வக்ரதுண்ட மஹாகாய
சூர்யகோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமே தேவ
சர்வ கார்யேஷு சர்வதா
மார்கழி 1 ,(16-12-2025) இன்று மலர்கிறது.
ஒரு வருடம் நமக்கு ; தேவர்களுக்கு ஒரு நாள்.
தட்சிணாய புண்ணிய காலத்தின் கடைசி மாதம் ....
தேவர்களின் இரவுப் பொழுது முடிந்து,வைகறைப் பொழுது ,பிரம்ம முகூர்த்த
காலம்(காலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை) மார்கழி மாதம்.
சிறப்பு வாய்ந்த மாதம் என்று ஆன்மீகத்திற்காக முழுவதும் வரையப் பட்டது.
கார்த்திகையில் அந்தி சாயும் நேரத்தில், வாசலில் அகல் தீபம் வைப்பது வழக்கம்.
மார்கழி பிறந்ததும் விடியலில் தீபமேற்றி வாசலில் வைத்து, வழிபடுவதும் வழக்கம்.
மார்கழி மாதம் ,
குளிர் காலம்,
ஐயப்பனின் மண்டல காலம் முடிந்து மகர விளக்கை எதிர் நோக்கி வணங்கும் காலம்,
அகதாரில் கண்ணனின் திருவடி வணங்கி பாவை நோன்பு நோற்கும் காலம்,
ஈசனை திருவெம்பாவைப் பாடி எழுந்தருளச் செய்து பஜிக்கும் காலம்,
மாயக் கண்ணனின் பால்ய நண்பர் குசேலன் எனப்படும் சுதாமா.மார்கழி முதல் புதன்கிழமை அவர் நினைவாக வணங்கப்படும் தினம்.
அவரின் செல்வத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத நட்பு மற்றும் பக்தியின் காரணமாக, துளசி தரனால் பெரிதும் மதிக்கப்பட்டு, அவர் அறியாமலேயே பெரும் செல்வத்தைப் பெற்ற மாதம்.
நம் வீட்டு வாசல்களில் பெண்கள் சாணி மெழுகி, தண்ணீர் தெளித்து ,அழகான கோலமிட்டு, நடுவில் சாணி உருண்டையில் பூசணிப் பூவை பிள்ளையாராக பாவித்து வைக்கும் மாதம் என மாதத்தின் சிறப்புகள் அனேகம்.
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.
திருப்பாவையின் முதல் பாடல் இசைத்து கண்ணனைக் கரம் குவித்து வணங்கும் நாள்.
சூரியன் தனுசு ராசியில் பயணிக்கும் மாதம்.
மாதங்களில் நானே மார்கழி என்று கண்ணனே கூறியுள்ளார்.
மார்கழி மாதத்தில் நோன்பிருந்து மாதவனை தன் மணமகனாக பெற்றவர் சூடிக்கொடுத்த
சுடர்க்கொடி என்ற பெயர் எடுத்த ஆண்டாள்.
சூடிக்கொடுத்த சுடர்கொடி, கோதை நாச்சியார், ஆண்டாள் நோன்பிருந்து பகவானை அடைந்த மார்கழி,..
காலைத் தென்றலில் ,பெரியாழ்வாரின் பூந்தோட்டத்தில் அன்றலர்ந்த மலராக, ஶ்ரீ தேவியின் அம்சமாகத் தோன்றியவள் ஆண்டாள். சங்கத் தமிழ் வளர்த்த பாண்டிய நாட்டின் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரே ஆண்டாளின் பிறந்த ஊராகும்.
பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் என்ற பெருமை, மாலவனின் பக்தையான ஆண்டாளுக்கு உண்டு.
மானிடரும் பகவானை பக்தியால் அடையலாம் என்ற வழியை பாவ புண்ணிய செயல்களால் பிறவிகள் எடுத்து உழலும் நமக்கு சரணாகதி தத்துவத்தை தந்த பிராட்டி ஆண்டாள்.
மலரும் பூக்களில் மணமும்,நிறமும்,தேனும், அழகும் உள்ளது போல தன் மனம் என்னும் மேடையில் கண்ணன் மீது பக்தியும், அன்பும், ஞானமும், வைராக்கியமும், பரிவும் ஒருங்கே கொண்ட கோதை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, தன் தந்தை விஷ்ணுசித்தரை விட புலமையிலும், பக்தியிலும் விஞ்சி நின்றவள்.
கோதையானாள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் ரெங்கமன்னாருடன்,
பூமாலை சூடிக் கொடுத்தவள்
திருப்பாவை பாடிக் கொடுத்தவள்
நாச்சியார் திருமொழி மொழிந்தவள்,
ஆடிப்பூரத்தில் அவதரித்து
எம்பெருமானை ஆண்டவள்
ஆண்டாள் என்ற பெயர் கொண்டாள்
ஶ்ரீரங்க நாதனை ஆண்டவள் என்பதால்;
திருமால் பெருமை கண்ணன் சன்னதியில் பாடியபின்னர்,
மங்களங்கள் நல்கும் ஈசனைத்
துதித்து மணிவாசகப் பெருமான் பாடிய திருவெம்பாவை மார்கழி மாதத்திற்கு சிறப்பை நல்கும் தனித்துவமான பாடல்கள் உடையது.
சைவசமயத்தவர்கள் அதிகாலையில் எழுந்து கோவிலுக்கு சென்று திருவெம்பாவை பாடி, பக்தியிலும், மகிழ்ச்சியிலும் மூழ்கியிருக்கும் மாதம்.
"திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்"
என்று சொல்வார்கள். அவ்வாறு கல்நெஞ்சத்தையும் கசிந்துருகவைக்கும் கனிவான பாடல்களே திருவாசகப்பாடல்கள். அத்தகைய திருவாசகத்திற்கே மணியாக விளங்குவது திருவெம்பாவையாகும். திருவெம்பாவை மொத்தம் இருபது பாடல்களைக் கொண்டது.
மார்கழி என்றதும் மார்கழிக் கோலமே மனதில்
வரும்.
முதுகிற்கும்,விரல்களுக்கும் வலிமை ஊட்டும் கலை,
கோலமிடும் கலை ஆகும்.
அன்றைய புள்ளிக் கோலமும் சரி, இன்றைய வண்ணமிக்க ரங்கோலியும் சரி, காண்பவர், கண்
நிறையும் வண்ணம் நம் தேசத்திற்கே உரித்தான
கைவண்ணம்.
ஆழ்வார்களில் முதல் மூவர் இறைவனிடம் பக்தியும், சரணாகதியுமே நற்கதிக்கு நல்வழி
என பாடியுள்ளனர்.
மார்கழி மாதம் என்பது உலக மாயைகளைத் துறந்து, இறைவனோடு ஒன்றிணைந்து ஆன்மிகத்தை வளர்க்கும் ஒரு புனித மாதமாகக் கருதப்படுகிறது.

சோபனா விச்வநாதன்