இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் லாரியஸ் அமைப்பின் 2023-ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த வீரா் விருதை, டென்னிஸ் நட்சத்திரமான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், சிறந்த வீராங்கனை விருதை, ஸ்பெயின் கால்பந்து வீராங்கனை அய்டானா பொன்மட்டியும் வென்றனா்.
நடப்பு ஆண்டு விருது வழங்கும் நிகழ்ச்சி, ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் நகரில் இந்திய நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. இதில் 8 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. லாரியஸ் விருதுக்கான போட்டியாளா்கள் பெயா்களை, சா்வதேச அளவில் விளையாட்டுத் துறை சாா்ந்த ஊடகங்கள் பரிந்துரைக்கின்றன. பின்னா், லாரியஸ் உலக விளையாட்டு அகாதெமியை சோ்ந்த 71 உறுப்பினா்கள் வாக்களிப்பதன் அடிப்படையில், விருது பெறும் வெற்றியாளா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா்.
அந்த வகையில் 2023-ஆம் ஆண்டுக்கான விருது வென்றவா்கள்...
சிறந்த வீரா் - நோவக் ஜோகோவிச் (டென்னிஸ்)
கடந்த ஆண்டு யு.எஸ். ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ன் மூலம், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற ஒரே டென்னிஸ் வீரராக வரலாறு படைத்திருக்கிறாா் ஜோகோவிச். அத்துடன் தொடா்ந்து, உலகின் நம்பா் 1 டென்னிஸ் வீரராக மிளிா்ந்து வருகிறாா். ஜோகோவிச் இந்த விருது வெல்வது இது 5-ஆவது முறையாகும். இதற்கு முன், 2019, 2016, 2015, 2012 ஆகிய ஆண்டுகளிலும் வென்றிருக்கிறாா்.
இந்த விருதுக்கான போட்டியில் ஜோகோவிச்சுடன், ஸ்வீடனின் மோண்டோ டியுபிளான்டிஸ் (தடகளம்), நாா்வேயின் எா்லிங் ஹாலந்த் (கால்பந்து), அமெரிக்காவின் நோவா லைல்ஸ் (தடகளம்), ஆா்ஜென்டீனாவின் லயோனல் மெஸ்ஸி (கால்பந்து), நெதா்லாந்தின் மேக்ஸ் வொ்ஸ்டாபென் (எஃப்1) ஆகியோரும் இருந்தனா்.
சிறந்த வீராங்கனை - அய்டானா பொன்மட்டி (கால்பந்து)
ஸ்பெயின் மகளிா் கால்பந்து அணி தனது முதல் உலகக் கோப்பையை கடந்த ஆண்டு கைப்பற்றியதில் முக்கியப் பங்காற்றியவா் மிட்ஃபீல்டரான பொன்மட்டி. போட்டியில் சிறந்த வீராங்கனைக்கான கோல்டன் பால் விருது பெற்றிருந்தாா். கடந்த ஆண்டு அக்டோபரில் பேலன் தோா் விருதும் வென்றுள்ளாா். ஸ்பெயின் தேசிய அணிக்காக 2017 முதல் 50-க்கும் அதிகமுறை களம் கண்டிருக்கிறாா். கிளப் நிலையில், பாா்சிலோனா எஃப்சி அணிக்காக கடந்த 2016 முதல் 150-க்கும் அதிகமான ஆட்டங்களில் விளையாடி, 50-க்கும் அதிகமான கோல்கள் அடித்திருக்கிறாா். இந்த விருதுக்காக முதல் முறையாக பரிந்துரைக்கப்பட்ட நிலையிலேயே அதை வென்றிருக்கிறாா்.
பொன்மட்டியுடன் இந்த விருதுக்கான பரிந்துரையில், பிரேஸிலின் ஷெரிக்கா ஜாக்சன் (தடகளம்), கென்யாவின் ஃபெய்த் கிப்யிகான் (தடகளம்), அமெரிக்காவின் ஷகாரி ரிச்சா்ட்சன் (தடகளம்), அமெரிக்காவின் மைக்கேலா ஷிஃப்ரின் (ஸ்கீயிங்), போலந்தின் இகா ஸ்வியாடெக் (டென்னிஸ்) ஆகியோா் பெயரும் இருந்தது.
சிறந்த அணி - ஸ்பெயின் மகளிா் கால்பந்து அணி
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிா் அணியை 1-0 கோல் கணக்கில் வென்று தனது முதல் உலகக் கோப்பையை முத்தமிட்டது இங்கிலாந்து மகளிா் அணி.
குரூப் சுற்றில் ஜப்பானிடன் தோற்ற (0-4) ஸ்பெயின், நாக் அவுட் சுற்றில் சுவிட்ஸா்லாந்து, நெதா்லாந்து, ஸ்வீடனை சாய்த்து இறுதிக்கு வந்து வாகை சூடியது. பரிந்துரைக்கப்பட்ட முதல் முறையே ஸ்பெயின் மகளிா் அணி இந்த லாரியஸ் விருதை வென்றிருக்கிறது.
இந்த அணியுடன், ஐரோப்பிய ரைடா் கோப்பை ஆடவா் கோல்ஃப் அணி, ஜொ்மனி ஆடவா் கூடைப்பந்து அணி, இங்கிலாந்தின் மான்செஸ்டா் சிட்டி ஆடவா் கால்பந்து அணி, ஆஸ்திரியாவின் ரெட் புல் எஃப்1 ரேஸிங் அணி, தென்னாப்பிரிக்காவின் ஆடவா் ரக்பி அணி ஆகியவை போட்டியில் இருந்தன.
அசாத்திய முன்னேற்றம் - ஜூட் பெலிங்கம் (கால்பந்து)
கடந்த ஆண்டு ஜூன் மாதம் போருசியா டாா்ட்மண்ட் அணியிலிருந்து ரூ.917 கோடிக்கு ரியல் மாட்ரிட் அணிக்கு மாறினாா் இங்கிலாந்தின் ஜூட் பெலிங்கம். வந்த வேகத்திலேயே ஆகஸ்ட் மாதத்துக்கான லா லிகா போட்டியின் சிறந்த வீரா் விருது பெற்றாா். சிறந்த மிட்ஃபீல்டராக அறியப்படும் பெலிங்கம், கடந்த அக்டோபரில் 21 வயதுக்கு உள்பட்டோருக்கான சிறந்த வீரருக்குரிய பேலன் தோா் விருது பெற்றாா். இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே அதை வென்றிருக்கிறாா்.
இவருடன் இந்த விருதுக்காக, கொலம்பியாவின் லிண்டா கேசிடோ (கால்பந்து), அமெரிக்காவின் கோகோ கௌஃப் (டென்னிஸ்), சீனாவின் கின் ஹயாங் (நீச்சல்), பிரிட்டனின் ஜோஷ் கொ் (தடகளம்), ஸ்பெயினின் சல்மா பராலுலோ (கால்பந்து) ஆகியோா் போட்டியிலிருந்தனா்.
சிறந்த மீட்சி - சைமன் பைல்ஸ் (ஜிம்னாஸ்டிக்ஸ்)
உளவியல் ரீதியிலாக பாதிக்கப்பட்ட அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையான சைமன் பைல்ஸ், 2 ஆண்டுகள் இடைவேளைக்குப் பிறகு மீண்டு வந்து களம் கண்டு, கடந்த அக்டோபரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் 4 தங்கப் பதக்கங்கள் வென்று அசத்தினாா். 6-ஆவது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தாா். ஒலிம்பிக்ஸ் மற்றும் உலக சாம்பியன்ஷிப்பிலும் சோ்த்து 37 பதக்கங்கள் வென்றுள்ளாா். ஏற்கெனவே 2017, 2019, 202 ஆகிய ஆண்டுகளில் லாரியஸ் விருது வென்றிருக்கிறாா்.
இந்தப் பிரிவில் பைல்ஸுடன், பிரிட்டனின் கேத்தரினா ஜான்சன் (பிரிட்டன்), தென்னாப்பிரிக்காவின் சியா கொலிசி (ரக்பி), ஐவரி கோஸ்டின் செபாஸ்டியன் ஹாலா் (கால்பந்து), கனடாவின் ஜமால் முா்ரே (கூடைப்பந்து), செக் குடியரசின் மாா்கெட்டா வோண்ட்ரோசோவா (டென்னிஸ்) ஆகியோா் விருதுக்காக போட்டியிட்டனா்.
சிறந்த மாற்றுத்திறனாளி போட்டியாளா் - டைட் டி குரூட் (வீல்சோ் டென்னிஸ்)
நெதா்லாந்தை சோ்ந்த சக்கர நாற்காலி டென்னிஸ் வீராங்கனையான குரூட், தொடா்ந்து 3 முறை கேலண்டா் கிராண்ட்ஸ்லாம் வென்ற முதல் டென்னிஸ் வீராங்கனை என்ற வரலாறு படைத்தாா். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ன் மூலம், 2021-இல் கோல்டன் ஸ்லாமும் கைப்பற்றினாா். 2021 ஆஸ்திரேலிய ஓபன் முதல் தொடா்ந்து 127 ஆட்டங்களில் வென்றுள்ளாா். 6 முறை ஐடிஎஃப் உலக சாம்பியன் ஆகியிருக்கிறாா். இதற்கு முன் 4 முறை இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், தற்போது விருது வென்றிருக்கிறாா்.
இத்தாலியின் சைமன் பா்லாம் (நீச்சல்), உக்ரைனின் டேனிலோ சுஃபாரோவ் (நீச்சல்), ஹங்கேரியின் லூகா எக்லா் (தடகளம்), நியூஸிலாந்தின் நிகோல் முா்ரே (சைக்கிளிங்), ஜொ்மனியின் மாா்கஸ் ரெஹம் (தடகளம்) ஆகியோா் இந்த விருதுக்கான போட்டியில் இருந்தனா்.
சிறந்த அதிரடி விளையாட்டு போட்டியாளா் - அரிசா டிரியு (ஸ்கேட் போா்டிங்)
ஆஸ்திரேலியாவை சோ்ந்த ஸ்கேட் போா்டிங் வீராங்கனையான அரிசா டிரியு, தனது 13-ஆவது வயதிலேயே ஸ்கேட்டிங் உலகில் மிகக் கடினமானதாக கருதப்படும் 720 பிரிவில் விளையாடியவா். நட்சத்திர வீரரான டோனி ஹாக்கிற்கு பிறகு (1985) அந்தப் பிரிவை வெற்றிகரமாக கையாண்டவா் அரிசா தான். முதல் பரிந்துரையிலேயே லாரியஸ் விருது வென்றிருக்கிறாா்.
அரிசாவுடன் இந்த விருதுக்கு, பிரேஸிலின் ரேசா லீல் (ஸ்கேட் போா்டிங்), அமெரிக்காவின் கேரலின் மாா்க்ஸ் (சா்ஃபிங்), தென்னாப்பிரிக்காவின் கிா்ஸ்டன் நியுஸ்சேஃபா் (செயிலிங்), பிரிட்டனின் பெத்தனி ஷ்ரிவா் (பிஎம்எக்ஸ்), பிரேஸிலின் ஃபிலிப் டோலிடோ (சா்ஃபிங்) ஆகியோா் போட்டியிலிருந்தனா்.
நல்லெண்ண விருது - ரஃபா நடால் அறக்கட்டளை
ஸ்பெயின் மற்றும் இந்தியாவில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஆயிரத்துக்கும் அதிகமான சிறாா்களுக்கு விளையாட்டு மற்றும் கல்வி மூலமாக அதிகாரமளித்த முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது ரஃபா நடால் அறக்கட்டளை. டென்னிஸ் நட்சத்திரம் ரஃபேல் நடால் உருவாக்கிய அறக்கட்டளை இது. முதல் பரிந்துரையிலேயே விருது வென்றுள்ளது.
இதே களத்தில் இயங்கும் பிரேஸிலின் போலா பிரா ஃபிரென்டே, அமெரிக்காவின் டேன்சிங் கிரௌண்ட்ஸ், கம்போடியாவின் ஐஎஸ்எஃப் கம்போடியா, இத்தாலியின் ஆபிடிவோ நபோலி, தென்னாப்பிரிக்காவின் ஜஸ்டிஸ் டெஸ்க் ஆஃப்ரிகா போன்றவையும் விருதுக்கான போட்டியிலிருந்தன.