வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு) 15.08.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு) 15.08.25


  நலம் தரும் மருத்துவத்தில் 'சுவாச மண்டலத்தை பாதுகாக்கும் கஷாயம்' தயாரிப்பு முறையை சொல்லியிருந்தது எனக்கு மிகவும் பயனாக இருந்தது. எனக்கு சளி, இருமல், மூக்கில் தொடர்ந்து நீர் ஒழுகுவது போன்ற தொந்தரவுகள் அவ்வப்போது வந்து வந்துப்போகும். இனி இந்த பின்விளைவு இல்லாத கஷாயத்தை தயாரித்து அருந்தவேண்டியதுதான் என்று முடிவு செய்திருக்கிறேன்.


  அரசியல் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சரியான கொள்கை இல்லை. அரசியல் கூட்டங்களுக்கு கூடும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்ன செய்வார்கள்? யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அங்கேதான் போவார்கள். இன்றைய இந்த உண்மை நிலையை தமிழ்ச்செம்மல் நன்னிலம் இளங்கோவன் 'அரசியல் வியாபாரம்' என்ற கதைமூலம் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.


  தஞ்சாவூர் எழுத்தாளர் ஹரணியின் நாவலாக இருக்கட்டும், சிறுகதையாக இருக்கட்டும் அல்லது கவிதையாக இருக்கட்டும் எதையும் ஒரு தனித்தரத்தில் உயிரோட்டமாக எழுதுவார். 'பழசுதான் பழுதல்ல' என்ற சிறுகதையும் ஒரு வாழ்க்கைப்பாடம் போல இருந்தது. இன்னும் அந்த செருப்பு தைப்பவரின் பேச்சு என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.


  அப்பூதியடிகள் வரலாறு தெரிந்த கதைதான் என்றாலும், சிவ.முத்து லட்சுமணனின் எழுத்தில் படிக்கும்போது ஒரு தனி மகிழ்ச்சியை தருகிறது. அதுவும் இந்த தொடருக்கான ஓவியங்கள் சரித்திரக்காலத்திற்கே கொண்டு செல்கிறது.


  அலமேலு ரங்கராஜன் ஆவணி மாத சிறப்புகளை புராண இதிகாச தகவல்களுடன் அழகாக சொல்லியிருக்கிறார். நான் பள்ளிக்கூட மாணவனாக இருந்த காலத்திலெல்லாம், ஆவணி மாதம் வந்தாலே தீபாவளிக்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கிறது என்று காலண்டரின் தாளை எண்ண ஆரம்பித்துவிடுவேன்!


  இந்த காலத்தில் பெரும்பாலான விருதுகள் எப்படி கொடுக்கப்படுகிறது என்ற உண்மையை தனது 'விருது...விருது..' என்ற கவிதையில் உரக்கச் சொல்லியிருக்கிறார் வே.கல்யாண்குமார். 'தகுதி அறிந்து தக்கவர்க்கு காசின்றி.. படைப்பை ஆய்ந்து... பணமின்றி தந்தால் விருது.. மற்றதெல்லாம் பதரு' என்று கவிஞர் கூறியிருப்பது மிகச் சரியான ஒன்றாகும்.


-சின்னஞ்சிறுகோபு,

 சிகாகோ.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%