ரஷ்ய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலை நிறுத்த டிரம்ப் உத்தரவு
Aug 04 2025
15

வாஷிங்டன், ஆக. 2–
ரஷ்ய எல்லையில் 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிகள் பலனளிக்காத தால், ரஷ்யா மீது பொருளாதார தடையை அமெரிக்க அரசு விதித்தது.
ரஷ்யாவிடம் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றது.
இந்த நிலையில் அணு ஆயுதம் குறித்து அச்சுறுத்தும் வகையில் பேசிய ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை அதிபர் டிரம்ப் எடுத்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:–
ரஷ்யாவின் முன்னாள் அதிபரும் தற்போதைய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவின் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யாவுக்கு பொருத்தமான பகுதிகளில் நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளேன்.வார்த்தை மிகவும் முக்கியமானவை. அவை எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடே டிரம்பை கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் கூறியதாவது:– “ரஷ்யாவுக்கு 50 நாள்கள், 10 நாள்கள் எனக் கெடு விதிக்கும் விளையாட்டை டிரம்ப் விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் 2 விஷயங்களை புரிந்துகொள்ள வேண்டும். ரஷ்யா இஸ்ரேலோ ஈரானோ கிடையாது. ஒவ்வொரு இறுதி எச்சரிக்கையும் ஒரு அச்சுறுத்தலாகும். போரை முன்னோக்கி எடுத்துச் செல்லும். ரஷியா - உக்ரைன் இடையே அல்ல, அவரது சொந்த நாட்டுடன்.” என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“இந்தியா, ரஷ்யா பொருளாதாரங்கள் பற்றி பேசுவதற்கு முன்னதாக ’டெட்ஹேண்ட்’ எவ்வளவு ஆபத்தானது என்பது பற்றி டிரம்ப் யோசித்துப் பார்க்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
‘டெட் ஹேண்ட்’ என்பது பனிப்போர் காலத்தில் ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட அணு அயுத கட்டமைப்புகள் ஆகும். ரஷ்யாவை தாக்க முயற்சித்தால் தானாகவே அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?