ஓராண்டு முதுநிலை பட்டப்படிப்பு ; சென்னையில் இதழியல் கல்வி நிறுவனம்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

ஓராண்டு முதுநிலை பட்டப்படிப்பு ; சென்னையில் இதழியல் கல்வி நிறுவனம்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

சென்னை, ஆக 25–


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகம் எதிரில் அமைந்துள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார்.


இதழியல் துறையில் ஆர்வமுள்ள இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் நோக்குடனும், தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, ஊடகக் கல்வியை வழங்குவதற்காகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைய தலைமுறையினருக்கு குறைந்த கட்டணத்தில், ஓர் ஆண்டு இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பை வழங்குவதற்காகவும் சென்னை, கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றண்டு நூலகம் அருகில் தமிழ்நாடு அரசு சார்பில் “சென்னை இதழியல் கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.


சென்னை இதழியல் கல்வி நிறுவனத்திற்காக 7.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பு இந்த கல்வியாண்டு முதல் (2025–2026) தொடங்கப்படுகிறது. இங்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழியிலும் பயிற்றுவிக்கப்படுகிறது.


இந்நிறுவனத்தில் அச்சு, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய ஊடகங்களில் பணிபுரிவதற்கான திறமையை வளர்த்துக்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் இந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொள்ள உள்ளது. இந்த அனுபவம், நொடிக்கு நொடி மாறிவரும் தொழில்நுட்ப யுகத்தில் அடுத்த தலைமுறையினர் தங்களைத் தயார் செய்துகொள்ள உதவும்.


மாணவர்களிடம்


கலந்துரையாடினார்


இதழியல் கல்வியை சிறப்பாக வழங்கவுள்ள, சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை கோட்டூர்புரத்தில் முதலமைச்சர் இன்றையதினம் தொடங்கி வைத்து, பார்வையிட்டார். தொடர்ந்து, இக்கல்வி நிறுவனத்தில் இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பில் முதலாமாண்டு சேர்க்கை பெற்ற மாணவ, மாணவியர்களிடம் முதலமைச்சர் கலந்துரையாடினார்.


இந்த நிகழ்ச்சியில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், துணை மேயர் மு.மகேஷ் குமார், தமிழ் வளர்ச்சி துறை செயலாளர் வே.ராஜாராமன், இதழியல் நிறுவனத்தின் சிறப்பு பணி அலுவலர் எஸ்.ஏ.ராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா.வைத்திநாதன்,


மாநில திட்டக்குழு செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் நிருவாகக் குழுத் தலைவர் என். ரவி, தலைமை இயக்குநர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன், பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தின் துணைத் தலைவர் இமயம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவர் டிராட்ஸ்கி மருது, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைத் துறையை சார்ந்த நக்கீரன் கோபால், திருமாவேலன், கார்த்திகை செல்வன், சுரேஷ் குமார், குணசேகரன், சமஸ், லட்சுமிசுப்பிரமணியன், காமராஜ், நிருபன் சக்கரவர்த்தி, காந்தி உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%