரனிடம் முறையிடுகிறாள்.
'என்ன..சைவத்தலைமைபீடத்தில்..பிணந்திண்ணும் பிள்ளையா.?'என வெகுண்டு...'அப்பனே..நீ..இனி இங்கிருப்பது தகாது..உடனே பூலோகம் செல்..அங்கே ஊர் ஊராக கூடி கொடை கண்டு அசைவம் படைப்பர்...உண்டு களித்து உணவளித்தவர்களை காத்தருள்க'என்க..'பூலோகத்தில் பலர் படைக்கலாம்..ஆனால் எனது தாய்தந்தை கையால் சாப்பிட்ட திருப்தியோடு செல்ல நினைக்கிறேன்..அய்யனே..எமக்கு கோட்டைச்சோறு..சூலி ஆடு..மாடு..பன்றி..எருமை..பலஜீவராசிகள் எட்டாத பரண் அமைத்து பலியாக தந்தால்...மனமகிழ்ந்து செல்வேன்'என்கிறார் சுடலை.
சைவக்கடவுளும் சகித்துக்கொண்டு சகல வித அசைவ விருந்து படைக்க..அதில் திருப்திப்படாத சுடலை 'எங்கேயப்பா...எல்லா ரத்தசுவையும் கண்டேன்..மனிதரத்த சுவைகாணோமே' என்கிறார்..அதிர்ந்த சிவனோ..திருமாலிடமும் பிரம்மனிடமும் கண்ணசைக்க அவர்கள் பெண்கள் வேடம் தரித்து கணியன்களாக மகுடம் இசைத்து ஆட அதில் லயித்த நேரத்தில் தங்களது கைகளைக்கீறி ரத்தத்துளிகளை சோற்றில் விட்டு ஊட்ட...நரபலியிட்டு ரத்தச்சோறு ஊட்டியதாக நம்பி சுடலை பூலோகம் செல்ல ஒப்புக்கொள்கிறார்.
'சுடலை மாடா..நீ பூலோகத்தில் சகல பேய்களையும் அடக்கியாளும்...சக்தி பெற்றாய்..உனக்கு படையலிட்டு பூசிப்பவராக இருப்பினும் உமது எல்லையில் அநியாயக்காரர்களை அடக்கி அழித்தும்...நிரபராதிகளை காத்து ரச்சித்தும் வா'என அறிவுரை கூறி ஏளானமான பரிவாரங்களோடு அனுப்பினார் சிவன்.அப்படியே சுடலை மாடன் வழிபாடு உருவானதாக வரலாறு.
இக்கோவிலில் வைகாசி மாதத்தில் கொடைவிழா நடைபெறுகிறது.
கால்நாட்டப்பட்டவுடன் பீடங்களில் வாழைமட்டை சணல் ஒருவிதமாவு...சரிகை தாள்கள்...பொய்நகைகள் கொண்டு..தெய்வ ரூபங்களை கட்டமைக்கிறார்கள்.முழு உருவமைப்பில் ஒவ்வொரு தெய்வங்களும் நேரில் தோன்றியதுபோல பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்துகின்றன.
கொடை அன்று அதிகாலை சிவனனைந்த பெருமானுக்கான ஆராதனையில் தொடங்கும்.ஒவ்வொரு பரிவாரதெய்வங்களுக்கும் அராதனை நடக்க..மதியக்கொடை..முப்புலிமாடன் என்கிற கிராம தெய்வத்துக்கானது.இந்த ஊரிலேயே ஐந்தாறு தலைமுறைகளுக்கு முன்பு வாழ்ந்த..முப்புலிதேவன் என்கிற இளைஞன் அப்போதைய ஜமீந்தாரிடம் தலையாரியாக இருந்துள்ளார்.பண்ணை நிலங்களில் ஒருபன்றி தொடர்ந்து அழிமானம் செய்துவர..அதை அடக்கும் வழியற்று தலையாரி திகைக்க..அப்போது..தலையாரிக்கு பெண்பார்த்து நிச்சயம் செய்திருப்பதை சுட்டிக்காட்டி ..'ஒரு பன்றியை கொல்ல துப்பில்லாத உமக்கு முரட்டு மீசை ஒரு கேடா..கல்யாணம் ஒரு கேடா என கேட்க..ஆக்ரோஷத்தோடு கிளம்பி அந்த பன்றியை பத்துகிலோமீட்டர் விரட்டிச்சென்று...அதைக்கொன்று தானும் உயிர் விடுகிறார்.பன்றியாக உருவெடுத்து அழிமானம் செய்தது சுடலை தான் என்பதும் தமக்கு கொடை வேண்டியே அதை உணர்த்தவே பன்றியாக மாறி பயிர்களை நாசம் செய்ததும் ஜமீனுக்கு தெரியவர..ஏராளான பொருட்செலவில் முப்புலிமாடருக்கும் சிலை நிறுவி...கொடைநடத்தினாராம்.இப்போதும் முப்புலிமாட வம்சாவழிகள் சாமிக்கொண்டாடிகளாக..மதியக்கொடையின் போது சலங்கைகட்டிய கால்களோடு தாளமிட்டு சுற்றிவந்து..நேர்த்திக்கடன் பன்றியை ஈட்டியால் குத்தும் பாவணைகாட்டி மூர்ச்சை ஆகி விழுவதும்...முப்புலித்தேவரின் உடலைக்கொண்டுவந்தபோது..உடல் துள்ளிவிழுந்த இடத்தில் ஒரு கிணறு அமைக்கப்பட்டதாம்..இப்போதும் இக்கிணற்றில் நீர் உள்ளது..அக்கிணற்றில் மூர்ச்சை ஆன சாமிக்கொண்டாடியை நெட்டுக்குத்தாக தூக்கி வீச..அவர் தானாகவே சுயநினைவுதிரும்பி மேல்ஏறிவருவதும் மெய்சிலிர்க்கும் காட்சிகள்.
வழக்கமான வில்லிசை நிகழ்ச்சி...வாத்தியமுழக்கம்..சம்பிரதாய படையல்கள் என நீளும் விழாவின் உச்சம்..இரவு ஒருமணிக்கு சுடலை வேட்டைக்கு செல்வதில் ஆரம்பிக்கும்.
சுடலை வேட்டைக்கு சென்று திரும்பியதும் பரண் ஏறி..தனது பரிவாரங்களோடு ஆடு..பன்றிகளை பலிஎடுப்பார்..கொப்பளிக்கும் ரத்தத்தில் வாழைப்பழங்களை பிசைந்து அருளாளர்கள் சாப்பிடுவர்.
பின் ஆராதனைகள்...ஒவ்வொரு தெய்வங்கள் முன்பும் அசைவ படையல்..ஆடு கோழி பலிகள் ஆலயத்திற்கு உள்ளேயே நடைபெற்று..படைப்புச்சோறும்..விபூதியும் பகிழ்ந்தளிக்க கொடைவிழா விடியற்காலையில் நிறைவு பெறும்.பெரியசுடலையின் அருள் பெற்று அன்பர்கள் இல்லம் திரும்புவார்கள்.*
-------------------
*அரும்பூர்.க.குமாரகுரு,மயிலாடுதுறை.*