பட்டு மழவராயர் என்ற சிற்றரசர் ஆண்ட இவ்வூர் பட்டு மழவராயன் கோட்டை என்ற பெயர் மருவி பட்டுக்கோட்டை ஆனது.இவ்வூருக்கு அருகில் மழவராயன் கோட்டை என்ற ஊரும் உள்ளது.
சிற்றரசர் ஆண்ட ஊர் என்பதற்கு சாட்சியாக இன்றளவும் கோட்டை சிவன் கோவில் , கோட்டை பெருமாள் கோவில் , கோட்டைக் குளம் , கோட்டைத் தெரு போன்ற பெயர்கள் உள்ளன.
ஒரு நாள் சிற்றரசர் வேட்டைக்குச் சென்ற பொழுது , அவருக்கு முன்பாக ஒரு பெண் தோன்றி , அவரை இங்கும் அங்குமாக அலைக்கழித்து , கடைசியில் ஒரு புதரில் ஓடி ஒளிந்திருக்கிறாள்.
சேவகர்களைஅந்தப் புதரில் தேடிப் பார்க்கச் சொன்ன பொழுது , ஒரு அழகான அம்மன் சிலை மட்டும் கிடைத்ததாம்.
மன்னர் அந்த இடத்திலேயே ஒரு கோவில் கட்டி , அந்த சிலையை ஸ்தாபிதம் செய்தாராம். அந்தக் கோவில் தான் தற்பொழுது பிரபலமாக விளங்கும் ஸ்ரீ நாடியம்மன் கோவில். 400 ஆண்டு கால பழமை வாய்ந்தது.
கர்ப்பகிரத்திலுள்ள ஸ்ரீ நாடியம்மன் வடக்கு நோக்கி சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். நான்கு கைகளில் கத்தி , சூலம் ,
கேடயம் , கபாலம் தாங்கியுள்ளார்.கோவிலில் விநாயகர் , நாகர் ,
வீரன் ஆகிய பரிவார மூர்த்தங்கள் உள்ளனர்.ஸ்தல விருக்ஷம் நாகலிங்க மரம். கோவிலுக்கு வெளியே குதிரை வாகனம் சுதை வடிவில் உள்ளன.
பங்குனி மாதத்தில் திருவிழா நடக்கும் சமயத்தில் நெல் குத்துவது , அசைவ உணவு சாப்பிடுவது கிடையாது.
உற்சவத்தில் ஆறாம் நாள் அம்பாள் இந்திர விமானத்தில், வெள்ளி சிம்ம வாகனத்தில் , வரகரிசி மாலைகள் அணிந்து, அமர்ந்த கோலத்தில் பவனி வருவாள்.வரகரிசி சரங்கள் ரதத்தில் நாலாபுறமும் தொங்க , மின் விளக்குகள் ஜோடனையுடன் ரதம் வருவதைக் காண கண் கோடி வேண்டும்.
மண்டபத்திலிருந்து கிளம்பி அம்பாள் ஊர்வலம் வரும் பொழுது , செட்டித் தெருவில் ,ஒரு குறிப்பிட்ட வீட்டின் முன்பு உயரமாகப் பந்தல் போட்டிருப்பார்கள்.அங்கு அம்பாள் ரதம் வந்து நின்றவுடன் பொம்மை அம்பாளுக்கு மாலை போடும் நிகழ்ச்சி நடைபெறும்.
பொம்மை கையில் மாலை இருக்கும். பொம்மையைக் கட்டியிருக்கும் கயிறை மெதுவாக அவிழ்ப்பார்கள்.பொம்மை அம்பாள் அருகில் வரும் பொழுது ,அர்ச்சகர் மாலையை எடுக்க முயற்சிப்பார்.பொம்மையின் கயிறைப் பிடித்திருப்பவர் விருட்டென்று கயிறை மேலே இழுப்பார்.இம்மாதிரி மூன்று தடவைகள் நடக்கும்.கடைசியில் பொம்மை கை மாலையை அர்ச்சகர் எடுக்க வசதியாக அவர் அருகில் பொம்மை வரும். அந்த மாலையை வாங்கி அம்பாளுக்கு அணிவித்து தீபாராதனை காட்டுவார்கள்.அதன் பின் ரதம் நகரும்.இந்த வைபவம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடக்கும்.
மேலும் வெண்ணைத்தாழி அலங்காரம், அம்பாளுக்கு மாவிளக்குப் போடுதல் , தேரோட்டம் , மறுநாள் அம்பாள் முத்துப் பல்லக்கில் பவனி வந்து கோட்டைக்கு எழுந்தருளுவார்.
ஸ்ரீ நாடியம்மனை வேண்டினால் திருமணத் தடை நீங்கும்.பிள்ளைப்பேறு கிட்டும்.மிகவும் வரப்ரஸாதி.ஆடி வெள்ளி , தை வெள்ளி மிகவும் விசேஷமான நாட்களாகும்.ஊர் எல்லையில் வீற்றிருக்கும் காவல் தெய்வம் இவர்.
இவ்வூரில் பிறக்கும் குழந்தைகளுக்கு , ஆணாக இருந்தால் நாடிமுத்து என்றும் பெண்ணாக இருந்தால் நாடியம்மா ,நாடியம்மை என்று பெயர் வைப்பது வழக்கம்.பல வியாபார ஸ்தாபனங்களின் பெயர்ப் பலகைகள் ஸ்ரீ நாடியம்மன் என்ற பெயருடன் காணப்படும்.
பட்டுக்கோட்டையைச் சுற்றி நான்கு புறங்களிலும் பசுமையான வயல்களைக் காணலாம்.சி.எம்.பி.வாய்க்கால் ( காவேரி மேட்டூர் பிராஜக்ட் கெனால் ) விவசாயத்திற்குத் தேவையான நீர்ப்பாசனத்திற்கு பெருமளவு உதவுகிறது.
இவ்வூருக்குப் பெருமை சேர்த்த பிரபலங்கள் சிலரைப் பற்றிப் பார்க்கலாம்.
இவ்வூரில் பிறந்தவர் ; சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்று சிறைவாசம் அனுபவித்தவர் ; முதலில் எம்.பி. , பிறகு மாநில அமைச்சர் , பிற்காலத்தில் மத்திய அமைச்சராகப் பலதுறைகளில் பணியாற்றியவர்.பின்பு உதவி ஜனாதிபதியாகி , இறுதியில் நமது நாட்டின் மிக உயர்ந்த பதவியான இந்திய ஜனாதிபதியாகப் பதவி வகித்த திரு.ஆர். வெங்கட்ராமன் அவர்கள் எங்கள் ஊருக்குப் பெருமை சேர்த்தவர்களில் முதன்மையானவர்.
அ.தி.மு.க.வில் அமைச்சர்களாக இருந்த இரா.நெடுஞ்செழியன் , எஸ்.டி.சோமசுந்தரம் , இரா.செழியன் , திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அஞ்சாநெஞ்சன் அழகிரி , தஞ்சாவூர் ஜில்லா போர்டு பிரசிடெண்ட் ஆக இருந்தவரும் பிற்காலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஆக இருந்த முக்கியப் பிரமுகர் வி.நாடிமுத்துப் பிள்ளை , எஸ். வெங்கட்ராம அய்யர் எம்.எல்.ஏ ஆகியவர்களால் பட்டுக்கோட்டைக்கு கூடுதல் பெருமை சேர்ந்தது.
காவிரி நதி நீர்ப் பங்கீடு பிரச்னையை முதன்முதலில் டிரிப்யூனலுக்கு கொண்டு சென்ற ஆண்டிக்காடு கிருஷ்ணமூர்த்தி அய்யர் மற்றும் சென்னை உயர்நீதி மன்றத்தில் அட்வகேட் ஜெனரலாகப் பணியாற்றிய கே.சுப்ரமணியன் ஆகியோர் பட்டுக்கோட்டைக்காரர்களே.
சேலம் , மதுரை , சிவகங்கை ,நாகப்பட்டணம் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக சிறப்பாகப்
பணியாற்றியவரும் பிறகு பதவி உயர்வு பெற்று ஹேண்ட்லூம் & டெக்ஸ்டைல்ஸ் துறையின் தலைவர் மற்றும் இயக்குனராகவும் செயலாற்றி ஓய்வு பெற்ற திரு .சேது.ராமச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.அவர்கள் இந்த ஊர்க்காரர்.
பூமிதான இயக்கத் தலைவர் வினோபா பாவே எங்கள் ஊருக்கு விஜயம் செய்தார்.அவர் எழுதிய , ஒரு ரூபாய் விலையுள்ள கீதைப் பேருரைகள் என்ற புத்தகத்தில் மட்டும் கையெழுத்துப் போடுவார் என்று சொன்னார்கள்.நானும் அவரிடம் கையெழுத்து வாங்கினேன் .
திரைப்படத்துறையில் இசை அமைப்பாளர் ஜி.ராமநாதன் , கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , மோகன் வைத்யா ,ராஜேஷ் வைத்யா சகோதரர்கள் , பழம் பெரும் ஹாஸ்ய நடிகர் டி.எஸ். துரைராஜ் ( எங்கள் வீட்டிற்கு வெகு அருகில் தான் இவர் வீடு. என் அக்காவும் துரைராஜின் தங்கையும் கிளாஸ்மேட்ஸ் ) சில சமயம் என்.எஸ்.கிருஷ்ணனும் அவருடன் சேர்ந்து வருவார்.தற்பொழுது விஜயகுமார் , சென்ற ஆண்டில் காலமான சிவநாராயணமூர்த்தி மற்றும் ராஜேஷ் (எங்கள் ஊர் மாப்பிள்ளை ). எம்.கே.தியாகராஜ பாகவதர் இரண்டு தடவைகள் இவ்வூரில் கச்சேரிகள் செய்துள்ளார் .
எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகர் , பட்டுக்கோட்டை ராஜா , காலம் சென்ற பட்டுக்கோட்டை ராஜேஷ் , பட்டுக்கோட்டை ரவி ,அ.இ.வானொலி திருச்சி நிலயத்தில் நாடக ஆசிரியாக இருந்த குமாரவேல் , அதில் இயக்குனராக பணியாற்றிய சௌந்தரராஜன் மற்றும் புதுமைக்குரல் என்ற பத்திரிகையை நடத்திய அன்பு வேதாசலம் போன்றவர்களை பத்திரிகை உலகிற்குத் தந்து புகழ் பெற்றது எங்கள் ஊர்.
திங்கட்கிழமை தோறும் வாரச் சந்தை நடக்கும்.ஒருபுறம் மாட்டுச் சந்தை ( இதில் ஆடு , கோழி , சேவல் உள்பட அடக்கம்),
காய்கறிச் சந்தை ஒரு பக்கம் , கல் பட்டறையில் கருங்கல் தூண்கள் , கல் பலகைகள் , ஆட்டுக்கல் , அம்மி , கல் உரல் இவை தினமும் கிடைக்கும்.
வேறொரு பக்கம் மூங்கில் , சவுக்குக் கழிகள் , தென்னை , பனைமர சாத்துகள் , மா , பலா மரப் பலகைகள் ,சவுக்குக் கன்றுகள் என்று வியாபாரம் களை கட்டியிருக்கும்.
இவ்வூரில் பலாப்பழம் நிறையக் கிடைக்கும். பலா , பூவரசு மரத்தினால் தயாரிக்கப்பட்ட அப்பளக் குழவிகள் மிகவும் பிரசித்தம்.டிமாண்ட் அதிகம்.ஆனால் தற்பொழுது குழவிகள் கிடைப்பதில்லை.
அரசு ஆண்கள் , பெண்கள் பள்ளிகள் தனித்தனியாக உள்ளன.தற்பொழுது ஆண்கள் பள்ளியில் பெண்களும் படிக்கிறார்கள் என்றும் , இந்த வருடம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாட இருப்பதாகவும் நண்பர் ஒருவர் தெரிவித்தார். பாலிடெக்னிக் & கலைக் கல்லூரி உள்ளன.
பெரிய கடைத் தெரு முனையில் , தஞ்சை சாலையில் ஸ்ரீ வெங்கிடு சுப்பையா ஸ்வாமிகளின் அதிஷ்டானம் உள்ளது .இங்கு தினசரி பூஜைகள் உண்டு.ஆண்டு தோறும் குரு பூஜை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.ஸ்வாமிகள் பலரின் நீண்ட கால நோய்களைக் குணப்படுத்தியிருக்கிறார்.
இவ்வூர் மக்களின் கோரிக்கை , தேவை அறுபது ஆண்டுகளாகியும் இன்றளவும் நிறைவேறாமல் உள்ளது .அது தான் பட்டுக்கோட்டை --தஞ்சாவூர் இடையே ரயில் பாதை அமைத்து , ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்துவது.
-------------------------
வி.வெங்கட்ராமன்
செகந்திராபாத்
---------------------------