ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை

சிட்னி,


உலகிலேயே முதல் முறையாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சேட், டிக்டாக் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களை குழந்தைகள் பயன்படுத்த தடை விதிக்கும் வகையில், ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தில் யூடியூப் செயலிக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில், இந்த பட்டியலில் யூடியூப் செயலியும் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதாவது, குழந்தைகள் யூடியூப்பை பயன்படுத்த முடியும், ஆனால் அவர்களுக்கென தனி யூடியூப் சேனல்களை வைத்திருக்க அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக ஆஸ்திரேலியாவின் தகவல் தொடர்புத்துறை மந்திரி அனிகா வெல்ஸ், சமூக வலைதளங்களை 'வயது வரம்புக்கு உட்பட்ட தளங்கள்' என்று வரையறை செய்வதற்கான விதிமுறைகளை இன்று வெளியிட்டார். இந்த வயது வரம்பு விதிகள் டிசம்பர் 10-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்றும், வயது குறைந்தவர்களின் கணக்குகளை நீக்க தவறினால் சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்கள் மீது 33 மில்லியன் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் ஆஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


மேலும் 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை விதிக்கும் முடிவு குறித்து பேசிய அனிகா வெல்ஸ், "ஆஸ்திரேலியாவில் 10-ல் 4 குழந்தைகள் யூடியூப் செயலியில் வரும் கருத்துகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய குழந்தைகளின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான மிரட்டல்களை கண்டு நாங்கள் அஞ்சமாட்டோம்" என்று தெரிவித்தார்.


அதே சமயம், அமெரிக்காவை சேர்ந்த யூடியூபின் தாய் நிறுவனமான 'ஆல்பாபெட்' வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆன்லைன் பாதிப்புகளை குறைப்பது என்ற அரசாங்கத்தின் இலக்கை நாங்கள் மதிக்கிறோம். அதே சமயம், யூடியூப் என்பது இலவச, உயர்தர உள்ளடக்க வீடியோ நூலகத்தைக் கொண்ட ஒரு பகிர்வு தளமாகும். இது தொலைக்காட்சித் திரைகளில் அதிகமாக பார்க்கப்படுகிறது. இது சமூக ஊடகம் அல்ல. நாங்கள் ஆஸ்திரேலிய அரசாங்கத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகையில், "குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்வது தொடர்பாக சர்வதேச ஆதரவை பெறும் வகையில், செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் ஆஸ்திரேலிய அரசு பிரசாரம் செய்யும். இது குறித்து மற்ற நாடுகளின் தலைவர்களுடன் நான் நடத்திய பேச்சுவார்த்தைகளில் அவர்களும் இதே கருத்தை பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதை நான் அறிவேன். ஆஸ்திரேலியாவிற்கு மட்டுமன்றி, இது அனைவருக்குமான விவகாரம் ஆகும்" என்று தெரிவித்தார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%