ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து
Aug 08 2025
18

சென்னை, ஆக. 6–
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 26 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி 17 பேர் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரிக்கப்பட்டது.
அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன் மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை கருத்தில்கொண்டு 26 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாக கூறினர்.மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கைது செய்யப்பட்டதற்கும், குண்டர் சட்டத்தில் அடைப்பதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கும் இடையேயான கால தாமதத்தை கருத்தில் கொண்டு குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, குண்டர் சட்டத்தில் கைது செய்த தகவலை தெரிவித்தல், ஆவணங்களை குற்றவாளிகளுக்கு தருவது, உத்தரவுக்கான அனுமதி ஆகியவற்றில் காலதாமதம் மற்றும் குளறுபடிகள் குறித்து காவல் துறையிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். மேலும், காவல் துறை தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதனையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. தீர்ப்பில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் அவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது. வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டே ஜாமின் மனுக்களை பரிசிலீக்க வேண்டும் என்றனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?