உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணைக் கைதி தற்கொலை: 2 பேர் பணியிடை நீக்கம்
Aug 04 2025
10

திருப்பூர், ஆக. 2–
உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக 2 வன அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தமிழக-கேரள எல்லையில், உடுமலை-மூணாறு மலைப்பாதையில் சின்னார் சோதனைச்சாவடியில் கேரள கலால்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 30-ந்தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநில அரசு பஸ் மூணாறு நோக்கி சென்று கொண்டிருந்தது. சோதனை சாவடியில் அந்த பஸ்சை கலால்துறை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த பஸ்சில் பயணம் செய்த திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா தளி அருகே திருமூர்த்தி நகர் மேல்குருமலை பகுதி பழங்குடியினத்தை சேர்ந்த தொழிலாளி மாரிமுத்து (வயது 45) என்பவரிடம் சிறுத்தை பல் ஒன்று இருந்ததும், தற்போது மாரிமுத்து, கேரள மாநிலம் மறையூர் பெரியகுடி பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மாரிமுத்துவை அதிகாரிகள் தமிழக வனத்துறையிடம் ஒப்படைத்தனர். உடுமலை வனச் சரக அலுவலகத்துக்கு மாரிமுத்துவை அழைத்துச்சென்று அவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4.15 மணி அளவில் மாரிமுத்து வனத்துறை அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, அங்குள்ள கொக்கியில் தனது கைலியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே மாரிமுத்து சாவில் மர்மம் உள்ளது என்றும், அவரை அடித்துகொலை செய்து தூக்கில் தொங்க விட்டனர் என்றும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே வனத்துறை அலுவலகத்தில் மாரிமுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட அறையில், உடுமலை 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நித்யகலா நேரில் ஆய்வு செய்தார்.
இந்நிலையில் உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் வனவர் நிமல், வனக்காவலர் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?