உலக அரங்கில் ஒட்டு மொத்த தமிழனையும் தமிழகத்தையும் தலை நிமிர வைத்த பெருமை நமது தமிழ் வேதமாம் திருக்குறளைச் சாரும். அதற்கு அடுத்து
தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடை மொழியாகும்
அன்பே அவனுடை வழியாக
அறிவின் கடலைக் கடைந்தவனாம்
என்ற நாமக்கல் கவிஞரின் கூற்றுப்படி அப்துல் கலாம் என்ற மாபெரும் மனிதன் தமிழனின் பெருமையை நிலை நாட்டினார் என்றால் மிகை அல்ல.
அப்படி ப் பட்ட அந்த மகத்தான மனிதர் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ஒரு நடுத்தர குடும்பத்தில் ஜைனுலாப்தீன்- ஆயிஷா தம்பதியினருக்கு மகனாக இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் தனது ஆரம்ப கால பள்ளி படிப்பை இராமேஸ்வரத்தில் உள்ள தொடக்க பள்ளியில் பயின்றார்.
அப்துல் கலாமின் தந்தை ஜைனுலாபுதீன் ராமேஸ்வரத்திற்கு வருகின்ற பக்தர்களை தனுஷ்கோடிக்கு அழைத்துச் செல்லும் படகுகளை சொந்தமாக வைத்து தொழில் நடத்தினார். பூர்வீகத்தில் மிகவும் செல்வந்த குடும்பமாக இருந்தாலும் அப்துல்கலாம் அவர்கள் பிறக்கின்ற சமயம் அவர்களின் குடும்பம் மிகுந்த வறுமை நிலையை அடைந்திருந்தது. குடும்பத்தின் வறுமை நிலையைப் போக்க அப்துல் கலாம் அவர்கள் தனது பள்ளி நேரம் முடிந்து பகுதி நேரத்தில் செய்தித்தாள்களை விற்பனை செய்து வருமானம் ஈட்டி தனது குடும்பத்திற்கு உதவியாக இருந்தார்.
இராமேஸ்வரத்தில் அதுவும் குறிப்பாக அவர் குடியிருந்த பகுதியில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை, அவர் வெளியில் படிக்க சென்ற இடத்திலும் சரி, பணிபுரிந்த இடத்திலும் சரி, எங்கும் காணவில்லை என்று மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார்.
அதுமாத்திரமல்ல, இராமேஸ்வரம் ஆரம்பப் பள்ளியில் அவர் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இஸ்லாமின் அடையாளமாக தொப்பி போட்டுக் கொண்டுதான் வகுப்புக்கு செல்வது வழக்கம் . முதல் வரிசையில் இராமேஸ்வரம் கோவிலின் குருக்களான லட்சுமண சாஸ்திரி மகன் ராமநாத சாஸ்திரிக்குப் பக்கத்தில்தான் என்றுமே அமர்ந்திருப்பார்.
ராமநாத சாஸ்திரி திருநீறு தரித்து பூணூலும், குடுமி யுமாக இருப்பார். ஒரு நாள் புதிய ஆசிரியர் ஒருவர் அவரது வகுப்புக்கு வந்து, ஒரு இந்து குருக்களின் மகன் பக்கத்தில் முஸ்லிம் பையன் உட்கார்ந்திருப்பதை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவர் நிர்ணயித்த சமூக அந்தஸ்தின்படி அப்துல் கலாம் அவர்களை கடைசி பெஞ்சில் அமரச் சொன்னார்.
இதனால் கலாம் அவர்களுக்கும் ராமநாத சாஸ்திரிக்கும் துக்கத்தை அடக்க முடியவில்லை. கலாம் அவர்கள் கடைசி பெஞ்சுக்குப் போனதும் ராமநாத சாஸ்திரி கண்ணீர்விட்டு அழுதகாட்சி கலாம் அவர்களின் மனதை விட்டு மறையவில்லை.
பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்குப் போனதும் அவர் தந்தையிடம் இந்த சம்பவத்தைப் பற்றிச் கூறினார் .
ராமநாத சாஸ்திரியும் அவர் தந்தையிடம் சொல்லி விட்டார் . அந்த ஆசிரியரை வரவழைத்த லட்சுமண சாஸ்திரி கலாம் மற்றும் ராமநாத சாஸ்திரி முன்னிலையில் அந்த ஆசிரியரைக் கண்டித்தார். கள்ளம் கபடம் தெரியாத பச்சைக் குழந்தைகள் மனதில் இப்படி சமூக ஏற்றத் தாழ்வு, சமய துவேஷம் என்ற நஞ்சைப் புகுத்தக் கூடாது என்று எச்சரித்தார்.
ஒன்று மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் தீவை விட்டுப் போய்விட வேண்டும் என்று கடுமையாகக் கூறினார். லட்சுமண சாஸ்திரியின் உறுதியான அணுகு முறையால் அந்த இளம் ஆசிரியர் வருத்தம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், தன்னையே மாற்றிக் கொண்டார்.
*அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்* என்ற வள்ளுவனின் வாக்கிற்கிணங்க விளங்கிய லட்சுமண சாஸ்திரி அவர்களையும், ராமநாத சாஸ்திரி அவர்களையும் கலாம் அவர்கள் தன் இறுதி காலம் வரை நெஞ்சில் சுமந்திருந்தார்.
அது மாத்திரமல்ல, அவரது அறிவியல் ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர் ஆசாரமான பிராமணராக இருந்தும், புரட்சிகரமான சிந்தனை கொண்டவர். அவரது மனைவியோ பழைய நடைமுறைகளை மாற்றிக்கொள்ள விரும்பாதவர்.
பலதரப்பட்ட பின்னணி கொண்ட மக்களும் இரண்டறக் கலந்து இணக்கமாக வாழ வேண்டும் என்பதற்காக சமூகத் தடைகளைத் தகர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டார் சிவசுப்பிரமணிய ஐயர். நீண்ட நேரம் கலாம் அவர்களுடன் செலவழிப்பார். "பெரிய நகரங்களில் உள்ள மெத்தப் படித்தவர்களுக்குச் சமமாக நீ உயர வேண்டும் கலாம்..." என்று பிரியமுடன் அவர் சொல்வார்.
ஒருநாள் அவர் வீட்டில் சாப்பிடுவதற்கு கலாம் அவர்களை அழைத்திருந்தார். அனுஷ்டானமான, சுத்தபத்தம் நிறைந்த சமையலறையில் ஒரு முஸ்லிம் பையனை சாப்பிடவைப்பது என்பது அவரது மனைவியை அதிர்ச்சியடையச் செய்தது. கலாம் அவர்களுக்கு உணவு பரிமாற அந்த அம்மையார் மறுத்துவிட்டார். சிவசுப்பிரமணிய ஐயர், எதுவுமே நடக்காதது போல சாதாரணமாக இருந்தார். மனைவியிடம் கோபப்படவும் இல்லை. தமது கையால் அவரே கலாம் அவர்களுக்கு உணவு பரிமாறினார்.
அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அவரும் சாப்பிட்டார். அவரது மனைவி, சமையலறைக் கதவுக்குப் பின்னால் நின்று கொண்டு, இருவரையும் கவனித்துக் கொண்டே இருந்தார். கலாம் அவர்கள் சாதம் சாப்பிட்டது, தண்ணீர் குடித்தது அல்லது சாப்பிட்ட பிறகு தரையைச் சுத்தப்படுத்தியதில் எல்லாம் ஏதாவது வித்தியாசத்தை அவர் பார்த்திருப் பாரோ என்று கலாம் அவர்கள் வியப்படைந்தார் . அவர் அங்கிருந்து புறப்பட்டபோது, அடுத்த வாரக் கடைசியில் மறுபடியும் தம்மோடு சாப்பிட வருமாறு சுப்பிரமணிய ஐயர் கலாம் அவர்களை அழைத்தார். அவர் சற்று தயங்கினார் .
இதைக் கவனித்த ஐயர் இதற்கெல்லாம் மனம் தளரக்கூடாது என்றார். "இந்த அமைப்பு முறையை மாற்றவேண்டும் என்று தீர்மானித்துவிட்ட பிறகு இப்படிப்பட்ட பிரச்சினைகளை எல்லாம் எதிர்கொண்டாக வேண்டும்" என்று சொன்னார். அடுத்த வாரம் அவர் வீட்டிற்கு கலாம் அவர்கள் சென்றபோது அவரின் மனைவியே கலாம் அவர்களை சமையல் அறைக்குக் கூட்டிச் சென்றார். தமது கையாலேயே அந்த அம்மையார் கலாம் அவர்களுக்கு உணவு பரிமாறினார்.
இதே போன்று தான் ராமானுஜர் வாழ்க்கையிலும் நடந்தது. வைசிய செட்டியராகிய திருக்கச்சி நம்பிகளை ராமானுஜர் தனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்டார். ஒருமுறை தனது குருவான திருக்கச்சி நம்பிகளை தனது இல்லத்திற்கு வந்து உணவு அருந்த வேண்டினார். அவரும்
*அதற்கென்ன வருகிறேன்* என்றார். ஆச்சாரியர் வருகிறேன் என்றவுடன் ராமானுஜர் மிகுந்த பரபரப்புக்கு உள்ளனார்.
*ஆச்சார்யர் வருகிறார். அமுது தயாராகட்டும்* என்று மனைவியிடம் சொல்லிவிட்டு, இலை பறித்து வர தோட்டத்துக்குப் போனார். அவர் போய்த் திரும்பும் நேரத்துக்குள், திருக்கச்சிநம்பிகள் அவரது வீட்டுக்கு வந்துவிட்டார்.
*வாருங்கள் வாருங்கள்* என்றாள் ராமானுஜரின் மனைவி தஞ்சம்மாள். *ராமானுஜன் என்னை அழைத்திருந்தார்* என்றார் நம்பிகள் *தெரியும் உட்காருங்கள்* *அவர் வீட்டில் இல்லையா?* என்றார் நம்பிகள். *இப்போது வந்துவிடுவார். காத்திருக்கலாமா அல்லது உணவு அருந்துகிறீர்களா?* என்றார் தஞ்சாம்மாள். *எனக்குக் கோயிலில் வேலை இருக்கிறது. அதிகம் தாமதிக்க முடியாது* என்று சாப்பிட அமர்ந்தார். உடனே தஞ்சம்மா உணவு பரிமாறினாள். சில நிமிடங்களில், உண்டு முடித்துவிட்டு அவர் கிளம்பி விட்டார். *நல்லது அவர் வந்தால் சொல்லி விடுங்கள்* என்று கூறி விட்டு போய் விட்டார்.
உடனே, தஞ்சம்மா அவர் அமர்ந்து உண்ட இடத்தில் சாணமிட்டு எச்சில் பிரட்டினாள். அவருக்காகச் சமைத்த பாத்திரங்களை கிணற்றடிக்கு எடுத்துச் சென்று, கழுவிக் கவிழ்த்து வைத்தாள். தலைக்குக் குளித்து வீட்டுக்குள் வந்து மீண்டும் தமக்காக சமைக்கத் தொடங்கினாள். அதிர்ந்து போனார் ராமானுஜர். *எப்பேர்ப்பட்ட பாவம் இது, அவர் மகானல்லவா! குருவல்லவா! அவர் அமர்ந்த இடத்தைத் துடைத்து, அவருக்காகச் சமைத்ததில் மீதம் வைக்காமல் கழுவிக் கவிழ்த்து, தலைக்குக் குளித்து இப்படி பாவத்தை தேடிக்கொண்டாயே* என்றார் ராமானுஜர்.
*வேறென்ன செய்வார்கள்? அவர் வைசியரல்லவா?* என்றாள் தஞ்சம்மா. நொறுங்கிப் போனார் ராமானுஜர்.
*தவறு தஞ்சம்மா! குலத்தில் என்ன இருக்கிறது? பிறப்பால் ஒருவருக்கு எந்த ஏற்றமும் கிடையாது. எப்படி வாழ்கிறார்கள் என்பதை மட்டும் பார் . வாழ்க்கையை எத்தனை அர்த்தமுள்ளதாக ஆக்குகிறார்கள் என்றும் பார். அவர் பேரருளாளனுக்கு நெருங்கியவர். நாம் அவருக்கு கொஞ்சம் நெருக்கமாகவாவது இருக்க வேண்டாமா?* என்று மனம் நொந்து பேசினார் ராமானுஜர்.
ஆனால் தஞ்சம்மாளோ மரபுக்கு நெருக்கமாக இருக்க மட்டுமே விரும்பினாள். சொல்லிக் கொடுத்த ஆசார ஒழுக்கங்களுக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க எண்ணினாள்.
அதுபோல கலாம் அவர்களது வாழ்வில், ஆச்சாரியன் வீட்டில் சிஷ்யன் உணவு அருந்த............. சிவசுப்பிரமணிய ஐயர், கலாம் அவர்களை பிற்காலத்தில் மகானாக, ஞானியாக வருவார் எனக் கருதினார். அவர் எண்ணியது போலவே சாதி மதங்களை கடந்த ஞானியாக கடைசி வரை கலாம் அவர்கள் வாழ்ந்து காட்டினார்.
அது மாத்திரமல்ல, கலாம் அவர்கள் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT) - இல் படித்துக்கொண்டிருந்த நேரத்தில் ராமேஸ்வரத்திலிருந்து அவரது மைத்துனர் கலாம் அவர்களுக்கு ட்ரங்கால் செய்தார். *ராமேஸ்வரத்தை புயல் தாக்கி விட்டது என்றும், உன்னை பார்க்க வேண்டும் என்று அம்மா அப்பா விரும்புகிறார்கள் உடனடியாக கிளம்பி வா* என்று சொன்ன உடன் கலாம் அவர்களது மனம் இருப்பு கொள்ளவில்லை. கையில் பணம் வேறு இல்லை.
திசம்பர் மாதம் இறுதி ஆகையால் கையில் பணம் இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்போதைக்கு அவரிடம் இருந்த ஒரே சொத்து புத்தகம் தான். *Aerodynamics* (காற்றியக்கவியல்) பாடத்தில் சிறந்த மாணவனாக கலாம் அவர்களை தேர்ந்தெடுத்து *The theory of elasticity* என்ற புத்தகத்தை அன்றைய மெட்ராஸ் பல்கலை கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் லட்சுமணசாமி முதலியார் அவர்களால் பரிசாக அவருக்கு வழங்கப்பட்டது.
அந்த புத்தகத்தை அவர் விரும்பி படிக்கும் பழக்கம் கொண்டவர். அன்றைக்கு அந்த புத்தகத்தின் மதிப்பு ரூபாய் 400.
வேறு வழியின்றி அந்த புத்தகத்தை விற்று ஊருக்கு போகலாம் என்று எண்ணி சென்னை மூர் மார்க்கெட் பழைய புத்தக கடைக்கு சென்று ஒரு குடுமி வைத்த பிராமணரிடம் இந்த புத்தகத்தை வைத்துக்கொண்டு பணம் கொடுங்கள் என்று கேட்டார். அவர் கலாம் அவர்களை பார்த்தார், பிறகு புத்தகத்தைப் பார்த்தார், பரிசாக கிடைத்த புத்தகம் என்பதை உணர்ந்தார். *எதற்காக புத்தகத்தை வைத்து பணம் வாங்குகிறாய்? என்ன அவசரம்* என்று கலாம் அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர் *ராமேஸ்வரம் சென்று புயலால் பாதிக்கப் பட்ட என் பெற்றோரை பார்க்க போக வேண்டும் ஒரு அறுபது ரூபாய் இருந்தால் போதும்* என்று கூறினார்.
*சரி இந்த புத்தகம் இங்கே இருக்கட்டும் நான் யாருக்கும் விற்க மாட்டேன். இந்தா அறுபது ரூபாய். ஊருக்கு போய்விட்டு வந்து திரும்ப பணத்தை கொடுத்து விட்டு புத்தகத்தை வாங்கிச்செல்* என்றார் அந்த பிராமணர்.
அந்த பணத்தை பெற்றுக்கொண்டு ராமேஸ்வரம் சென்று புயலால் பாதிக்கபட்ட அவர் பெற்றோர்களை பார்த்து விட்டு அவர்களிடமே பணத்தை வாங்கிக்கொண்டு நேராக சென்னை வந்து மூர் மார்க்கெட் சென்று அந்த பிராமண பெரியவரிடம் பணத்தை கொடுத்து புத்தகத்தை பெற்றுக்கொண்டார். அப்போது அந்த பிராமண பெரியவர் *உனக்கு புத்தகத்தின் மீது இருக்கும் ஆர்வத்தை தெரிந்து கொண்டேன். அதனால் தான் உன் புத்தகத்தை தனியாக எடுத்து வைத்தேன். நீ நன்றாக படித்து பெரிய ஆளாக வர வேண்டும்* என்று கலாம் அவர்களை வாழ்த்தினார்.
அன்றைக்கு அந்த பெரியவரின் மனம் திறந்த வாழ்த்து தான், கலாம் அவர்களை இந்திய ஜனாதிபதியாக உயர்த்தி அழகு பார்த்தது என்றால் மிகையல்ல.
அது மாத்திரமல்ல, அவரது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உற்ற துணையாக இருந்து வாழ்க்கையின் வழிகாட்டியாக அவரை வழிநடத்தியது திருக்குறள் தான். அவரது வாழ்விற்கு வளம் கொடுத்து, அவரை மிகச்சிறந்த கல்விமானாக, ஈடுபாட்டுடன் கல்வியை கற்க வைத்தது திருக்குறள்.
*அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்*
அதாவது அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மேலும் பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணும் (கோட்டை) ஆகும். எத்தகைய
சூல்நிலையிலும் அறன் போல் அதாவது கோட்டை போல் நின்று நம்மை காக்கும்.
என்ற குறளை அடிக்கடி மாணவர்கள் மத்தியில் நினைவு கூர்ந்து, அறிவு அழிவற்றது அதை, மென்மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள் என்பார்.
இதைத்தான் ஆதி சங்கரர் பஜகோவிந்தத்தில்,
*மூட! ஜஹீஹி தநாகம த்ருஷ்ணாம்*
*குரு ஸத் புத்திம் விஷய வித்ருஷ்ணாம் |*
*யல்ல பஸே நிஜ கர்மோ பாத்தம்*
*வித்தம் தேன வினோதய சித்தம் ||*
மூடனே வெல்வாய் செல்வத் தாகம்
மனதினில் தணித்திடும் நல்லறி ஞானம்
மறை வழி ஈட்டிய செல்வம் போதும்
நிறைவடை என்றும் சிந்தையில் செல்வம்
அப்படிப்பட்ட செல்வம், நிலை இல்லாதது, அறிவு ஒன்றே யாராலும் அழிக்க முடியாத சக்தி என்று கலாம் அவர்கள் கூறுவார்.
மாணவர்களால், இளைஞர்களால் மட்டுமே நம் பாரத தேசத்தை வல்லரசாக ஆக்கிக் காட்ட முடியும் என்று நம்பினார். பத்து உறுதி மொழிகளை ஏற்க வைத்தார்.
1. நான், எனது வாழ்க்கையில் நல்லதொரு லட்சியத்தை மேற்கொள்வேன். நன்றாக உழைத்துப் படித்து என் வாழ்க்கையிலே மேற்கொண்ட லட்சியத்தை அடைய முற்படுவேன்.
2. நான், எனது விடுமுறை நாட்களில், எழுதப்படிக்கத் தெரியாத ஐந்து பேருக்காவது எழுதப்படிக்க கற்றுத்தருவேன்.
3. என் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ குறைந்தபட்சம் ஐந்து செடிகளையாவது நட்டு அதை பாதுகாத்து வளர்த்து மரமாக்குவேன்
4. நான், எனது வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்வேன், எனது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வேன், எனது ஊரை தூய்மையாக வைத்துக் கொள்வேன். எனது இந்த செயலால் என் தமிழ்நாடு தூய்மையாகும், இந்தியா தூய்மையாகும், மக்களின் மனமும் சுத்தமாகும், வாழ்வு சிறக்கும்.
5. மது, சூதாடுதல் மற்றும் போதைப் பழக்கங்களுக்கு ஆளாகித் துயருறும் ஐந்து பேரையாவது அதிலிருந்து மீட்டு நல்வழிப்படுத்த நான் முயல்வேன்.
6. நான், ஜாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, மொழியின் பெயராலோ எந்தவித பாகுபாடும் பாராட்டாது எல்லோரிடமும் சமமாக நடந்து கொள்வேன்.
7. நான், வாழ்க்கையில் நேர்மையாக நடந்து கொண்டு ம்ற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க முயல்வேன்.
8. நான், என் தாய் மற்றும் தாய்நாடு இரண்டையும் நேசித்து, பெண்குலத்திற்கு உரிய் மரியாதையையும், கண்ணியத்தையும் அளிப்பேன்.
9. நான், நாட்டில் அறிவு தீபத்தை ஏற்றி அணையா தீபமாகச் சுடர்விடச் செய்வேன்.
10. நமது தேசியக் கொடியை என் நெஞ்சத்தில் ஏந்தி நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்.
கலாம் அவர்கள் சொன்ன இந்த உறுதி மொழிகளை நாம் ஒவ்வொருவரும் கடைபிடித்தால், நம் நாடு மற்ற நாடுகளுக்கு தலைமை தாங்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அதுமந்திரமல்ல, உறக்கத்திலே வருவதல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு. கனவு காண்பது ஒவ்வொரு குழந்தையின்,
இளைஞர்களின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான விஷயம். ஒவ்வொரு இளைஞருக்கும் வாழ்வில் ஒரு லட்சியம் வேண்டும். அந்த லட்சியம்
நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டும். தொடர்ந்து அறிவைப்பெற அதை தேடிச் சென்றடைய வேண்டும், விடா முயற்சி வேண்டும், அதாவது தோல்வி மனப்பான்மையை தோல்வியடையச் செய்ய வேண்டும். இந்த நான்கு குணங்களும் இருந்தால் கனவு நனவாகும் என்றார்.
மேலும் அவர், நம் அலை பாயும் மனதை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்று விளக்குகிறார்.
எண்ணத்திலே மனத்தூய்மை இருந்தால்
நடத்தையில் அழகு மிளிரும். நடத்தையில் அழகு மிளிர்ந்தால் குடும்பத்தில் சாந்தி நிலவும்.
குடும்பத்தில் சாந்தி இருந்தால் நாட்டில் சீர்முறை உயரும். நாட்டில் சீர்முறை இருந்தால் உலகத்தில் அமைதி நிலவும்
எல்லாவற்றிக்கும் அடிப்படை மனத்தூய்மை என்பதை இச்சிறு கவிதை மூலம் விளக்கிவிட்டு,
மனத்தூய்மை எங்கிருந்து வரும், மூன்றே மூன்று பேர்களிடம் இருந்து தான் இதை கற்றுக்கொள்ள முடியும் என்கிறார். அவர்கள் யார்? அவர்கள் தான் தாய், தந்தை மற்றும்
ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் என்று குறிப்பிடுகிறார்.
அப்படிப்பட்ட அந்த மகத்தான மாமனிதர் 27.07.2015 அன்று தனது என்பத்து மூன்றாம் அகவையில், மேகாலய தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் திங்கள் கிழமை மாலை 6.30 மணி அளவில் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டே மாரடைப்பால் உயிர் துறந்தார். ஒட்டு மொத்த உலகமே கண்ணீர் வடித்தது. வாழ்க ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள்.......! வளர்க அவரது புகழ்....!
கே. பி. ரோகித்கணேஷ்
(சொற்பொழிவாளர், கட்டுரையாளர்)
145, மின்னப்பன் தெரு,
உறையூர், திருச்சி - 3