ஷிம்கென்ட்,
ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி கஜகஸ்தானில் நடந்து வருகிறது. இதில், இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீரர் ஆனந்த் ஜீத் சிங் நருகா (வயது 27), ஸ்கீட் பிரிவின் இறுதி போட்டியில் இன்று தங்க பதக்கம் வென்று உள்ளார்.
குவைத் நாட்டின் மன்சூர் அல் ரஷீதியை 57-56 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். இதனால், மன்சூருக்கு வெள்ளி பதக்கமும், 3-வது இடம் பிடித்த கத்தார் நாட்டின் அல்-இஷாக் அலி அகமதுவுக்கு (43 புள்ளிகள்) வெண்கல பதக்கமும் கிடைத்தது.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்றவரான நருகாவுக்கு, சர்வதேச அளவிலான போட்டி தொடரில், ஒட்டுமொத்தத்தில் கிடைத்த 5-வது பதக்கம் இதுவாகும்.
2023-ம் ஆண்டு நடந்த போட்டியில் கலப்பு அணி பிரிவிலும் மற்றும் அணி பிரிவிலும் அவர் தங்க பதக்கம் வென்றார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை: முதலிடம் பிடித்தார் கேசவ் மகராஜ்
துபாய்: ஒருநாள் கிரிக்கெட் போட்டி பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளரான கேசவ் மகராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த ஆட்டத்தில் கேசவ் மகராஜ் 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
இதன் மூலம் தரவரிசையில் 687 புள்ளிகளுடன் 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தை அடைந்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர், டிசம்பருக்கு பிறகு தரவரிசையில் கேசவ் மகராஜ் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். இலங்கை அணியின் மஹீஷ் தீக்ஷனா, இந்தியாவின் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு இடங்கள் பின்தங்கி முறையே 2 மற்றும் 3-வது இடங்களில் உள்ளனர். டாப் 10-ல் குல்தீப் யாதவை தவிர இந்திய வீரர்களில் ரவீந்திர ஜடேஜாவும் இடம் பெற்றுள்ளார். அவர் 616 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 18 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்திய மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ஜெய்டன் சீல்ஸ் தரவரிசையில் 15 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளார். பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திரமான ஷுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். ஸ்ரேயஸ் ஐயர் 6-வது இடத்தில் உள்ளார்.
டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா, திலக் வர்மா முதல் இரு இடங்களில் உள்ளனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 6-வது இடத்திலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர். தென் ஆப்பிரிக்க அணியின் டெவால்ட் பிரேவிஸ் 9 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தை அடைந்துள்ளார்.