தமிழ்நாட்டில் அரசு தொடக்கப் பள்ளிகளில் நடப்பு ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் அதிக அளவு மாணவர் சேர்க்கை: தென்காசி மாவட்டம் முதலிடம், திண்டுக்கல் 2–ம் இடம், திருச்சி மூன்றாமிடம்
திருச்சி, ஆக. 4–
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இந்தாண்டில் ஒன்றாம் வகுப்பில் அதிக அளவு மாணவர் சேர்க்கையில் மாணவர் சேர்க்கையில் 8,571 மாணவர்களுடன் தென்காசி கல்வி மாவட்டம் முதலிடத்தையும், 8 ஆயிரம் மாணவர்களுடன் திண்டுக்கல் கல்வி மாவட்டம் இரண்டாமிடத்தையும், 7,711 மாணவர்களுடன் திருச்சி கல்வி மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு இலவச சீருடை, நோட்டுப் புத்தகங்கள், காலணிகள், புத்தகப்பை உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், மழலையர் வகுப்புகள் குறிப்பிடத்தக்கது. தனியார் பள்ளிகளில் பல ஆயிரம் ரூபாய் செலுத்தி மழலையர் வகுப்புகளில் சேர்க்க முடியாத பெற்றோர், தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் செயல்படும் மழலையர் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
மாணவர் அதிகரிக்க காரணம்
மழலையர் வகுப்புகள் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும் அங்கின்வாடி மையத்தில் மட்டுமே தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. இதை அனைத்துப் பள்ளிகளிலும் விரிவு படுத்த வேண்டும் என்று பெற்றோர் எதிா்பார்த்து உள்ளனர். இதேபோல, கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டமும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க முக்கியக் காரணமாக உள்ளது.
தமிழகத்தில் ஆண்டு தோறும் அரசுப் பள்ளிகளில் புதிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிகழாண்டில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி வரை 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். மழலையர் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை 4 லட்சத்து 364 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். இதில், மழலையர் வகுப்பில் 32,807 மாணவர்கள், ஒன்றாம் வகுப்பு தமிழ் வழியில் 2,11,563 மாணவா்கள், ஆங்கில வழியில் 63,896 மாணவர்கள், இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 92,098 மாணவா்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலப் பிரிவில் 2 லட்சத்து 75 ஆயிரத்து 459 மாணவா்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.
தென்காசி முதலிடம்
தமிழகத்தில் 120 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில், மாணவர் சேர்க்கையில் 8,571 மாணவர்களுடன் தென்காசி கல்வி மாவட்டம் முதலிடத்தையும், 8 ஆயிரம் மாணவா்களுடன் திண்டுக்கல் கல்வி மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 7,711 மாணவா்களுடன் திருச்சி கல்வி மாவட்டம் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன. அதற்கடுத்து 7,554 மாணவர்களுடன் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டம் நான்காமிடத்தையும், 7,386 மாணவா்களுடன் திருவண்ணாமலை கல்வி மாவட்டம் ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளது.
இதேபோல குறைந்த மாணவர் சேர்க்கையில் 1,022 மாணவர்களுடன் நீலகிரி கல்வி மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. 2,207 மாணவர்களுடன் தேனி கல்வி மாவட்டம், 2,480 மாணவர்களுடன் ஒட்டன்சத்திரம் கல்வி மாவட்டம், 2,594 மாணவா்களுடன் தாராபுரம் கல்வி மாவட்டம், 2,397 மாணவர்களுடன் பொள்ளாச்சி கல்வி மாவட்டம் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து உள்ளன.
சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தில் கீழ் தமிழகத்துக்கு தரவேண்டிய ரூ.2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதியை மத்திய அரசு கடந்த இரண்டாண்டுகளாக நிறுத்தி வைத்துள்ளது. இதனால், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கையும் தமிழகத்தில் கடந்த இரண்டாண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளன. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களுக்கு இலவசமாக மாணவர் சேர்க்கை வழங்கப்பட்டு வந்தது. இதற்கான நிதி அரசு சார்பில் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மத்திய அரசு நிதியை நிறுத்தியதால், தமிழகத்திலும் ஆர்டிஇ திட்டத்தில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது. இதனால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக உயா்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஆர்டிஇ திட்டத்தில் தனியார் பள்ளிகளில் சேர்க்கையை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, அதற்காக செலவிடப்படும் தொகையை, அரசுப் பள்ளியின் அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தினால், அரசுப் பள்ளிகளின் தரமும் உயரும், மாணவர்களின் சேர்க்கையும் அதிகரிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.