எங்கள் ஊர் சிங்கம்புணரி சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது சிவகங்கையிலிருந்து 57 கி.மீ. தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 50 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து 58 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
இது 8.40 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 70 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது
மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை வட்டார வழக்குகள் கலந்த இவ்வூர் கிராமியத்தோடு கூடிய நகரமாக விளங்குகிறது.விவசாயம் முதல் தொழிலாகவும், பனையும் தென்னையும் சார்ந்த தொழில்கள் பணத் தொழில்களாகவும் விளங்குகின்றன. நிலக்கடலை அதிகம் விளைவதால் எங்கள் ஊரில் எண்ணெய் ஆலைகள் மிகுதியாக உண்டு. சிங்கம்புணரிக்கு நெடிய இலக்கிய வரலாறு உண்டு. இவ்வூரின் பெருமையைச் சிங்காபுரிப் பள்ளு என்னும் இலக்கியம் தெளிவுற விளக்குகிறது. ஸ்ரீசேவுகமூர்த்தி ஐயனார் கோயில், ஸ்ரீ சித்தர் முத்துவடுகேசர் கோயில் ஆகியன இங்கு புகழ் மிக்கவையாகும்.
இங்கு கயிறு அதாவது கொச்சை கயிறு மிகவும் பிரபலம் .அது இங்கு தான் தயாரிக்கப் படுகிறது. தென்னை மட்டையில் இருந்து நார் எடுத்து அதிலிருந்து இந்த கயிறு தயாரிக்கப்படுகிறது. இதனை பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறார்கள். இதனை நம்பி இங்கு பல குடும்பங்கள் வாழ்கின்றன.
அடுத்து இங்கு(Madras Foregings Ltd , Tamilnadu Gears, kannan industrials என பல மோட்டார் சம்பந்தப்பட்ட உதிரி பாகங்கள் தயாரிக்கக் கூடிய தொழிற்சாலைகளும் உள்ளன.
இங்கு முன் Enfiled என்ற ஒரு புல்லட் பேக்டரியும் இருந்தது.
எங்கள் சிங்கம்புணரியில் சேவுகமூர்த்தி அய்யனார் கோவில் மிகவும் பிரபலம். இங்கு வைகாசித் திருவிழா 10 நாள் நடக்கும் . அனைத்து தினங்களும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் அதிலூம் 9ம் திருவிழா அன்று தேர்த்திருவிழா நடக்கும். 10ம் திருவிழா அன்று பூப்பல்லாக்கு நடக்கும். அன்று 3 பாட்டுக்கச்சேரி 3 ஆடல்பாடல், என திருவிழா ஜெக ஜோதியாய் இருக்கும்.
பக்கத்து ஊரில் சிவபெருமான் ஆலயம் உள்ளது . மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஆலயம்.
இங்கிருந்து 8 கி.மீ தொலைவில் பிரான்மலை உள்ளது. இங்கு மலை ஏறலாம் மலை மீது மங்கை பாகர் கோவில் உண்டு. மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தான் முல்லைக்கு தேர் கொடுத்தார் பாரி.
அடுத்து 30 கி.மீ தொலைவில் வேட்டங்குடி என்ற இடத்தில் பறவைகள் சரணாலயம் உள்ளது.
அடுத்து 30 கி.மீ தொலைவில் அய்யனார் அருவி உள்ளது. எந்நேரமும் அருவியில் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கும்.
அடுத்து 30 கி.மீ தொலைவில் கரந்தமலை அருவி உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற அருவி.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் உருவாகும் உப்பாறு பல்வேறு ஊர்களை கடந்து சிங்கம்புணரியில் பட்டகோவில்களம் அருகே பாலாற்றுடன் கலக்கிறது.
இந்த ஆண்டு உப்பாற்றில் தண்ணீர் வரத்தொடங்கியுள்ளது. ஏற்கனவே பாலாற்றில் இரண்டாவது முறையாக தண்ணீர் வரும் நிலையில் உப்பாற்று தண்ணீரும் கலந்து ஓடுவதால் நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி நிலத்தடி நீர் மட்டம் உயரத்தொடங்கியுள்ளது.
சிங்கம்புணரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 12–வது வார்டு தவிர மற்ற அனைத்து வார்டுகளிலும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம் , சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். சிங்கம்புணரி வட்டத்தில் உள்ள சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம் முப்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. சிங்கம்புணரியில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது.
எங்கள் சிங்கம்புணரியில் சைவமும் வைணவமும் சங்கமிக்கும் சேவுகப் பெருமாள் அய்யனார் திருக்கோவில் உள்ளது.சுமார் 16 ஏக்கர் பரப்பில் இக்கோவில் அமைந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறது. பண்டைய சோழ பாண்டிய நாடுகளின் எல்லை நகரமாக விளங்கிய சிங்கம்புணரியில் அமைந்துள்ள இக்கோவிலில் சைவமும், வைணவமும் சங்கமிக்கும் சிறப்பு பெற்றதாகவும் உள்ளது. இப்பகுதியில் நடந்த சோழ, பாண்டிய போருக்கு பின்னர் கி.பி. 13-ம் நூற்றாண்டில் மன்னர் கூன்பாண்டியன் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. சுமார் 16 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இக்கோவிலில் சிங்கம்பிடாரி அம்மன், சேவுகப்பெருமாள் அய்யனார், தான் தோன்றீசுவரர், அடைக்கலம் காத்த அய்யனார், கன்னி மூல கணபதி, முருகர், நவக்கிரகங்களுக்கு தனி கருவறைகளும், தனி விமானங்களும் அமைந்துள்ளது.
இங்குள்ள மும்மூர்த்திக்கு சேவுகப்பெருமாள், சேவுகமூர்த்தி, சேவுகராயன், சேவுகராசன், சேவுகன், சேதுபதி என பல்வேறு திருநாமங்களில் போற்றப்பட்டு வருகிறார். அரிஹர புத்திரராக விளங்கும் இந்த சேவுகமூர்த்தியின் பெயரில் வைணவ திருநாமமான பெருமாள் என்னும் பெயர் கொண்ட போதிலும் சைவ கடவுளாகவே போற்றப்பட்டு வருகிறார்.
தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு இங்குள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் நடைபெறும் வைகாசி திருவிழா 10 நாட்கள் பிரமோற்சவத்துடன் சிறப்பாக நடைபெறும். விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 5-வது நாள் திருவிழாவில் நடக்கும் திருக்கல்யாண உற்சவமும், 6-வது நாள் திருவிழாவின் போது நடைபெறும் கழுவன் திருவிழாவும், 9-ம் நாள் நடைபெறும் தேர்த்திருவிழாவும், 10-ம் நாள் நடைபெறும் பூப்பல்லக்கு உற்சவமும் இக்கோவிலுக்கு மட்டுமல்ல சிங்கம்புணரி நகருக்கும் பெருமை சேர்க்கும் விழாவாக நடைபெற்று வருகிறது.
அதிலும் தேர்த்திருவிழா அன்று சுற்று வட்டார 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து ஒற்றுமையுடன் கலந்துகொண்டு வடம் பிடிக்கும் அழகே தனிதான். குறிப்பாக தேர் நிலையை வந்தடைந்ததும் லட்சக்கணக்கான தேங்காய்களை தேரடி படிக்கட்டுகளில் பக்தர்கள் வீசி எறிந்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் இக்கோவிலில் நடைபெறும் மற்றொரு மணிமகுட விழாவாக இருந்து வருகிறது.தேர்நிலைக்கு வந்ததும் தேங்காய் உடைப்பது வழக்கம். ஆனால் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயிலில் லட்சக்கணக்கான தேங்காய்களை உடைப்பது எங்கும் காண இயலாத அதிசயம். இப்பகுதி மக்கள் இக்கோவில் திருவிழா நாட்களில் தங்கள் வீட்டு விசேஷங்கள் எதுவும் நடத்த மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோவிலுக்கு பக்தர்கள் மாடுகளை காணிக்கையாக நேர்ந்து விடுவது பல ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வருகிறது.சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் ஏதும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்தால் இந்த கோவில் காளைகளுக்குதான் முதல் மரியாதை செலுத்தப்படுவது இன்று வரை வழக்கத்தில் இருந்து வருகிறது.
முத்து வடுகநாத சித்தர் என்பவர் சிங்கம்புணரியில் ஜீவ சமாதியடைந்த சித்தராவார். இவரைப் பட்டூர் வாத்தியார், வடுகநாத சித்தர் என்றும் அழைக்கின்றனர். இவருடைய ஜீவ சமாதியில் உள்ள சிலை, மனிதர்களுக்குப் போல வியர்க்கிறது என்ற நம்பிக்கை நிலவுகிறது.
முத்து வடுகநாதர்இளவதிலேயே சித்து வேலைகளை செய்து மக்களிடம் வியப்பினை ஏற்படுத்தினார். பட்டூர் குருகுலத்தில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். பட்டூர் அருகேயுள்ள சிங்கம்புணரியில் சூனியக்கார கூட்டமொன்று மற்ற பரிவாரத் தெய்வங்களையும், ஊர் தெய்வங்களையும் கட்டிப்போட்டு மக்களைத் துன்புறுத்தினர். அதனையறிந்த முத்து வடுகநாதர், மாந்திரீக சித்திகளில் வென்று மக்களைக் காத்தார்.
முத்துவடுக நாதர் தாம் சமாதியாகும் நாளை முன்னதாகவே அறிவித்தார். எங்கு சமாதி ஆக வேண்டும் என இடத்தைத் தேர்ந்தெடுத்து சமாதியை தயார் செய்துள்ளார். சமாதியில் வைக்க தன்னுடைய கற்சிலையை செய்து அதற்குப் பூசைகள் செய்துள்ளார்.
அவர் கூறியபடியே 1883-ம் ஆண்டு ஆடி மாதம் ரோஹினி நட்சத்திரத்தில், சமாதியடைந்தார். அவருடைய சமாதியில் பீடம் அமைத்து அவரது சிலையை வைத்துள்ளனர். அவர் பூசித்த வராகி அம்மன் சிலையை இடதுபக்கம் வைத்துள்ளனர்.
சித்தர் வாழ்ந்த வீட்டில் அமைந்திருக்கும் பூஜையறை அவர் வாழ்ந்த காலத்தில் இருந்தது போலவே அப்படியே பராமரிக்கப்பட்டு வருகிறது. அவர் உபயோகித்த பொருள்களான பாதரட்சைகள்,கைத்தடி போன்றவையும் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன.
சித்தர் முத்துவடுகநாதர் பக்தியுடன் வரும் அனைத்து மக்களின் பிரச்னைகளையும் தீர்த்து வைக்கிறார். குழந்தை வரம் வேண்டுவோர், வியாபாரத்தில் நலிவுற்றோர், மாந்திரீகத்தால் அல்லல் படுவோர் என அனைவருக்கும் சித்தரை வேண்டிக் கொள்ளுதல் நல்ல தீர்வாக அமைகிறது. பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்களைப் பார்க்க நேர்ந்தாலோ, அவற்றை கொன்று விட்டாலோ முட்டையும் பாலும் வாங்கி சித்தருக்கு செலுத்துகிறார்கள். அந்த விஷப்பிராணிகளால் மேலும் இடையூறு நேராமல் சித்தர் காப்பாற்றுவார் என்பது இந்த ஊர் மக்களின் நம்பிக்கையாக உள்ளது. சித்தரின் உருவப்படம் இருக்கும் இடத்தில் விஷப்பிராணிகள் வராது எனவும் கூறுகின்றனர்.
எங்கள் சிங்கம்புணரியில் 19ஆம் நூற்றாண்டை சேர்ந்த நொண்டிக் கருப்பர் திருக்கோயில் வல்லடியான் திருக்கோயில் உள்ளன.
சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலை நடிகர் சிவகார்த்திகேயனின் தாயாரின் சொந்த ஊராகும். நடிகர் சிவகார்த்திகேயன் சிங்கம்புணரியில் உள்ள தனியார் மருத்துவமனையில்தான் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.