news Breaking News
clock

கருணை முகடு

கருணை முகடு



 "மாரன்"


அந்தப் பெயரைக் கேட்டாலே ஊரில் எல்லோரும் பயந்து நடுங்குவர்.


தெருவில் அவன் நடந்து வந்தால்

கதவுகள் தானாக மூடப்படும்.

குழந்தைகளை இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடுவார்கள்.


“அவன் நல்லவன் கிடையாது.. ஒண்ணாம் நெம்பர் அயோக்கியன்" என்று வசை பாடாத வாயே இல்லை.


ஒரு கொலை வழக்கிற்காக நீண்ட காலமாய் சிறையில் இருந்தவன் தற்போது ஜாமீனில் வெளியே வந்திருந்தான்.


ஒரு கொட்டும் மழை இரவில் கடுமையான மின்தடை.  


ஊரே இருளில் மூழ்கிக் கிடந்தது.


அந்த இருட்டைக் கிழித்துக் கொண்டு ஒரு பெண்ணின் உச்சஸ்தாய் அலறல். 


நாலாவது வீட்டிலிருக்கும் கோமதியின்

பிரசவ வேதனைக் கத்தல்தான் அது. 


போன் சிக்னல் இல்லாத காரணத்தால்

ஆம்புலன்ஸை அழைக்க முடியவில்லை.


அக்கம் பக்கத்தார் யாரும் உதவ வரவில்லை.


வெளியூர் சென்றிருக்கும் அவள் கணவனுக்கும் தகவல் சொல்லவும் வழியில்லை. 


அந்த நேரம், இருளில் ஒரு உருவம்.


மாரன்.


அந்த வீட்டின் முன் நின்றான். நிதானமாய் உள்ளே சென்றான்.


அலறும் பெண்ணைத் தூக்கிச் சுமந்து கொண்டு கொட்டும் மழையில் ஓடினான்.


மண்ணில் வழுக்கி விழப் போனவன் சுதாரித்து நின்று, மீண்டும் ஓடினான்.


மூன்று கிலோ மீட்டர்.

காட்டு வழி கடந்து, தோப்பு வழி நடந்து,


அந்த மருத்துவமனை வாசலைத் தொட்டதும் மயங்கி விழுந்தான்.


பதறிக் கொண்டு வந்த மருத்துவமனை சிப்பந்திகள் கோமதியைத் தூக்கி ஸ்ட்ரக்சரில் போட்டு பிரசவ வார்டு நோக்கிப் பறந்தனர்.


காலை.


குழந்தையின் அழுகுரல்

மருத்துவமனைக்குள்ளிருந்து கேட்டது.


பெண் உயிருடன். குழந்தையும் உயிருடன்.


மாரன்?


கைகளில் விலங்கிடப்பட்டு

போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட,


விஷயம் கேள்விப்பட்டு கோமதியே தள்ளாட்டமாய் வந்தாள். "ஏன்?...எதுக்கு?" கேட்டாள்.


“பழைய கேஸ் சம்மந்தமா கொஞ்சம் விசாரிக்கணும்” என்றார்கள்.


அப் பெண்

மாரனின் முகத்தை பார்த்தாள் சற்றும் பயமில்லாமல்.


அவள் வாய் அவளையுமறியாமல் சொன்னது, "இவன் முகம்தான் கரடுமுரடு! .. ஆனா மனசு... கருணை முகடு!.. அந்த மனசுதான் எங்களை காப்பாத்துச்சு.”


ஊர் மௌனமானது.


மாரன் திரும்பிப் பார்த்தான்.

அவன் முகத்தில்

எந்த மாற்றமும் இல்லை.


ஆனால்—

அந்த நாளுக்குப் பிறகு

ஊர் மாரனைப் பார்த்த விதம்

மாறியிருந்தது.


(முற்றும்)


முகில் தினகரன்,

கோயமுத்தூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News