புகையிலை மற்றும் நிகோடின் பொருட்களுக்கு முழுமையான தடை விதித்தது ஒடிசா அரசு!

புகையிலை மற்றும் நிகோடின் பொருட்களுக்கு முழுமையான தடை விதித்தது ஒடிசா அரசு!


 

புவனேஷ்வர்: புகையிலை மற்றும் நிகோடினை மூலப்பொருட்களாகக் கொண்ட அனைத்துப் பொருட்களுக்கும் ஒடிசா அரசு முழுமையாக தடை விதித்துள்ளது.


பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக புகையிலை மற்றும் நிகோடினை மூலப்பொருட்களாகக் கொண்ட அனைத்துப் பொருட்களின் உற்பத்தி, பதப்படுத்துதல், பேக்கேஜிங், சேமிப்பு, போக்குவரத்து, விநியோகம் மற்றும் விற்பனைக்கு அதிகாரபூர்வமாகத் தடை விதிப்பதாக ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது.


புகையிலை பயன்பாட்டினால் பாதிப்புகள் அதிகரித்துவருவதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. ஒடிசா அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் அறிக்கையில், ‘புகையிலை அல்லது நிகோடினை கொண்ட அனைத்துப் பொருட்களும், அவை பேக்கேஜ் செய்யப்பட்டவையாக இருந்தாலும் அல்லது பேக்கேஜ் செய்யப்படாதவையாக இருந்தாலும், தனித்தனியாக விற்கப்பட்டாலும் அல்லது கலந்து பயன்படுத்தும் வகையில் விற்கப்பட்டாலும், அவை எந்தப் பெயரில் சந்தைப்படுத்தப்பட்டாலும் இப்போது ஒடிசா மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ளன.


பான் மசாலா, வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட, நறுமணமூட்டப்பட்ட, சுவையூட்டப்பட்ட மசாலாப் பொருட்களுடன் புகையிலையை மெல்லும் பழக்கம் பரவலாகப் பயன்படுத்தப்படுவது பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கிறது. இது குழந்தைகள் மற்றும் இளம் வயதினரின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது.


புகையிலை, நிகோடின் பயன்பாடு வாய் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் வாய், உணவுக்குழாய், வயிறு, கணையம், தொண்டை மற்றும் சிறுநீரகம் போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்களுடன் இது அதிகளவில் தொடர்புடையது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகளாவிய வயது வந்தோர் புகையிலை கணக்கெடுப்பின் 2வது சுற்றின் முடிவுகளில், ஒடிசாவில் வயது வந்தோரில் 42% பேர் புகையிலையை மெல்லும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர் என்றும், இது தேசிய சராசரியை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம் என்றும் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%