[10:07, 02/11/2024] Tamilnadu Epaper: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் இருக்கும் ஓர் பேரூராட்சி எங்கள் சின்னாளப்பட்டி ஆகும்.
சின்னாளப்பட்டி கிழக்கில் சிறுமலை மேற்கில் மேற்கு தொடர்ச்சி மலை என மலை சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள பேருராட்சி....
திண்டுக்கல் மதுரை வழி தேசிய நெடுஞ்சாலையில் அருகே சின்னாளப்பட்டி நகரம் அமைந்துள்ளதால் எவ்வூரிலிருந்து வந்தாலும், எந்நேரமும் பேருந்து வசதியுடைய ஊர்....
சேலைப்புகழ் சின்னாளப்பட்டி என்று பல திரைப்படங்களிலும் இடம் பெற்ற ஊர்.
சின்னாளப்பட்டியில் கண்டாங்கி எடுத்து என் கையாலே கட்டி விடவா என்று திரைப்படப் பாடல் புகழ் பெற்ற ஊர்
கைத்தறி துணி வகைகள், அசல்பட்டு, செயற்கை பட்டு, கோரா சில்க், காட்டன் சேலைகள், சுங்கிடி சேலைகள் உற்பத்தி கூடங்கள், மொத்த வியாபாரம் நிறுவனங்கள் நிறைய உள்ளது.
சூரத் ஜவுளிரகங்கள் மொத்தம் & சில்லறை வியாபாரம்.
ஸ்கிரீன் பிரிண்டிங் பட்டறைகள் நிறைந்த ஊர் . பிரிண்டிங் தொழில்நுட்பம் நிறைந்துள்ள ஊர்.
பவர் லூம் தறி கூடங்கள் உள்ள ஊர்.
குடிநீர்க்கு ஆத்தூர் அணை, வைகை அணை (கூட்டு குடிநீர் திட்டம்)
காவல் நிலையம்,
சார்பதிவாளர் அலுவலகம்,
தொலைபேசி நிலையம்,
மின்சார செயற்பொறியாளர் அலுவலகம்,
வேளாண்மை விரிவாக்க மையம், பலபள்ளிகள், அரசு துவக்கப்பள்ளி, அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளி , தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள்,அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் பல உள்ளது.
தினசரி மார்க்கெட்,
காந்திகிராம பல்கலைகழகம்,
கஸ்தூரிபா மருத்துவமனை,
தனியார் மருத்துவமனைகள்,
மருந்தகங்கள்,
ருசியுடன் கூடிய உணவு வகைகள், ஹோட்டல்கள்,
தியேட்டர்கள்,
பேருந்து நிலையம்,
அம்பாத்துறை ரயில் நிலையம்,
பல திருமண மண்டபம்,
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,
பல்வேறு வணிக கடைகள்.
என அனைத்து வசதிகொண்ட ஊர் ஆகும்....
திண்டுக்கல் மாவட்டத்தின் மிக முக்கிய ஊராக இன்னும் சின்னாளப்பட்டி திகழ்கிறது.
ஆத்தூர் தொகுதியிலேயே அதிக வாக்காளர் கொண்ட ஊர் சின்னாளப்பட்டி .
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 26,227 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 4.5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும் கொண்டது. திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த சின்னாளப்பட்டி பேரூராட்சி, ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. புகழ் பெற்ற சுங்குடி சேலைகள் சின்னாளப்பட்டியில் நெய்யப்படுகின்றன. காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் வளாகம் இவ்வூரின் அருகாமையில் உள்ளது.
வாடிப்பட்டி மாதா கோயில், ஆத்தூர் காமராஜர் அணை, சிறுமலை மலைதொடர், குத்தாலம்பட்டி நீர் வீழ்ச்சி, அதிசயம் தீம் பார்க் போன்ற பல சுற்றுலா இடங்கள் இதன் அருகாமையில் உள்ளன. இங்கு நடத்தப்படும் அழகர் திருவிழா மக்கள் கூட்டத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.
சின்னாளப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான இந்த கைத்தறி பூங்காவில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 70 கைத்தறிகள் நிறுவப்பட்டுள்ளன.
சின்னாளபட்டி அருகே ஆத்தூரிலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது காமராஜர் சாகர் நீர்த்தேக்கம் அணை.
இந்த அணை திண்டுக்கல் மற்றும் பல கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் இடமாகவும் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் நீர் வந்து சேரும் இடமாக உள்ளது.
ஆத்தூர் காமராஜர் அணையில் நீரின் சுவை மிக அருமையானது.
இதன் அணை கட்டப்பட்ட ஆண்டு 1955. இதன் முழு கொள்ளாளவு 23 அடி ஆகும்.
ஒருமுறை அணை நிரம்பினால் ஒரு வருடத்திற்கு சுற்றுவட்டாரத்தில் தண்ணீர் பிரச்சனை இருக்காது.
இதன் அருகே சடையாண்டி கோவில், மற்றும் மலையின் மீது கோவில் உள்ளது.ஆடி அமாவாசை அன்று சுற்றுவட்டார மக்கள் திருவிழாவிற்கு வருகை தருவார்கள்.
மலை மீது நடத்து சென்று அங்குள்ள கோயிலில் கடவுளை தரிசனம் செய்வார்கள்.
. அருகே தென்னை தோப்பு உள்ளதால் உணவு சமைக்க சாப்பிட அருமையான இடமாக அமைந்துள்ளது.
அணையில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் தங்கும் வசதியுடன் விடுதிகள் உள்ளன.பல வெளிநாட்டினர் இயற்கை சூழ்நிலை காரணமாக அதிகமாக வருகின்றனர்.
மற்றும் சிறிது தொலைவில் நீர்வீழ்ச்சி இங்கு உண்டு.
சுற்றுவட்டார மக்களுக்கு இந்த அணை நல்ல சுற்றுலா தலமாக விளங்குகிறது.
இதன் கொள்ளளவு 23 அடியிலிருந்து 26 அடியாக உயர்த்த திண்டுக்கல் மாநகராட்சி முயற்சி என தகவலும் உண்டு.
சின்னாளபட்டி சாலையில் உள்ள கரியகவுண்டன் குளம் நாளடைவில் மருவி கரியன் குளமாக அழைக்கப்படுகிறது. சிறுமலையில் உருவாகும் வரத்து நீர் தொப்பம்பட்டி கண்மாய் வழியே இங்கு வந்தடைகிறது. இங்கு தேங்கும் தண்ணீர் அம்பாத்துறை ஊராட்சி, சின்னாளபட்டி பேரூராட்சி பகுதியில் 15 கிலோமீட்டர் சுற்றளவு பகுதிகளின் நிலத்தடி நீர் ஆதாரமாகும்.
சின்னாளப்பட்டி சுங்குடி சேலை என்பது சின்னாளப்பட்டியில் தயாரிக்கப்படும் சேலை ரகமாகும்.பிரபலமாக சின்னல பட்டு என்றும் அழைக்கப்படுகிறது.
இவ்வூரில் சுங்குடி புடவைகள் பாரம்பரிய வழியில் செய்யப்படுகின்றன.
தென்னிந்தியாவில் சின்னாளப்பட்டு புடவைகள் நன்கு அறியப்பட்டவையாக உள்ளன.
தற்பொழுது சேலை பயன்பாடு குறைத்து இருப்பதால், சின்னாளப்பட்டி நெசவாளர்கள் சுங்குடி சுடிதர்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சுங்குடி சேலை தயாரிப்புக்காக வெள்ளை நிற சேலைகளாகவும் பல்வேறு இடங்களில் இருந்து வரவழைக்கப்படுகின்றன. இந்த வெள்ளை நிற சேலைகளில் மெழுகை நன்கு காய்ச்சி நூற்றுக்கும் மேற்பட்ட வித விதமான கட்டையச்சுகளை பயன்படுத்தி பல்வேறு வடிவங்களை அச்சடித்து தயார் செய்கின்றனர். பின்னர் மெழுகுபூச்சு வேலை முடிந்து, பல்வேறு வடிவங்களைக் கொண்ட வண்ண வண்ணமான அச்சுக்களை பதிக்கின்றனர்.
இவ்வாறு அச்சடிக்கப்படும் சுங்குடி சேலைகளில், அச்சு வேலை முடிந்த பின்பு, ஜவ்வரிசியை கொண்டு நன்கு காய்ச்சிய கஞ்சியை சேலையில் முழுவதுமாக நனைத்து உலர காய வைக்கின்றனர்.
சின்னாளபட்டியில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட சுங்குடிச் சேலை தயாரிப்பு நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்தச் சேலைகள், இயந்திரங்களின்றி 90 சதவீதம் கைகளினால் தயாரிக்கப்படுகின்றன. இச்சேலைகள் தயாரிக்க வேறொரு முறையில் காட்டன் துணிகளை பண்டல்களாக திருப்பூர், கோயம்புத்தூர் பகுதிகளில் உள்ள நூற்பாலைகளிலிருந்தும் வாங்குகின்றனர். இதில் சேலை அளவுக்கு வெட்டி எடுக்கப்பட்ட துணியில் சாயம் ஏற்றுகின்றனர்.சாயம் ஏற்றும் முறையிலும் முழுமையாக சாயம் ஏற்றுவது, பார்டர்களை விட்டு விட்டு முடிச்சுப்போட்டு சாயம் ஏற்றுவது என பலவகைகள் உள்ளன. சாயம் ஏற்றிய சேலைகளைக் காயவைத்த பிறகு பிரின்ட்டிங் செய்கின்றனர். கம்ப்யூட்டர் மூலம் பல விதமான டிசைன்களை உருவாக்கி, கைகளிலேயே சேலைகளில் அச்சுகளை வைத்து ஸ்கிரீன் பிரின்ட்டிங் செய்கின்றனர்இதைத் தொடர்ந்து, சேலைகள் முடமுடப்பாக இருக்க பிளீச்சிங் செய்கின்றனர். ஜவ்வரிசியை காய்ச்சி அந்த நீரில் சேலையை நனைத்து எடுத்துக் காயவைக்கின்றனர். பின்னர், சேலையை இஸ்திரி செய்து விற்பனைக்குத் தயார் செய்கின்றனர். பல்வேறு டிசைன்களில் முதியவர்கள் முதல் இளம் பெண்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் சுங்குடிச் சேலைகள் உற்பத்தி சின்னாளபட்டியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
எங்கள் சின்னாளப்பட்டியில் புகழ்பெற்ற சுப்பிரமணியசுவாமி ஆலயம் உள்ளது.
கோயிலின் மகா மண்டபத்தில் உலகம் உய்ய திருக்கோலம் கொண்டவனாக முருகக் கடவுள் நான்கு முகங்களுடன் சதுர்முக முருகனாக மயில் மீது அமர்ந்து தென் திசை நோக்கி காட்சியளிக்கிறார். தென்திசை பார்த்து அமைந்துள்ள சதுர்முக முருகனுக்காக எதிரே கோயிலின் முன்புற ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
வைகாசி விசாகம், ஐப்பசி மாத கந்த சஷ்டி 6 நாட்கள்திருக்கல்யாணம், சூரசம்ஹாரம் உள்ளிட்ட விழாக்கள், ஆடி கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், மாதாந்தோறும் பூசம், கார்த்திகை, மிருகசீரிஷ நட்சத்திர மற்றும் அமாவாசை, பவுர்ணமி சிறப்பு பூஜைகள்.
இது தவிரபிரதோஷம், கிருத்திகை, சஷ்டி, வளர்பிறை அஷ்டமி பைரவர் பூஜை யாவும் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.
இத்திருத்தலத்திற்கு வந்து சதுர்முக முருகனை வழிபட்டால் திருமணத்தடை, குழந்தை இல்லாத குறைகள் போன்ற சங்கடங்களை தீர்த்து வைப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இத்தலத்து முருகனை வழிபட்டால், செவ்வாய்தோஷம் தீரும் என்பது நம்பிக்கை.
சின்னாளப்பட்டியில் அமைந்திருக்கிறது விஸ்வரூப ஆஞ்சநேயர் திருக்கோயில், இங்கு 16 அடி உயரத்தில் அஞ்சலி ஹஸ்த்ராக பிரமாண்டமாகக் காட்சியருள்கிறார் அனுமன்.
விஸ்வரூப ஆஞ்சநேயர் 16 செல்வத்தையும் கொடுக்கக் கூடியவர் என்பதால் 16 அடி உயரத்தில் இங்கே காட்சி கொடுக்கிறார். ராமாயணத்தில் சஞ்சீவி மலையெனும் மூலிகை மலையை எடுத்துச் சென்றபோது சிறு கணம் அனுமன் பாதம் பதித்த இடமாக இந்தப் பகுதி கூறப்படுகிறது. சஞ்சீவி மலையின் சிறுபகுதி விழுந்து உருவான மலைதான் அருகில் இருக்கும் சிறுமலை என்கிறார்கள் மக்கள். இந்தப் பகுதியில் வீசும் மூலிகைக் காற்று மேனியில் பட்டால் சர்வ பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
- SANMUGASUNDAR .S
KOVAI