காவலர் பார்வை

காவலர் பார்வை


ராகவனுக்கு அறுபத்து ஐந்து வயது ஆகிறது. பணியில் இருந்து ஓய்வு பெற்று ஐந்து ஆண்டுகள் விளையாட்டாக ஓடிவிட்டன.


இரண்டு பெண்களையும் பணியில் இருக்கும் போதே திருமணம் செய்து கொடுத்துவிட்டார். அதனால் எந்தவிதமான பெரிய பொறுப்புகளும் இல்லாமல் ஓய்வூதியத்தில் வாழ்க்கை இனிமையாக செல்கிறது.


பைக்கில் மனைவி குமுதாவுடன் தினமும் கோயில் குளம் என்று போய்விட்டு வருவது தான் அவரது பொழுதுபோக்கு.


ராகவனுக்கு எல்லாமே முறையாக சட்டப்படி நடக்க வேண்டும்.  சட்டத்துக்கு புறம்பாக எதை செய்தாலும் அவருக்கு பிடிக்காது.


வாகனத்தில் வெளியில் செல்லும்போது அனைத்து

பேப்பர்களையும் ரெடியாக வைத்திருப்பார். 


பைபாஸ் சாலையை கடந்து செல்லும்போது ஒரு இடத்தில் கூட்டமாக போலீஸ்காரர்கள் நின்று கொண்டு சாலையில் செல்லும் வாகனங்களை ஓரங்கட்டினார்கள். 


 டிரைவிங் லைசென்ஸ் வண்டியின் இன்சூரன்ஸ் போன்ற முக்கியமான ஆவணங்களை சரிபார்த்து அவை இல்லாமல் பயணித்தவர்களுக்கு அபராதம் விதித்தார்கள்.


ராகவனும் தன்னுடைய இருசக்கர வாகனத்தை ஓரமாக மரத்தடியில் நிறுத்தினார். எங்கேயாவது வாகன சோதனை நடைபெறும் போது தனது ஆவணங்களை காட்ட வேண்டும் என்று ராகவனுக்கு ஒரு ஆசை. அது இன்று வரை நிறைவேறவில்லை.


 எங்கே வாகன தணிக்கை நடைபெற்றாலும் ராகவனின் தோற்றத்தை பார்த்த காவலர்கள் " நீங்க போங்க சார் " என்று அவரை அனுப்பி விடுவார்கள்.


அதற்கு இன்று தான் நேரம்  வாய்த்திருக்கிறது என்று நினைத்தார். அங்கு வந்த வயதான காவலர் ஒருவர் ராகவனை பார்த்து,


" நீங்கள் ஏன் சார் நிக்கிறீங்க.... உங்கள யாரும் நிப்பாட்ட சொல்லலையே ... "

என்றார்.


" எல்லாரையும் சோதனை பண்றீங்களே ......என்னுடைய ஆவணங்களையும் காட்டலாம் என்று தான் நிற்கிறேன் "


" நாங்கள் முகத்தைப் பார்த்தே நல்லவங்க யாரு வில்லங்கமானவங்க யாருன்னு கண்டுபிடிச்சுடுவோம். அவங்க கிட்ட மட்டும் தான் ரெக்கார்டுங்கல பாப்போம். நீங்க போங்க ! "

என்றார். 


" இப்படி வாகன சோதனை செய்யும் போது கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக பல குற்றவாளிகள் அகப்படுவதுண்டு. நேற்று சோதனையின்போது பைக்கில் சென்று சங்கிலி அறுக்கும் திருடர்கள் இருவர் மாட்டினார்கள் "


" போன வாரம் கொலை செய்துவிட்டு தப்பி வந்த

இரண்டு கூலிப்படையினர் அகப்பட்டார்கள் " என்று காவலர் சொல்லிக் கொண்டே போனார்.


வாகன தணிக்கையில் இப்படி பல விஷயங்கள் இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே பைக்கை கிளப்பினார் ராகவன்.


                

வளர்மதி ஆசைத்தம்பி

தஞ்சாவூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%