எதிரி நாடுகளின் ஏவுகணை, ட்ரோன்களை வீழ்த்த ‘‘வான் பாதுகாப்பு கவச சோதனை’’ வெற்றி

எதிரி நாடுகளின் ஏவுகணை, ட்ரோன்களை வீழ்த்த ‘‘வான் பாதுகாப்பு கவச சோதனை’’ வெற்றி

புவனேஸ்வர், ஆக 24–


ஒடிசா கடற்கரையில் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகளுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து உள்ளார்.


போர்க்காலங்களில் எதிரி நாடுகள் ஏவும் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் முறியடிக்க வான் பாதுகாப்பு கவசம் மிகவும் முக்கியமானது. இந்தியாவுக்கான பிரத்யேக வான் பாதுகாப்பு கவச அமைப்பை உருவாக்க டி.ஆர்.டி.ஓ. எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது.


இந்த நிறுவனம் உருவாக்கிய வான் பாதுகாப்பு கவசத்தின் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


இதையொட்டி, அவரது அறிக்கையில் ‘‘ஒடிசா சந்திப்பூர் கடற்கரையிலிருந்து ஒருங்கிணைந்த வான்பாதுகாப்பு அமைப்பின் திறனை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த சாதனைக்காக, டிஆர்டிஓ, ராணுவம் மற்றும் இந்திய பாதுகாப்புத் துறைக்கு வாழ்த்துக்கள். இந்த தனித்துவமான சோதனை நமது நாட்டின் பல அடுக்கு வான் பாதுகாப்பு திறனை வெளிப்படுத்துகிறது. எதிரி ட்ரோன்களின் அச்சுறுத்தலை முறியடிக்க, பாதுகாப்பை பலப்படுத்த உதவும்’’. என்று கூறியுள்ளார்.


ஏவுகணை திட்டத்தில் மைல்கல்


இந்த ஆயுத அமைப்பானது, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பல்வேறு ஏவுகணைகள், ரேடார், லாஞ்சர்கள், தாக்குதல் மற்றும் வழிகாட்டு சாதனங்கள், கட்டுப்பாட்டு அமைப்புகள் என விரிவான வான் பாதுகாப்புக்கான அம்சங்களை கொண்டிருக்கும். பரவலான வான்வழி தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் இது, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உள்ளது.


இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு பதிலாக உள்நாட்டு தயாரிப்பு என்பது கூடுதல் அம்சம் ஆகும். இதனால், ஏவுகணை திட்டத்தில் மற்றொரு மைல்கல்லை இந்தியா எட்டி சாதனை படைத்துள்ளது.


நாட்டில் முதன்முறையாக வான் பாதுகாப்புக்கான இந்த பரிசோதனை நடத்தி பார்க்கப்பட்டு உள்ளது. இந்த சாதனையை மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் எக்ஸ் வலைதளத்தில் இன்று அறிவித்து உள்ளார். இதனால், எதிரிகளின் வான்வழி தாக்குதலுக்கான அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்தியாவின் வான் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என தெரிவித்து உள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%