மசோதாக்களை கிடப்பில் போட்டாலும் கோர்ட் தலையிடக்கூடாதா? சுப்ரீம் கோர்ட் கேள்வி
புதுடெல்லி, ஆக.27-
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலவரையின்றி கிடப்பில் போட்டாலும் கோர்ட்டு தலையிடக்கூடாதா? என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கும் மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள், கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும். அதுகுறித்து முடிவு எடுக்காத பட்சத்தில் அதை எதிர்த்து மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நீதிபதிகளின் ஆலோசனை கருத்தை பெறும் வகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 கேள்விகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம்நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துருக்கர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. அப்போது இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். அதன்படி மாநில அரசு சார்பில் வக்கீல்கள் ஆஜராகி வாதாடி வருகிறார்கள். இந்தநிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மராட்டிய அரசின் சார்பில் மூத்த வக்கீல் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-– மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட முடியாது. மசோதாக்களுக்கு கவர்னர்களும், ஜனாதிபதியுமே ஒப்புதல் அளிக்க முடியும். அவர்கள் எந்தவொரு கோர்ட்டுக்கும் பதில் அளிக்க தேவையில்லை. கவர்னர்கள், ஜனாதிபதியின் முடிவுகளில் மட்டுமே ஐகோர்ட்டுகளும், சுப்ரீம் கோர்ட்டும் தலையிட முடியும். மசோதா மீதான முடிவு என்ன என்று கோர்ட் கேட்க முடியுமே தவிர, ஏன் இந்த முடிவு என கேட்க முடியாது.
அமைச்சரவையின் ஆலோசனை யின்படி கவர்னர்களும், ஜனாதிபதியும் செயல்பட வேண்டும் என்றாலும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளனர்.
கவர்னரின் அதிகாரத்தை கோர்ட் விசாரணைக்கு உட்படுத்த முடியாது. அரசியல் ஆலோசனைகள் அடிப்படையிலும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைக்கின்றன. சில நேரங்களில் 15 நாட்களோ, 6 மாதங்களோ கூட ஆகும்.
மாநில அரசு பட்டியலில் இருக்கும் மசோதாக்களையும் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு வழங்கப் பட்டுள்ளது. இவ்வாறு நிறுத்தி வைக்கும் அதிகாரத்தை ‘வீட்டோ’ எனக் குறிப்பிடக்கூடாது என வாதிட்டார்.
அப்போது தலைமை நீதிபதி, ‘மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கா மல் காலவரையின்றி கிடப்பில் போட முடியுமா?. மசோதாக்களுக்கு ஏன் ஒப்புதல்அளிக்கவில்லை என்று கோர்ட் கேள்வி கேட்கக்கூடாதா’ என்று கேட்டார்.
அதன்பின்னர் மத்தியபிரதேச மாநில அரசின் சார்பில் மூத்த வக்கீல் என்.கே.கவுல் ஆஜராகி, ‘மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது, ஒப்புதலை நிறுத்திவைப்பது, ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி வைப்பது என்ற 3 தெளிவான வாய்ப்புகளை கவர்னர் பெற்றுள்ளார். மசோதா வை திருப்பி அனுப்புவதை ஆலோசனையின் ஒரு பகுதியாகக் கொள்ள வேண்டுமே தவிர, ‘வீட்டோ’ அதிகாரமாக கொள்ளக் கூடாது என்று வாதிட்டார்.
மேலும் ராஜஸ்தான் மாநில அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் மணீந்தர் சிங் வாதிடுகையில், ‘மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னர்களுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு விதிக்க முடியாது. தமிழ்நாடு கவர்னரின் வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என வாதிட்டார்.
உத்தரபிரதேசம், ஒடிசா சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ், கோவா கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விக்ரம்ஜீத் பானர்ஜி, சத்தீஷ்கார் தரப்பில் மூத்த வக்கீல் ரமேஷ் ஜெத்மலானி, புதுச்சேரி சார்பில் மூத்த வக்கீல் விஜய் நவ்ரே, அரியானா சார்பில் மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் ஜனாதிபதியின் விளக்க கேள்விகளுக்கு ஆதரவாகவும்,கெடு விதித்ததை ஆட்சேபித்தும் வாதங்களை முன்வைத்தனர்.