மக்கள் வரிப் பணத்தில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலையை தனியாருக்கு விற்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்

மக்கள் வரிப் பணத்தில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலையை தனியாருக்கு விற்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்

சென்னை, ஆக. 11–


சென்னையை அடுத்த வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரையிலான 60 கி.மீ நீள சென்னை வெளிவட்டச் சாலையை தனியாருக்கு விற்பனை செய்ய திமுக அரசு முடிவு செய்திருக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட நெடுஞ்சாலையை தனியாருக்கும் விற்பனை செய்து, அதன் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனங்கள் மக்களிடம் சுங்கக்கட்டணம் வசூலித்து சுரண்ட அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


சென்னையைக் கடந்து மற்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் சென்னை மாநகருக்குள் வருவதைத் தவிர்க்கும் வகையில் சென்னை வண்டலூரில் தொடங்கி நெமிலிச்சேரி வழியாக மீஞ்சூர் வரை மொத்தம் 60.15 கிமீ தொலைவுக்கான வெளிவட்டப்பாதை கடந்த ஆட்சியில் ரூ.2156.40 கோடி செலவில் இரு கட்டங்களாக அமைக்கப்பட்டது. சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கும் இந்த சாலையை தனியாருக்கு விற்பனை செய்ய திமுக அரசு முடிவு செய்திருக்கிறது. அதன்படி இந்தச் சாலையை ஒப்பந்தப்புள்ளிகள் வாயிலாக ஏலத்தில் எடுக்கும் தனியார் நிறுவனங்களுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்க உரிமம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.


மத்திய அரசின் சொத்துகளை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மு.க.ஸ்டாலின், மாநில சொத்துகளை மட்டும் தனியாருக்கு மலிவு விலையில் விற்பனை செய்வது எந்த வகையில் நியாயம்? சமூகநீதி, மக்கள் நலன் உள்ளிட்ட எந்த சிக்கலாக இருந்தாலும் திமுக சொல்வதும்,, செய்வதும் வெவ்வேறானவை தான்; எந்த சிக்கலாக இருந்தாலும் இரட்டை வேடம் போடுவது தான் திமுகவின் இயல்பு என்பதற்கு இதை விட சிறந்த எடுத்துக்காட்டு எதுவும் இருக்க முடியாது.


வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் இன்றைய நிலையில் சராசரியாக தினமும் 31 ஆயிரம் வாகனங்கள் பயணிக்கின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்த சாலையிலிருந்து 25 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ரூ.45 ஆயிரம் கோடி வரை சுங்கக்கட்டணம் வசூலிக்க முடியும். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சாலையை வெறும் ரூ.2000 கோடிக்கு தனியாருக்கு தாரை வார்ப்பது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். இதன் பின்னணியில் என்ன பேரம் நடந்திருக்கும்? என்பதைப் புரிந்து கொண்டாலே, மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட வெளிவட்டச் சாலையை தனியாருக்கு தாரை வார்க்க திமுக துடிப்பது ஏன்? என்பதை புரிந்து கொள்ளலாம்.


மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கட்டமைப்புகள் மக்களின் சொத்துகளாகவே நீடிக்க வேண்டும். எனவே, வண்டலூர் – மீஞ்சூர் இடையிலான வெளிவட்டச் சாலையை தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும்; இந்த சாலையில் கட்டணம் வசூலிப்பதையும் நிறுத்த வேண்டும்.


இவ்வாறு அந்த கூறிக்கையில் கூறியுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%