
சென்னை, கோவையில் ரெயில் பெட்டிகளில் கேட்பாரற்று கிடந்த 30 கிலோ கஞ்சா சிக்கியது.
கோவை ரெயில்வே பாதுகாப்பு படையின் குற்றத்தடுப்பு மற்றும் சிறப்பு படை போலீசார் நேற்று காலை கோவை ரெயில் நிலையத்திற்கு வந்த திருவனந்தபுரம் கொச்சுவேலி-கோரக்பூர் ராப்தி சாகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரெயிலில் உள்ள ஒரு பெட்டியில் கழிப்பறையின் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் 4 பைகள் இருந்தன. நீண்ட நேரம் ஆகியும் அந்த பைகளுக்கு உரிமை கோரி யாரும் போலீசாரை அணுகவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரி தேவராஜன் முன்னிலையில் திறந்து பார்த்தனர்.
அப்போது அந்த 4 பைகளில் மொத்தம் 23 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.11.50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து கோவை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சாவை ரெயிலில் கடத்தி வந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வட மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் கோவைக்கு கஞ்சா கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ரெயில்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
எழும்பூரில் 7 கிலோ கஞ்சா
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெபாஸ்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக திருச்சி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளில் ஏறி சோதனை செய்தனர். அதில் ஒரு பெட்டியில் கேட்பாரற்று கிடந்த சூட்கேசை சோதனை செய்தனர். அதில் 7 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு ரூ.3.5 லட்சம் ஆகும்.
இதேபோல, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக ராமேசுவரம் செல்லும் வாராந்திர ரெயிலில் கடத்தி வந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
பறிமுதலான கஞ்சா மற்றும் புகையிலை பொருளை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். ரெயிலில் அவற்றை கடத்தி வந்தது யார்? என ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?