இஸ்ரோ’ தலைவர் நாராயணனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் வழங்கினார்

இஸ்ரோ’ தலைவர் நாராயணனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் வழங்கினார்

சென்னை, ஆக.11-


எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்கல்வி நிறுவனத்தின் 21வது பட்டமளிப்பு விழா சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள கல்வி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மராட்டிய மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.


கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் சி.முத்தமிழ்ச்செல்வன் ஆண்டறிக்கையை வாசித்தார். இந்த விழாவில் மராட்டிய மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் நிறுவனர், வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.


மேலும் ‘இஸ்ரோ’ தலைவர் வி.நாராயணன், மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம்.ரவிச்சந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இவர்கள் இருவருக்கும் இந்த விழாவில், அறிவியலுக்கான கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.


இதுதவிர பட்டமளிப்பு விழாவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்த 8,994 பேருக்கும் (7,586 மாணவர்கள், 2,183 மாணவிகள்), முதுநிலை பட்டப்படிப்பை முடித்த 564 பேருக்கும் (423 மாணவர்கள், 141 மாணவிகள்), ஆராய்ச்சி படிப்பை முடித்த 211 பேருக்கும் என மொத்தம் 9,769 பேருக்கு மராட்டிய மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். அதுமட்டுமல்லாமல் படிப்பில் சிறந்து விளங்கிய 157 மாணவ-மாணவிகளும் கவுரவிக்கப்பட்டனர்.


விழாவில், மராட்டிய மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘நேர்மை, கடின உழைப்பு மற்றும் பொறுமை ஆகியவை வெற்றிக்கான உண்மையான திறவுகோல்களாக இருக்கின்றன. அனைவருக்கும் சவால்கள் காத்திருக்கின்றன. ஆனால் அந்த சவால்களை உறுதியுடன் எதிர்கொண்டு சமாளிப்பதன் மூலம் எதிர்காலத்தை வடிவமைத்துக்கொள்ளலாம். வாழ்நாள் முழுவதும் கற்றலை தொடருங்கள். பணிவாக இருங்கள். பெற்றோரின் தியாகங்களை எந்த நேரத்திலும் மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த மனப்பான்மை 2047-க்குள் இந்தியாவை உலகின் முன்னணி பொருளாதார சக்தியாக மாற்ற நிச்சயம் வழிவகுக்கும்' என்றார்.


34 நாடுகளின்


433 செயற்கைக்கோள்


அவரைத் தொடர்ந்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் பேசும்போது, ‘தொடக்கத்தில், அமெரிக்காவால் நன்கொடையாக வழங்கப்பட்ட சிறிய ராக்கெட் போன்ற முக்கியமான ஆதரவுடன், இந்தியாவின் விண்வெளித் திட்டம் அதன் முதல் அடியை எடுத்துவைத்தது. அப்போதிலிருந்து இந்தியா விண்வெளி தொழில்நுட்பத்தில் ஒரு பெரிய பாய்ச்சலையும், பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் ஒரு பெரிய முன்னேற்றத்தையும் அடைந்து, உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது என்றார்.


50 ஆண்டுகளுக்கு முன்பு செயற்கைக்கோள் தொழில்நுட்பம் இல்லாத இந்தியாவில், தற்போதுவரை 34 நாடுகளின் 433 செயற்கைக்கோள்களை இஸ்ரோ தயாரிப்பிலான சொந்த ராக்கெட்டுகளை பயன்படுத்தி விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது. அந்த வரிசையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 6,500 கிலோ எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக் கோளை வெற்றிகரமாக இந்தியாவில் ஏவ உள்ளோம்' என்றார்.


மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம்.ரவிச்சந்திரன் பேசுகையில், ‘கடின உழைப்பின் மூலம் ஆர்வத்தையும், நோக்கத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் திறமைகளுடன் 2047-ம் ஆண்டிற்கான நமது நாட்டின் தொலைநோக்குப் பார்வையில் இணையுங்கள், உண்மையாக இருங்கள். அப்படி இருந்தால் உங்கள் எதிர்காலம் பலனளிக்கும்' என்றார்.


இந்த விழாவில், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இணைவேந்தர் (கல்வி) பி.சத்யநாராயணன், இணை தலைவர் எஸ்.நிரஞ்சன், பதிவாளர் எஸ்.பொன்னுச்சாமி, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கே.குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%