தமிழகம் முழுவதும் உடல் உறுப்பு திருட்டை விசாரிக்க ஐஜி தலைமையில் சிறப்பு படை: ஐகோர்ட் உத்தரவு
மதுரை:
தமிழகம் முழுவதும் நடந்த உடல் உறுப்பு திருட்டை விசாரிக்க ஐஜி தலைமையில் சிறப்பு படை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவின் விவரம்: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்களிடமிருந்து சட்டவிரோத சிறுநீரக திருட்டு நடைபெற்று ள்ளது. ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வழங்கி சிறுநீரகத்தை பெற்றுள்ளனர். இது மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றுச் சட்டப்படி குற்றமாகும்.
இருப்பினும் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. சிறுநீரக திருட்டில் அரசியல் கட்சியினருக்கு தொடர்புள்ளது. இதனால் மாநில போலீஸார் விசாரித்தால் உண்மை வெளிவராது. சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: பள்ளிப்பாளையம் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக அரசு அமைத்த குழுவின் விசாரணையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றுச் சட்டப்படியும், பிஎன்எஸ் சட்டப்படியும் வழக்கு பதிவு செய்தும் விசாரித்து இருக்க வேண்டும்.
ஆனால் அரசு தரப்பில், ‘முறைகேடு தொடர்பாக இரு மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று சட்டப்படி விசாரணை நடந்து வருவதால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை’ எனக் கூறப்பட்டுள்ளது. சட்டவிரோத உடல் உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சை நடைபெற்றிருப்பது தெரியவந்தால் போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.
இதுபோன்ற முறைகேடு புகார் தொடர்பாக டெல்லி, தெலங்கானா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களிலும், தமிழகத்தில் தருமபுரியிலும் ஏற்கெனவே குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் வழக்கில் தலைமை மருத்துவ அதிகாரி பள்ளிப்பாளையம் காவல் ஆய்வாளருக்கு புகார் அனுப்பியுள்ளார். இருப்பினும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் செல்வாக்கான பின்னணியில் உள்ளவர்களால் நடத்தப்படுகிறது. இதனால் சட்டவிரோத உடல் உறுப்பு மாற்று தொடர்பாக உள்ளூர் போலீஸார் விசாரித்தால் உண்மை வெளிவராது. முறையாக விசாரணை நடத்தி முழு உண்மையையும் வெளிக்கொண்டு வர வேண்டும்.
அரசு தரப்பில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றலாம் எனக் கூறப்பட்டது. எனினும், சிறப்பு படை விசாரணைக்கு மாற்ற நீதிமன்றம் முடிவு செய்து, அக்குழுவில் இடம் பெற வேண்டிய அதிகாரிகளின் பட்டியலை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, அரசு தரப்பில் சிபிசிஐடி எஸ்பி, டிஎஸ்பி, ஆய்வாளர் பெயர் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. இப்பட்டியல் மீது நீதிமன்றத்துக்கு நம்பிக்கையில்லை.
இதனால் நியாயமாக விசாரணை நடத்தும் ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற கூடுதல் பதிவாளர் ஜெனரலுக்கு உத்தரவிடப்பட்டது. அவர் ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியலை தாக்கல் செய்துள்ளார். அதன்படி, தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நிஷா (நீலகிரி), சிலம்பரசன் (நெல்லை), கார்த்திகேயன் (கோவை), அரவிந்த் (மதுரை) ஆகியோர் அடங்கிய சிறப்பு படை அமைக்கப்படுகிறது.
இந்த சிறப்பு படை நாமக்கல் தலைமை மருத்துவ அதிகாரி அளித்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து தமிழகம் முழுவதும் நடைபெற்ற சட்டவிரோத உடல் உறுப்பு திருட்டு தொடர்பாக விசாரணை நடத்தி செப்.9-ல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.