அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி: கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா துவக்கி வைத்தார்
கடலூர், ஆக. 21–
கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் நலம் கருதி கற்றல் கொண்டாட்டம் திட்டத்தின் கீழ் பரதம் மற்றும் கிராமிய நடனப் பயிற்சி, ஆங்கில மொழி பேச்சுப் பயிற்சி, கலை மற்றும் ஓவியம் பயிற்சி, சதுரங்க விளையாட்டு பயிற்சி, பாடல் மற்றும் இசைக் கருவிகள் வாசித்தல் ஆகிய சிறப்பு பயிற்சி வகுப்புகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் செய்தியாளர் பயணத்தில் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையிலும், வகுப்பறை கற்றலுக்கு அப்பால் சென்று மாணவர்கள் தங்கள் ஆர்வங்கள், திறமைகள் மற்றும் தலைமைத்துவ திறன்களை மேன்மைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்கும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோடை விடுமுறையில் அரசு பள்ளி மாணாக்கர்களுக்காக “கோடையில் கற்றல் கொண்டாட்டம்“ என்ற சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வி துறை மூலம் இந்த மாதம் அரசு பள்ளி மாணவர்களுக்காக 5 சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மேலும் 10 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. மாணவர்கள் உயர்கல்வி பயிலும்போது எவ்வித தயக்கமும், அச்சமுமின்றி ஆங்கிலத்தில் பேசி, பயில வேண்டும் என்பதற்காக திருப்பாபுலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பரதம் மற்றும் கிராமிய நடனப் பயிற்சி, மாணவர்கள் தங்களது தனித்திறன்களை வளர்க்கும் நோக்கில் முதுநகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில மொழி பேச்சுப் பயிற்சி, லேன்ஸ் கர்ட் (மாடியில்) சானந்த் தோட்டம், கே.வி.டெக்ஸ் அருகில், கலை மற்றும் ஓவியம் பயிற்சி, புதுப்பாளையம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சதுரங்க விளையாட்டு பயிற்சி, புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் பாடல் மற்றும் இசைக் கருவிகள் வாசித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதால் சுமார் 6,000 மாணவர்கள் பயனடைவார்கள்.
ஒவ்வொரு பயிற்சிக்கும் தனித்திறன்களை கொண்ட திறமையான ஆசிரியர்கள் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற பயிற்சி வகுப்புகளை பயன்படுத்தி தங்களது திறன்களை மாணவ மாணவிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது முதன்மை கல்வி அலுவலர் அ.எல்லப்பன், கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.