வருகிற ஆகஸ்ட் 22 அன்று சென்னை தன்னுடைய 385 வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. சென்னை குறித்த சில அரிய வரலாற்று செய்திகளின் தொகுப்பு இது.
*1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் நாள் ஆங்கிலேய கிழக்கின் கம்பெனியின் தலைவர் ஆன Fransis Day என்பவருக்கு விஜயநகர சாம்ராஜ்யத்தின் கீழ் வந்தவாசியை ஆண்ட வெங்கடுகிரி நாயக்கர் என்பவர் சிறிய அளவில் கோட்டை ஒன்றைக் கட்டிக்கொள்ள வழங்கிய இடமே இன்றைய சென்னையாக வளர்ந்துள்ளது.
*Madra என அழைக்கப்பட்ட ஒரு போர்த்துகீசிய செல்வந்தர் குடும்பம் 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டில் சாந்தோம் பகுதியை வசித்தது. இந்த 'மதரா'குடும்பம் மயிலாப்பூரில் உள்ள செயிண்ட் லாசரஸ் மாதா கோயிலை புதுப்பித்து கட்டியது.1927-ல் இங்கு கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்லறை கல்வெட்டில் இந்த மாதா கோயிலை 1637-ல் மதரா குடும்பத்தினர் கட்டினார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குடும்பத்தினரின் பெயரால்தான் மதராஸ் என்ற பெயர் வழங்கப்பட்டது.
*போர்த்துகீசியரும் பிரிட்டிஷாரும் வந்த பிறகுதான் மதராஸ் என்ற சொல் புழக்கத்திற்கு வந்தது அதற்கு முன்பு மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, எழும்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் என கிராமங்களின் பெயர்களாலே இப்பகுதிகள் அழைக்கப்பட்டன.
*பிரான்சிஸ் டே என்பவரால் மேற்கண்ட சிறிய இடம் வாங்கப்பட்டதற்கு முன்பு அந்த இடத்தின் தெற்கு பகுதி சென்னப்பட்டணம் என்ற பெயரிலும் வடக்கு பகுதி மதராசாப்பட்டணம் என்றும் அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர் இடம் வாங்குவதற்கு முன்பே வெங்கடாத்திரியும் அவரது சகோதரர் அய்யப்பாவும் ஒரு சிறு நகரத்தை உருவாக்கி அதற்கு தங்கள் தந்தை பெயர் சென்னப்பாவின் பெயரை சூட்டினர். இதுவே சென்னப்பட்டணம் என்ற பெயர் உருவாக காரணமாயிற்று.
*1871-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சென்னையின் மக்கள் தொகை 3,97, 852. 1931 மக்கள் தொகை 6,47,232 .
* 1640 பிப்ரவரி 20-ல் Eagle,Unity என்ற பெயருடைய இரண்டு கப்பல்களில் 25 போர் வீரர்கள், எழுதுபவர்கள், ஒரு அறுவை சிகிச்சை நிபுணர், ஒரு தச்சர்,ஒரு பீரங்கி சுடுபவன், உலோக வேலை செய்பவர்கள் வந்தனர். இவர்கள் அனைவரும் ஆங்கிலேயரும் போர்த்துகீசியருமாக ஐரோப்பியர்களாகவே இருந்தனர். துப்பாக்கி மருந்து செய்பவரான நாகபட்டன் என்பவர் மட்டும் இந்தியர். இந்த வருகையை இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உருவாவதற்கு அடிகல்லாக திகழ்ந்தது.
*இவர்கள் முதலில் சென்னையில் 100 கஜம் நீளமும் 100 கஜம் அகலமும் கொண்ட சுற்றுச்சுவரை எழுப்பினர் அதனுள் ஒரு கிடங்கையும் 15 குடிசை வீடுகளையும் கட்டினர்.
*கோட்டை வளாகத்தினுள் Fort House என்னும் கவர்னரின் குடியிருப்பு முதன் முதலில் கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். மேற்கூரை குடை போன்ற அமைப்பு உடைய இது இப்போது இல்லை. கோட்டை வளாகத்திற்குள் ஆங்கிலேய போர்த்துகீசிய வணிகர்கள் வாழ்ந்தனர். இது ஒயிட் டவுன் என அழைக்கப்பட்டது. கோட்டையின் வழியே தெற்கு பகுதியில் கைவினைஞர்கள், வியாபாரிகள்,சலைவைத் தொழிலாளர்கள் வசித்தனர்.இது பிளாக் டவுன் என அழைக்கப்பட்டது.1674-ல் கோட்டைக்குள்ளே 118 வீடுகளும் கோட்டைக்கு வெளியே பிளாக் டவுனில் 75 வீடுகளும் இருந்தன.
*இந்தியாவின் முதல் புரேடெஸ்டன்ட் சர்ச் 1680 (அல்லது 1678)'ல் கோட்டைக்குள் கட்டப்பட்டது.
*பழைய Fort House 1690களில் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டது இங்குதான் இப்போது தமிழக அரசின் செயலகமும் சட்டசபையும் இயங்குகிறது.
*17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளேயும் வெளியேயும் பல கிராமங்கள் இணைத்துக் கொண்டு வளர்ந்தது.1710 ஆம் ஆண்டின் ஒரு வரைபடத்தில் ஒரு காசு தயாரிக்கும் தொழிற்சாலை (மின்ட்), ஒரு மருத்துவமனை, ஒரு பண்டக காப்பகம மற்றும் ஒரு டவுன்ஹால் (புனித மேரி ஆலயத்திற்கு அடுத்து)
ஆகியவைகள் இடம் பெற்றுள்ளன.
இன்று காணப்படும் புனித ஜார்ஜ் கோட்டை 1756லிருந்து 1763 வரை 42 ஏக்கர் பரப்பில் 6000 தொழிலாளர்களால் ரூ77,00,000 செலவில் கட்டப்பட்டது.
*1639-ல் உருவான சென்னை கொல்கத்தா, மும்பையைவிட. பழமையான நகராகும். கொல்கத்தா 1689 ஆம் ஆண்டிலும் மும்பை ஆயிரத்து 1669 ஆம் ஆண்டிலும் உருவாயின.
*சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு தெருவின் பெயர் கொலைகாரன் பேட்டை. கோலப்பொடி விற்ப்பவன் கோலக்காரன் என அழைக்கப்பட்டான். இதுவே கொலைகாரன் பேட்டை என மருவியது. இப்பகுதியில் வாழ்ந்த வைஷ்ணவர்கள் குலசேகர ஆழ்வாரை போற்றும் வகையில் சூட்டிய குலசேகரன் பேட்டை என்ற பெயரை கொலைகாரன் பேட்டை ஆனது என்பாரும் உண்டு.
இப் பகுதியில் சாராய குடோன் வீதி என்ற பெயரில் ஒரு வீதி இருந்தது. இது இப்போது கங்கை அம்மன் கோயில் வீதி என அழைக்கப்படுகிறது. கள்ளுகாரன் பேட்டை என்ற பெயரை கொலைகாரன் பேட்டையாகிவிட்டதாக கருதுவோரும் உண்டு.
*சென்னையின் பழமையான பகுதியான வில்லிவாக்கத்தில் வில்லேந்தி வேட்டைக்காரர்கள் அதிகம் வசித்ததால் வில்லிவாக்கம் என்ற பெயரினைப் பெற்றது. வியாசர்பாடியில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை பௌத்த கோயில் ஒன்று இருந்தது. பீகாரில் வைசாலி என்ற இடத்தில்தான் புத்தர் தன் கடைசி பிரசங்கத்தை நிகழ்த்தினார் அதன் நினைவாக வைசாலி பாடி(ஊர்)என்பதே வியாசர் பாடியாக மாறியது.
* 2014 நிலவரப்படி சென்னை மீஞ்சூரில் இருந்து சோழிங்கநல்லூர் வரை 1777 சதுர கிலோமீட்டர்களாக பரந்துள்ளது. இதில் 426 சதுர கிலோமீட்டர் சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ளது. 2011 வரை 176 சதுர கிலோமீட்டர் ஆக திகழ்ந்த சென்னை மாநகராட்சியில் 9 நகராட்சிகள் 8 நகர பஞ்சாயத்துகள் 25 கிராம பஞ்சாயத்துகள் உள்ளடக்கிய 42 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்ட ன.
* 1944-ல் ஜெ.பி.எல். ஷெனாய் என்பவர் சென்னை மாநகராட்சியின் ஆணையராக இருந்தார். இவர் அமிஞ்சிகரை அருகே புதிய குடியிருப்பை நிறுவ ஆர்வம் காட்டினார். இவருக்குப் பின் ஆணையராக பதவி ஏற்ற
சி. நரசிம்மன் இந்த குடியிருப்பு பகுதிக்கு ஷெனாய் நகர் என பெயர் சூட்டினார்.
*மயிலாப்பூர் ஏரியிலிருந்து 70 ஏக்கர் பரப்பளவு நிலத்தை ஆர்ஜிதம் செய்து 1920 களில் குடியிருப்பு பகுதியாக அமைக்கப்பட்டதே தியாகராய நகர். சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சர் ஆன பனகல் ராஜாவின் பெயர் இங்குள்ள பூங்காவிற்கு சூட்டப்பட்டது. நீதிக்கட்சி தலைவர் சர். பிட்டி தியாகராய செட்டி பெயராலே இப்படி இக்குடியிருப்பு தியாகராய நகர் என அழைக்கப்பட்டது.
*1687-92 கவரனராக இருந்த Elihu Yale என்பவரால் எழும்பூர் புரசைவாக்கம் தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகள் வருடாந்திர வாடகைக்கு முகலாய சக்கரவர்த்தி ஔரங்கசீப்பின் பிரதிநிதியான சுலபிகார் கான்
என்பவரிடமிருந்து பெறப்பட்டது.
*1970களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் 5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நடுவக்கரை, முல்லம் கிராமங்களில் கட்டப்பட்டதுதான் அண்ணா நகர், அசோக் நகர்,
கே.கே. நகர் ஆகியவை ஆகும்
*1941-ல் 7.77 லட்சமாக இருந்த சென்னை மக்கள் தொகை 1951-ல்
14.14 லட்சமாக திகழ்ந்தது. இந்த காலகட்டத்திற்கு பிறகு 19 சதுர மைல் பரப்பளவு கொண்ட 24 நகரங்களும் பஞ்சாயத்துக்களும் சென்னை நகர் எல்லைக்குள் இணைக்கப்பட்டன இது மொத்த பரப்பளவில் 65
சதவீதமாகும் .இப்படி இணைக்கப்பட்ட பகுதிகளில் அடையாறு கிண்டி,சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், அயனாவரம் ஆகியவை முக்கியமானவ.
*இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரி, முதல் மருத்துவமனை, முதல் மாநகராட்சி, முதல் மேற்கத்திய பாணி பள்ளிக்கூடம், இந்திய ராணுவத்தின் முதல் ரெஜிமென்ட் மற்றும் மாபெரும் Trigonometrical Survey ஆகியவை சென்னையில் துவக்கப்பட்டாலும் சீதோஷ்ண நிலை காரணமாகவும் கப்பல் தங்குவதற்கு பாதுகாப்பான வசதி இல்லாததாலும் வர்த்தக வாய்ப்புகள் குறைவாக இருந்ததாலும் முகலாய சக்கரவர்த்திகள் வடக்கில் இருந்ததாலும் கொல்கத்தாவைப்போல் சென்னை ஆங்கிலேயரை அதிகம் கவரவில்லை.
க.ரவீந்திரன்
22 பிள்ளை
யார் கோயில் வீதி
சாஸ்திரி நகர்
ஈரோடு 638002