ரூ. 1 லட்சம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் துறை அதிகாரி கைது
Aug 24 2025
24

புதுச்சேரி, ஆக. 22–
தனியார் நிறுவனத்திற்கு ஆள்சேர்ப்பு உரிமம் வழங்க, 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மத்திய உதவி தொழிலாளர் ஆணையரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் ஜெயா நகர், பி.எஸ்.என்.எல்., குடியிருப்பு வளாகத்தில் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, உதவி தொழிலாளர் ஆணையராக பணியாற்றி வரும் ரமேஷ்குமார், 32; தனியார் நிறுவனங்கள் ஆள்சேர்ப்பு உரிமம் வழங்க லஞ்சம் வாங்குவதாக சி.பி.ஐ.,க்கு புகார் சென்றது.
அதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், புகார் உண்மை என தெரியவந்தது. அதன்பேரில் சென்னை சி.பி.ஐ., அலுவலகத்தில் இருந்து டி.எஸ்.பி., சேதுமாதவன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் கடந்த ஒரு வாரமாக புதுச்சேரியில் முகாமிட்டு, மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை கண்காணித்து வந்தனர். அப்போது பைக்கில் வந்த நபர், உதவி தொழிலாளர் ஆணையர் ரமேஷ்குமாரிடம் ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்தார். அப்போது, அங்கு பதுங்கியிருந்த சி.பி.ஐ., குழுவினர், இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர் இருவரையும் தனித்தனியே வைத்து விசாரித்தனர். தேனியை சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனம், தங்கள் நிறுவனத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருவதற்காக உரிமம் கோரி, புதுச்சேரியில் இயங்கி வரும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளது. மனுவை ஆய்வு செய்த உதவி ஆணையர் ரமேஷ்குமார், ரூ.1.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இறுதியாக 1 லட்சம் ரூபாய் கேட்டார்.
அந்த நிறுவனம், புதுச்சேரி தேங்காய் திட்டை சேர்ந்த இளங்கோ என்பவர் மூலம் பணத்தை கொடுத்து அனுப்பியது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து சி.பி.ஐ., அதிகாரிகள், அதே ஜெயா நகர் 4வது குறுக்கு தெருவில் உள்ள உதவி ஆணையர் ரமேஷ்குமார் வீட்டில் மூன்று மணி நேரம் சோதனை நடத்தினர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் டி.எஸ்.பி., சேதுமாதவன் தலைமையிலான குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இளங்கோவின் மனைவி மற்றும் மகனையும் வரவழைத்து விசாரித்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?