முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு 50 மார்க் தான்” - பிரேமலதா விஜயகாந்த் மதிப்பீடு
Aug 08 2025
30

வேலூர்:
“முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நிறையும் குறையும் கலந்த ஆட்சியாக உள்ளதால், அதற்கு மார்க் 50 தான்” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
வேலூர் மாவாட்டம் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தேமுதிக மாநகர பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஆக.6) நடைபெற்றது. இதில், ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற பயணத்தின் ஒரு பகுதியாக இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது, ”எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியும் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் புகைப்படத்தையோ, வசனங்களையோ பயன்படுத்தக் கூடாது. தேர்தல் நேரத்தில் கூட்டணியில் இணையும் கட்சி மட்டும் அதனை பயன்படுத்தலாம். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான திட்டங்களை தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
யாருடன் கூட்டணி என்பது ஜனவரி 9-ம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும். தற்போதைக்கு கட்சி வளர்ச்சிக்கே முக்கியத்துவம் தருகிறோம். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. ஆணவப் படுகொலைகள், லாக்கப் படுகொலைகள், போதைப் பொருட்கள் விற்பனை, கொள்ளை, கொலை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சட்டத்தை கையில் வைத்திருக்கும் முதல்வர், இவை அனைத்தையும் கையாள தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆவணப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வந்தால், அதை தேமுதிக வரவேற்கும். தமிழக அரசியல் ஜனநாயகத்தில், எந்தவொரு மதம், சாதிக்கும் அப்பாற்பட்ட அணுகுமுறையோடு தான் நாங்கள் செயல்படுகிறோம். அதை எங்கள் தலைவர் விஜயகாந்த் ஏற்கெனவே கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நிறையும் குறையும் கலந்த ஆட்சியாக உள்ளது. அதற்கான மார்க் 50 தான். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தங்கள் கடமையை செய்துகொண்டிருகிறார். எதிர்க்கட்சியின் பங்கு அரசை விமர்சிப்பதுதான். எல்லோருக்கும் தங்களது கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் தான் இருக்கின்றனர். தேமுதிகவும் அதே நோக்குடன் செயல்படுகிறது. குடியாத்தத்தில் ‘கேப்டனின் ரத யாத்திரை’ தொடங்கப் படுகிறது. இந்த யாத்திரை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?