திருப்பத்தூரில் தென்மண்டல அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டி

திருப்பத்தூரில் தென்மண்டல அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டி



சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அறக்கட்டளை சார்பாக 79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாபெரும் சிலம்பம் போட்டி லிம்ரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 9 வது ஆண்டாக தென் மண்டல அளவில் நடைபெறும் இந்த போட்டியில் திருச்சி, கமுதி, மதுரை, உறையூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் இளம் வீரர், வீராங்கனைகள் சிலம்பத்தில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர். போட்டி காலை 11 மணிக்கு தொடங்கப்பட்டு, முதலில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக வயதின் அடிப்படையில் தனித்திறமை போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாலையில் ஆரம்பிக்கப்பட்ட குழுப்போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த குழுக்கள் ஒட்டுமொத்தமாக தங்களது திறமைகளை திடலில் தீ பறக்க அசத்தினர். ஒவ்வொரு குழுவும் ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு, சுருள்வாள், மான் கொம்பு சுற்றியும் பல திறமைகளை வெளிப்படுத்தியும் அசத்தினர். அதோடு அருவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்கும் பொழுது அதில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது போன்ற கலையையும் மிக துல்லியமாக செய்து காண்பித்தனர். சிலம்பாட்ட ஆசான்கள், வீரர்கள், சிறுவர்கள் என அனைவரும் தீப்பந்தம் கொளுத்தி திடலில் ஆடும்போது, பார்வையாளர்கள் சாகசங்களை பார்ப்பது போல் பார்த்தனர். குழுபோட்டிகளில் கலந்து கொண்ட அணிகளில் முதலாவது பரிசை மதுரை ரிசர்வ்லைன் ஸ்ரீ மாரியம்மன் சிலம்பாட்ட கலைக்குழுவினரும், இரண்டாவது பரிசை திருச்சி உறையூர் முத்தமிழ் சிலம்பம் குழுவினரும், மூன்றாவது பரிசை திருச்சி அகத்தியர் சிலம்பக்கூடம் குழுவினரும் பெற்று அசத்தினர். அவர்களுக்கு பிரம்மாண்ட கோப்பைகள், சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்த சிலம்பாட்ட போட்டிகளில் நடுவர்களாக மதுரை மாரிமுத்து ஆசான் தலைமையிலான 15 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிங்கம்புணரி முன்னாள் யூனியன் சேர்மன் திவ்யா பிரபு,அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, தொழிலதிபர் மணிகண்டன் ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை நேதாஜி அறக்கட்டளை நிறுவனரும், நேதாஜி சிலம்ப பயிற்சி ஆசானுமான மதிவாணன் செய்திருந்தார். சோழம்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் சகாயராஜ், இளமுருகு , பசுமை பாரதம் செயலாளர் நாகசிதம்பரம் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%