நாம் எல்லோரும் வெந்தயத்தின் பயன்பாடு என்ன என்பதை அறிவோம். இட்லி மாவு, தோசை மாவு அரைக்கும்போது அரிசியுடன் வெந்தயம், உளுந்து இரண்டையும் கலந்து அரைப்போம். அப்போதுதான் மாவு சாஃப்ட் ஆக இருக்கும். இட்லி புசு புசு என குஷ்பூ இட்லி போல பொங்கி வரும். ஆனால், பலருமறியாத முக்கியமான மருத்துவ உண்மையை இப்போது காண்போம்.
சமீபத்தில் அமெரிக்க ஆய்வு ஒன்று வெந்தயம் (Fenugreek) சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது என அறிவித்திருக்கிறது. தினமும் காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவு உண்பதற்கு 10 நிமிடங்கள் முன்பாக ஒரு ஸ்பூன் வெந்தயம் தண்ணீரில் ஊற வைத்து மென்று சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு குறையும்.
வெந்தயம் துவர்ப்பு மற்றும் கசப்புத்தன்மை கொண்டது. இதில் உள்ள கரையும் நார்ச்சத்தும் நம் ரத்தத்தில் கலந்து பல நன்மைகளை விளைவிக்கிறது. வெந்தயத்தை கடித்து விழுங்க சிலருக்கு சிரமமாக இருக்கும். ஏன் எனில், அதன் சுவை துவர்ப்புடன் கூடிய கசப்புத்தன்மை. பழகி விட்டால் சரி ஆகி விடும். அதுவரை சாப்பிட முடியாதவர்கள் மாத்திரை போல விழுங்கினாலும் பரவாயில்லை.
சுகர் டெஸ்ட் எடுக்கும்போது காலையில் வெறும் வயிற்றில் ஃபாஸ்ட்டிங் சுகர் டெஸ்ட் எடுப்பவர்கள், இந்த வெந்தய ஃபார்முலா படி, முந்தின நாள் இரவு உணவுக்கு முன் வெந்தயம் ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டால், அடுத்த நாள் சர்க்கரை அளவு குறைவாகக் காட்டும்.
தொடர்ந்து வெந்தயம் உணவில் எடுத்து வந்தால், மூன்று மாத சர்க்கரை சராசரி அளவும் குறையும். இதை சோதனை செய்ய உங்கள் சர்க்கரை அளவைக் குறித்துக் கொண்டு வெந்தயம் ஒரு மாதம் எடுத்துக் கொண்டு வந்து பின் ஹெச்பி ஏ ஒன் டெஸ்ட் எடுத்தால் அந்த அளவு குறைந்து வருவதை உணரலாம்.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு...
காலை உணவாக வெறும் வயிற்றில் ஒரு முழு பப்பாளிப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. சிலர் பப்பாளிப்பழம் சூடு என பயப்படுவார்கள். பழக்கம் இல்லாதவர்கள் ஆரம்பத்தில் ஓர் துண்டு பிறகு 2 என படிப்படியாகக் கூட்டிக்கொண்டே வரலாம். கண்களுக்கு மிகவும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.
பப்பாளிப்பழம் மார்க்கெட்டில் வாங்கும் போது விதைகள் உள்ள நாட்டுப்பழமா? என்பதை செக் செய்து வாங்கவும். விதைகள் இல்லாத ஹைப்ரிட் பழம் ருசியாக இருக்கும். ஆனால், நாட்டுப்பழம் தரும் பயன்களைத் தராது. நீள் வட்டமாக இருப்பது நாட்டுப்பழம், முழு வட்டமாக இருப்பது ஹைப்ரிட் பழம்.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை வியாதி இருப்பவர்கள் முக்கனிகள் ஆன மாம்பழம், பலாச்சுளை, வாழைப்பழம் இவற்றைத் தவிர்க்க வேண்டும். சுக்ரோஸ் எனப்படும் சர்க்கரை சத்து, குளுக்கோஸ் அதிகம் உள்ளதால் இவை உடல் எடையைக் கூட்டும்.