
சென்னை:
புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான பட்டியல், நீண்ட இழுபறிக்கு பின் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
தமிழக காவல் துறை தலைவரான டி.ஜி.பி., சங்கர் ஜிவால், இம்மாதம் ஓய்வு பெறுகிறார். இதனால், புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான பட்டியல், மூன்று மாதங்களுக்கு முன், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஆனால், இப்பட்டியலை இறுதி செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. இதனால், பொறுப்பு டி.ஜி.பி.,யாக ஒருவர் நியமிக்கப்படலாம் என, பேச்சு கிளம்பியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிய டி.ஜி.பி., தேர்வு பட்டியலில் உள்ள, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரியின் ஆதரவாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். உயர் நீதிமன்ற மதுரை கிளையும், 'புதிய டி.ஜி.பி., நியமனத்தில் குளறுபடி ஏற்பட்டால் தலையிடும் நிலை ஏற்படும்' என எச்சரித்தது.
அரசு தரப்பில், குளறுபடிக்கு வாய்ப்பு இல்லை என்றும், புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் துவங்கி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல, தன்னையும் புதிய டி.ஜி.பி., தேர்வு பட்டியலில் இணைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில், ஐ.பி.எஸ்., அதிகாரி பிரமோத்குமார் மனு தாக்கல் செய்தார்; அது நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இப்படி அடுத்தடுத்து முட்டுக்கட்டை போடும் முயற்சிகள் நடந்து வந்ததால், புதிய டி.ஜி.பி.,க்கான தேர்வு பட்டியலை இறுதி செய்ய முடியாத நிலை இருந்தது. ஒருவழியாக, தற்போது, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள், 11 பேர் அடங்கிய பட்டியல், டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து, முதல்வர் ஸ்டாலின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதில், மூன்று பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு, எட்டு பேர் அடங்கிய பட்டியல், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், மூவரை இறுதி செய்து, மாநில அரசுக்கு பட்டியல் திருப்பி அனுப்பி வைக்கப்படும். அதில் இருந்து ஒருவர் டி.ஜி.பி.,யாக நியமனம் செய்யப்படுவார். அதன்படி இறுதி பட்டியலில், மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சீமா அகர்வால், ராஜிவ்குமார், சந்தீப்ராய் ரத்தோட் இடம் பெறுவர் என, தமிழக காவல் துறை வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?