சில கோவில்களுக்கு வரும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் அடுத்தமுறை வரும்போது, கோவிலில் மணி கட்டுவதாக வேண்டிக் கொள்வது உண்டு.
🌟 இந்த நம்பிக்கை சபரிமலையை பொறுத்தவரை மிகவும் பிரபலமானது. மூன்றாம் ஆண்டு சபரிமலைக்கு செல்லும்போது ஐயப்பமார்கள் மணியை எடுத்து செல்வார்கள்.
🌟 மேலும் மூன்றாவது யாத்திரை மிகவும் புனிதமாக கருதப்படுவதற்கு காரணம், அப்போது தான் ஒரு மனிதன் முழுநிலையை அடைகிறான் என்பதே ஆகும்.
🌟 ஐயப்பனின் கருணை இருந்தால் மட்டுமே ஒருவரால் மூன்றாவது யாத்திரையை பூர்த்தி செய்ய முடியும். இதை சந்திரனின் மூன்றாம் பிறையை காண்பதற்கு ஒப்பாக சொல்லலாம்.
🌟 இந்த மூன்றாம் பிறை அன்று சந்திர தரிசனம் செய்வது, ஐயப்பனை பொன்னம்பலமேட்டில் ஜோதி ஸ்வரூபத்தில் காண்பதற்கு இணையாகும். அந்த வகையில், மூன்றாவது யாத்திரை மிகவும் முக்கியமானது.
🌟 அதேபோல் மூன்றாவது முறையாக சபரிமலைக்கு செல்பவர்களை மணிகண்டன் என்று அழைப்பார்கள். இது அந்தந்த குழுவினரை சார்ந்ததே தவிர கட்டாயம் கிடையாது.
சபரிமலை பக்தர்களின் முப்பெரும் தத்துவங்கள்...!!
🌟 கார்த்திகை மாதம் மாலை அணிந்து மார்கழியில் அதாவது 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப சன்னதிக்கு பக்தர்கள் செல்கின்றனர். அவ்வாறு மாலை அணிந்து சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்யும் பக்தர்கள் முப்பெரும் தத்துவங்களின் ஓர் உருவமாக திகழ்கிறார்கள்.
🌟 சபரிமலை பக்தர்களின் முப்பெரும் தத்துவங்களாக விளங்குவது அத்வைதம், துவைதம் மற்றும் விசிஷ்டாத்வைதம் ஆகும். அதில் அத்வைதம் என்பது தானே பிரம்மம் என்பதாகும். விசிஷ்டாத்வைதம் என்பது ஜீவன் வேறு, பிரம்மம் வேறு என்பதாகும். துவைதம் என்பது பிரம்மமும், ஜீவனும் வேறு என்றாலும் ஒரு நிலையில் அவைகள் ஒன்றுபடுகின்றன என்பதாகும்.
🌟 மாலை அணிந்து விரதம் தொடங்கிய நாளிலிருந்து ஐயப்பமார்கள் அத்வைத தத்துவப்படி தானே கடவுளாக திகழ்கிறார்கள். அவர்களை அனைவரும் சுவாமி என்று அழைத்து சரணம் கூறுகின்றோம்.
🌟 அடுத்து, விரதம் முடித்து சபரிமலை ஐயப்ப தரிசனத்திற்கு செல்லும் நேரத்தில் ஜீவன் வேறு, பிரம்மம் வேறு. முயற்சித்தால் ஜீவன், பிரம்மனை காணலாம் என்று விசிஷ்டாத்தை தத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர்.
🌟 சுவாமி ஐயப்பனை கண்டு அவனருளில் சங்கமிக்கும் நேரத்தில் பிரம்மமும், ஜீவனும் வேறென்றாலும் ஒரு நிலையில் அவைகள் ஒன்றுபடுகின்றன என்ற துவைத தத்துவத்திற்கு உதாரணமாய் திகழ்கின்றனர். இப்படி அர்த்தமுள்ள முப்பெரும் தத்துவங்களின் உருவாக திகழ்பவர்கள் தான் ஸ்ரீஐயப்ப பக்தர்கள்.
ஐயப்பனின் தவக்கோல தரிசனம்...!!
🙏 சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனின் மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதம் மாலை அணிந்து மார்கழியில் அதாவது 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப சன்னதிக்கு பக்தர்கள் செல்கின்றனர்.
🙏 ஐயப்பன் நமக்காக சபரிமலையில் தவம் இருக்கிறார். தனது மூன்று விரல்களை நீட்டி, ஆட்காட்டி விரலால் பெருவிரலை தொட்டுக்கொண்டு சின்முத்திரை காட்டுகிறார். 'சித்" என்றால் அறிவு எனப் பொருள். இந்த வார்த்தையே காலப்போக்கில் மருவி 'சின்" என மாறியது. எது உண்மையான அறிவு என்பதை விளக்குவதுதான் இந்த 'சின்" முத்திரையாகும்.
🙏 'சின்" முத்திரையுடன் தியான கோலத்தில் உள்ள ஐயப்பனை கண்குளிர தரிசிப்பதால் பிறவி பயனை அடைந்த சந்தோஷம் கிடைக்கும்.
🙏 ஒவ்வொரு மாதமும் நடை மூடப்படும்போது ஹரிவராசனம் பாடிவிட்டு, கிலோ கணக்கில் பசுமையான விபூதியை ஐயப்பன் மேல் சாற்றுவார்கள். அந்த விபூதி, 'தவக்கோல விபூதி" என்று அழைக்கப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த விபூதி பிரசாதத்தை நெற்றியில் தரித்து, சிறிது உட்கொண்டால் நோய் குணமடையும் என்பது நம்பிக்கை.
🙏 அத்துடன் ஐயப்பனின் 'சின்" முத்திரையின் மேல் ஒரு ருத்ராட்ச மாலையை போடுவார்கள். இதற்கு தவக்கோலம் என்று பெயர்.
🙏 அப்போது ஒரு விளக்கையும் ஏற்றி வைப்பார்கள். அந்த விளக்கானது மீண்டும் அடுத்த மாதம் நடை திறக்கப்படும் வரை எரிந்து கொண்டே இருக்கும். இந்த அதிசயம் தவறாமல் சபரிமலையில் அரங்கேறுகிறது. கோயில் கதவு திறந்து உலகத்தின் பார்வை அந்த கோயிலுக்குள் நுழைந்ததும், ஐயப்பனின் தவக்கோலம் கலைந்து விடுகிறது.
🙏 அடுத்த நிமிடமே அந்த விளக்கும் அணைந்து விடுகிறது. 'சின்" முத்திரையின் மேல் போடப்பட்ட ருத்ராட்ச மாலையும் கை மாறி இருக்கும். இந்த அதிசயத்தை காண கண்கோடி வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும்.
ஐயப்ப பக்தர்கள் சரண கோஷத்தை உரத்த குரலில் எழுப்புவது ஏன்?
🙏 ஐயப்பனின் திருநாமங்களை சொல்லும்போது கவனம் திசை திரும்பாது. அந்த ஒலி அலைகள் அந்த இடம் முழுக்க பரவி பக்தி அதிர்வை ஏற்படுத்தும். இது வீட்டில் இருப்பவர்கள் மற்ற சிந்தனைகளுடனோ அல்லது வேறு பேச்சுக்களிலோ இருந்தால்கூட அவர்களது கவனமும் ஐயப்பனை பற்றிய எண்ணத்தில் திரும்பும்.
ஐயப்ப பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும்போது சொல்ல வேண்டிய ஐயப்ப ஸ்லோகம் :
இதம் ஆஜ்யம், கமமண்டல
கால மகரகால பரஹமசியவ்ர
தேன ஹரிஹர புத்ர தர்ம
சாஸ்த்ர பிமஷதர்த்தம் பூரயாகி
பொருள் :
🙏 ஐயப்ப சுவாமியே! மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும் சாமிமார்களான நாங்கள் அறிந்தும், அறியாமலும் ஏதாவது தவறு செய்திருந்தால் அதை மன்னித்து, பதினெட்டு படிகளையும் ஏறச்செய்து, நல்ல தரிசனத்தை அளிக்க வேண்டும்.
யாரை குருசாமி என்று அழைக்கிறோம்?
💫 சபரிமலைக்கு யாத்திரை சென்று தரிசனம் செய்வதாலும், அங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடுவதாலும் அனைத்து பாவங்களும் நீங்கி, கோடி புண்ணியம் கிடைக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
💫 கார்த்திகை மாதத்தில் தான் ஐயப்ப பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்ல தயாராவார்கள். அவ்வாறு சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் யாரை குருசாமி என்று அழைக்க வேண்டும்? மற்றும் இருமுடி கட்டும் முறையை குறித்து
யாரை குருசாமி என்று அழைக்கிறோம்?
💫 சபரிமலைக்கு 18 முறைக்கு மேல் சென்று வந்தவர்கள் குருசாமி என்ற தகுதியை பெறுகிறார்கள். 18ஆம் வருடம் சபரிமலை யாத்திரை என்பது நாம் செய்த கோடி புண்ணியத்திற்கு சமமாகும். ஒரே ஆண்டில் பதினெட்டு முறை சென்றுவிட்டு வந்தால் அவர்களை குருசாமி என கூற முடியாது.
💫 18 ஆண்டுகள் மகரவிளக்கு அல்லது மண்டல பூஜைக்கு கட்டு கட்டி, 48 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை விரதமிருந்து சென்று வருபவர்களே குருசாமியாக முடியும்.
💫 18ஆம் வருடம் சபரிமலை யாத்திரையின்போது சிறிய தென்னங்கன்று ஒன்றை எடுத்து செல்வார்கள். இதை கண்டதும் குருசாமி என்று மற்ற சாமிமார்கள் ஆசி வாங்குவார்கள். இதனால் தான் 18ஆம் வருடம் சபரிமலை யாத்திரையை புனித யாத்திரை என்றும் அழைக்கின்றனர்.
💫 இந்த குருசாமி என்பவர்கள் தங்கள் கையால் மற்ற ஐயப்பமார்களுக்கு மாலை அணிவிக்கலாம்.
இருமுடி கட்டும் முறை :
💫 நீலம், காவி அல்லது கருப்பு நிற இருமுடியில் பூஜை பொருட்களை குருசாமி முன்னிலையில் நிரப்ப வேண்டும்.
💫 இருமுடியை இரண்டு பகுதியாக பிரித்து முன்முடியில் தேங்காய், பச்சரிசி, வாழைப்பழம், அவல், பொரி, சந்தனம், பத்தி, விபூதி, குங்குமம், மஞ்சள்பொடி, வெல்லம், கற்கண்டு மற்றும் உண்டியல் காசு ஆகியவற்றை வைக்க வேண்டும்.
💫 பின்முடியில் தனக்கு தேவையான உணவு பொருட்களை வைத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை இந்த இருமுடியை தலையில் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.
கற்பூர தீபம் :
💫 ஐயப்பனை கற்பூர தீபப்பிரியன் என்பர். சபரிமலை யாத்திரையின்போது அங்கு தங்கியிருக்கும் நாட்களில் மாலை நேரத்தில் கற்பூரம் ஏற்றி சரண கோஷம் ஒலித்து ஐயப்பனை வழிபட வேண்டும்.
ஐயப்ப பக்தர்களை சனிபகவான் சங்கடப்படுத்தமாட்டார் ஏன் தெரியுமா?
சனீஸ்வரருக்கு பிடித்த நிறம் கருப்பு நிறமாகும். அதனால் தான் சனி கிரகத்தால் ஏற்படும் சங்கடங்களில் இருந்து தன்னுடைய பக்தர்களை காத்தருளவே கருப்பு நிற ஆடையை அணிவதற்கு உத்தரவிட்டிருக்கிறார் சபரிமலை ஐயப்பன்.
பொதுவாக சனீஸ்வர பகவான் என்றாலே, கடவுள் நம்பிக்கை உள்ள அனைவரின் முகத்திலும் ஒருவிதமான பக்தியும், பயமும் ஏற்படும். இதற்கும் ஐயப்ப பக்தர்கள் கருப்பு நிற ஆடை அணிவதற்கும் என்ன தொடர்பு உள்ளது?
சனிபகவானும், ஐயப்பனும் :
ஒரு சமயம் சனீஸ்வர பகவான் ஐயப்ப பக்தர் ஒருவரை பிடிப்பதற்காக சென்றபோது, வழியில் மடக்கிய தர்மசாஸ்தாவான ஐயப்பன், என் பக்தர்களை ஏன் தண்டிக்கிறீர்கள்? அவருக்கு கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா? என்று சனீஸ்வர பகவானை பார்த்து கேட்டார்.
அதற்கு சனீஸ்வரர் எனக்கு ஏழை, பணக்காரர். கடவுள் பக்தி உள்ளவர், இல்லாதவர் என்ற பாகுபாடே கிடையாது. ஏழரை சனியின் காலம் வரும் நேரத்தில் பாரபட்சம் இல்லாமல் பிடிப்பேன். அது தான் என்னுடைய தர்மம் என்று பதிலளித்தார்.
ஏழரை சனியின் காலத்தில் சனிபகவான் கொடுக்கும் தண்டனை :
சனீஸ்வர பகவான் ஐயப்பனை பார்த்து, ஒருவருடைய ஏழரை சனியின் காலத்தில் விதவிதமான உணவுகளையும், பழங்களையும் உண்டு மகிழ்ந்தவரை சோற்றுக்கே வழியின்றி அலைய வைப்பேன்.
மலர்கள் தூவிய கட்டிலில் ஆடம்பரமாக உறங்கி திளைத்தவரை கட்டாந்தரையிலும், பாறையிலும் உறங்க வைப்பேன்.
என்னதான் அன்யோன்யமான தம்பதிகளாக இருந்தாலும் கூட, என்னுடைய பார்வை பட்டாலே இருவரும் பிரிந்து விடுவார்கள்.
கட்டிக்கொள்ள ஒழுங்கான உடைகள் கிடைக்காமல், தலைக்கு எண்ணெய் இல்லாமல், காலுக்கு காலணி இல்லாமல், பன்னீரிலேயே குளித்து திளைத்தவர்களை தண்ணீருக்காக அலைய வைப்பேன்.
இதையெல்லாம் நீங்கள் எப்படி ஒரு மண்டலத்திலேயே தண்டனையாக கொடுக்க முடியும்? என்று கேட்டார்.
ஐயப்பனின் பதில் :
அதற்கு புன்முறுவலுடன் பதிலளித்த தர்மசாஸ்தாவான ஐயப்ப சுவாமி, கவலைப்படாதீர்கள். நீங்கள் குறிப்பிட்ட அனைத்து தண்டனைகளையும் அளிப்பேன் கேளுங்கள் என்றார்.
என்னுடைய பக்தர்கள் மண்டல விரத காலத்தில் மிகவும் எளிமையாக ஒருவேளை உணவையே உண்டு திருப்தியடைவார்கள். வெறும் தரையிலேயே படுத்துறங்குவார்கள். கடுமையான பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடித்து அதிகாலையிலும், மாலையிலும் குளிர்ந்த நீரிலேயே நீராடுவார்கள்.
அதோடு, உமக்கு பிடித்த கருப்பு ஆடைகளையே என்னுடைய பக்தர்களை உடுத்த செய்து, காலணிகளை அணிய விடாமல், முடியை திருத்திக்கொள்ளாமல், என்னுடைய அணிகலனான துளசி மணி மாலையை அணிந்து கொண்டு, சுக துக்கங்களில் கலந்துக்கொள்ளாமல் ஒதுங்கி இருக்கச் செய்து, அனைவராலும் சுவாமி என்றே அழைக்க செய்வேன் என்றார்.
சனிபகவான் சங்கடப்படுத்தமாட்டார் ஏன் தெரியுமா?
ஐயப்பன் கூறிய விரத முறைகளை பக்தி பெருக்குடன் ஏற்றுக்கொண்ட சனீஸ்வர பகவான், அன்றிலிருந்து இன்று வரையிலும், ஐயப்ப பக்தர்களிடம் தன்னுடைய பார்வையை செலுத்தாமல் நன்மையை மட்டுமே அளித்து வருகிறார்.
இப்படி சனீஸ்வர பகவானின் பார்வையிலிருந்து தன்னுடைய பக்தர்களை காப்பதற்கே, சனீஸ்வர பகவான் கூறிய தண்டனைகளை கடுமையான விரத முறைகளாக பக்தர்களுக்கு வகுத்து கொடுத்துள்ளார் ஐயப்பன்.
சபரிமலை ஐயப்பனை தரிசித்து அவரின் அருளாசியை பெற்று நன்மை பெறுவது அனைவருக்குமே நல்லது.
சபரிமலையின் ஏழு அம்சங்கள்..!
கார்த்திகை மாதத்தில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். எனவே கார்த்திகை மாதம் மாலை அணிந்து சபரிமலைக்கு பக்தர்கள் செல்கின்றனர்.
சபரிமலை :
பதினெட்டு மலைகள் சூழ்ந்த நிலையில் சபரிமலை சுயம்புவாக எழுந்து அனைத்து மலைகளையும்விட உயர்ந்து காணப்படுகிறது. இங்கு ஒவ்வொரு வருடமும் மகர சங்கராந்தி புனித நாளில் பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி உருவாய் காட்சியளிப்பார்.
பம்பை :
பம்பை நதிக்கரையில் முனிவர்கள், குடில்கள் அமைத்து யாகம் செய்ததாக புராண வரலாறு கூறுகிறது. அதனால் இது மகாயாகம் நடந்த யாக பூமியாகும். இன்றும் ஐயப்ப பக்தர்கள் இங்கு யாக பூஜை செய்து வருகின்றனர்.
மகிஷன் :
ரம்பாசுரனின் மகனாக பிறந்த மகிஷன் தவம் மேற்கொண்டு, பிரம்மனிடம் அரிய பல வரங்களை பெற்றான். அதனால் விளைந்த ஆணவத்தால் தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் பராசக்தியை வேண்டினர். பராசக்தி, மகிஷனிடம் போர் புரிந்து அவனை வதைத்தாள். அதனால் பக்திமார்க்க தர்மயுத்தம் நடந்த பலிபூமியானது.
ராம, லட்சுமணன் :
ராமபிரானும், லட்சுமணனும் தேவியை தேடி கானகத்தில் அலைந்தனர். அப்போது மதங்க மாமுனிவர் ஆசிரமம் தென்படவே அங்கு சென்றார்கள். அவரது குடிலில் இருந்த நீலி என்ற பெண் ராம, லட்சுமணர்களை வரவேற்று, தான் அங்கு முனிவருக்கு பணிவிடை செய்வதாகவும், தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவள் என்றும் கூறினாள். ராமபிரான், மனிதர்கள் எல்லோரும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். இதில் உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்ற பாகுபாடில்லை. உன்னை போற்றி புகழும் நிலையை உனக்கு அளிக்கிறேன் என்று சொல்லி அந்த பெண்ணை அழகான அருவியாக மாற்றி புனிதம் பெற அருள்புரிந்தார். மாறிய அந்த பெண் பம்பா நதியாக பாய்ந்து தட்சிண கங்கை என்று சிறப்பு பெயர் பெற்றாள்.
ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரி :
ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரியை பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் தவமிருந்து வழிபட்டபோது, அவர்களின் முன் தேவி தோன்றி என்ன வரம் வேண்டும்? என்று கேட்டாள். தங்களின் விஸ்வரூப தரிசனத்தை என்று கேட்க உடனே தேவி விஸ்வரூப தரிசனம் தந்தாள். தேவி தன்னுடைய இதயத்தில் ஒரு லட்சம் இதழ்கள் கொண்ட தாமரை பூவில் ஒரு சக்தியை வைத்து கொண்டிருந்தாள். அந்த சக்திதான் மகாசாஸ்தா.
இதனை கண்ட சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் ஏக காலத்தில் இந்த மகாசாஸ்தா தங்களுக்கு குழந்தையாக பிறக்க வேண்டுமென்று மனதிற்குள் நினைத்தார்கள். அவர்கள் நினைத்ததை புரிந்து கொண்ட தேவி, ஆசி புரிந்தாள். தேவி அருளிய வரத்தின்படி சிவனுக்கும், மோகினி அவதாரம் எடுத்து வந்த விஷ்ணுவுக்கும் ஹரிஹர அம்சமாக அவதரித்தார் சாஸ்தா.
பம்பா உற்சவம் :
ஐயப்பன், மகிஷனின் சகோதரியான மகிஷியை வதம் செய்தார். இதனால் தேவர்களால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட தவ பூமியானது. இந்த பம்பை நதிக்கரையில் மகரவிளக்கு பூஜைக்கு முன்னர் விளக்கு உற்சவம் நடைபெறும். இதற்கு பம்பா உற்சவம் என்று பெயர்.
சபரி :
ராமாயண காலத்தில், சபரி என்ற பெண் ராமபிரானை சந்திக்கும் பாக்கியம் பெற்றாள். அவள், ராமபிரானுக்கு சுவையுள்ள பழங்களை கொடுத்து உபசரித்தாள். அவள் இப்பகுதியில்தான் வசித்தாள் என்பர். மேலும் பல ரிஷிகள் பம்பை நதிக்கரையோரம் தவமிருந்ததால் இத்தலம் யோக பூமியாகவும், யோகிகள் வாழ்ந்த தபோ பூமியாகவும் போற்றப்படுகிறது.
Thanks and regards
A s Govinda rajan
17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai