பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேர் விவரத்தை வெளியிட வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி:
பிஹார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என கடந்த ஜூன் 24-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கு குறைவான அவகாசமே உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த உத்தரவை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) உட்பட பல்வேறு தரப்பினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் முடிந்து, வரைவு பட்டியலை கடந்த 1-ம் தேதி ஆணையம் வெளியிட்டது. அதில், சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஏடிஆர் சார்பில் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பேர் எதற்காக நீக்கப்பட்டனர் என்ற விவரத்தை வெளியிடவில்லை. உயிரிழந்தவர்கள் அல்லது புலம்பெயர்ந்தவர்கள் பெயர் விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும்’’ என கோரப்பட்டிருக்கிறது.
இந்த மனு நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயான் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏடிஆர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், “நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் வழங்கி இருக்கிறது. ஆனால், அவர்கள் உயிரிழந்தார்களா, நிரந்தரமாக புலம்பெயர்ந்தார்களா என்ற விவரம் இல்லை. இந்த விவரத்தை வெளியிட உத்தரவிட வேண்டும்’’ என்றார்.
இதையடுத்து, மனுதாரர் கோருவது போல முழு விவரத்தையும் வரும் 9-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பான அனைத்து மனுக்கள் மீதும் வரும் 12-ம் தேதி விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?