சேலத்தில் கட்டப்பட்டு வரும் 1456 குடியிருப்புகள் கட்டுமான பணி நவம்பருக்குள் நிறைவு பெறும் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், இரா.ராஜேந்திரன் தகவல்

சேலத்தில் கட்டப்பட்டு வரும் 1456 குடியிருப்புகள் கட்டுமான பணி நவம்பருக்குள் நிறைவு பெறும் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், இரா.ராஜேந்திரன் தகவல்

சேலம், ஆக. 21–


சேலம் மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் நடைபெறும் குடியிருப்பு கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை மாநில அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் (குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை) மற்றும் இரா.இராஜேந்திரன் (சுற்றுலாத்துறை) ஆகியோர் ஆய்வு செய்தனர்.


கந்தம்பட்டி பகுதியில் பிளக்ஸ் பிரிண்டிங் தொழில் செய்து வரும் அ.மனோகரன் நிறுவனத்தை அமைச்சர் பெருமக்கள் பார்வையிட்டனர். ரூ.19.42 லட்சம் கடனுதவி, ரூ.6.79 லட்சம் மானியம் உள்ளிட்ட உதவிகள் நேரத்தில் கிடைக்கிறதா, தவணை செலுத்தப்பட்டுவருகிறதா என கேட்டறிந்தனர்.


பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பரசன் தெரிவித்ததாவது:


கடந்த 4 ஆண்டுகளில் 5 சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் ரூ.5,301.63 கோடி வங்கி கடனுதவிகள், ரூ.2,057.90 கோடி மானியங்கள் வழங்கப்பட்டு 63,014 புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மூலம் 3,619 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டனர். கலைஞர் கைவினைத் திட்டத்தில் 3,180 கைவினை கலைஞர்களுக்கு ரூ.58.48 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.


கடந்த 4 ஆண்டுகளில் 3,190 பேருக்கு ரூ.359.10 கோடி கடனுதவிகள், ரூ.131 கோடி மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 552 தொழில் முனைவோர்களுக்கு 10 மானியத் திட்டங்களில் ரூ.27.53 கோடி வழங்கப்பட்டுள்ளது.


அமைச்சர்கள், பெரியார் நகர், அல்லிக்குட்டை, காந்திநகர், நேரு நகர் பகுதிகளில் நடைபெறும் அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை நேரில் பார்வையிட்டனர்.


பெரியார் நகரில் ரூ.27.18 கோடியில் 280 குடியிருப்புகள், அல்லிக்குட்டையில் ரூ.49.25 கோடியில் 504 குடியிருப்புகள், காந்திநகரில் ரூ.27.19 கோடியில் 280 குடியிருப்புகள், நேரு நகரில் ரூ.38.06 கோடியில் 392 குடியிருப்புகள் என ஒவ்வொரு வீடும் 400 சதுர அடி பரப்பில் ஹால், படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை வசதியுடன், மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்புகளுடன் கட்டப்படுகிறது. இந்த வீடுகள் வரும் நவம்பருக்குள் பொதுமக்களுக்குப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என அமைச்சர்கள் அறிவித்தனர்.


தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர் எல்.நிர்மல்ராஜ், கலெக்டர் இரா.பிருந்தாதேவி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கண்காணிப்பு பொறியாளர் செந்தில் குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%