வாசகர் கடிதம் (P. கணபதி) 10.08.25

வாசகர் கடிதம் (P. கணபதி) 10.08.25


இன்றைய ஆனந்த பாஸ்கரில் சில :


பிரதமரின் வளர்ச்சி அடைந்த 

பாரதத்துக்கான வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் E P F நிதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் பதிவு செய்து முதல் முறை வேலைக்கு செல்பவருக்கும் பணி அமர்த்துபவருக்கும் உதவித் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத் தக்கது. 


மக்களுக்கு நீதி வழங்குவதன் தரநிலை வெளிவந்துள்ளது. 18 பெரிய மாநிலங்களில் 5.6 புள்ளிகள் பெற்று தமிழகம் 5 ஆவது நிலை பெற்றுள்ளது. நாம் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம். குஜராத் 5.07 புள்ளியுடன் 11 வது இடமும், உ. பி. 3.92 புள்ளியுடன், 17 ஆவது இடமும் பெற்றுள்ளது கவனம் பெறுகிறது. இரண்டுமே மத்திய அரசின் டார்லிங் ஸ்டேட்கள் அல்லவா? 


ட்ரம்ப் அவர்களும் புடின் அவர்களும் சந்திக்க இருப்பது உலக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வது என்பது உக்ரைன் முற்றிலும் சரண் அடைவதற்கு சமம் என்று ஜெலன்ஸ்கி கூறுகிறார். டிரம்ப் அவர்களின் பேச்சும் அதையே பிரதிபலிக்கிறது.


சாதி என்னும் சாபக்கேட்டைக் கண்டு காதல் அஞ்சி மறைவதை அழகாக சொல்லாமல் சொல்லுகிறது "சொல்லாத ரகசியம்' என்ற சிறுகதை. பாராட்டுக்கள். ஆனால் ஏராளமான எழுத்துப் பிழைகள். 


இனி, தமிழ்நாடு இ இதழ் செய்திகள் குறித்து :


அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகளை நீக்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சல்லடையில் சிக்காத சில கட்சிகள் தமிழகத்தில் இன்னும் 

உயிர்த்துக் கொண்டுள்ளன.


ஒரு சாண் வயிற்றுக்காக உயிரைப் பணயம் வைத்து தொழில் புரிவதில் மீனவர்களும், பட்டாசு ஆலைப் பணியாளர்களும் ஒரே தளம் தான். விருதுநகர் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 4 வெடி விபத்து, 16 பேர் பலி என்பது இன்றைய செய்தி. தரையில் தீயோடும், தண்ணீரில் தீயோரான இலங்கையரோடும் போராடும் இவர்கள் வாழ்வில் நிம்மதி என்பது கானல் நீரே. 


பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான 2 சுற்று கலந்தாய்விலும்

95,435 இடங்கள் மீதமுள்ளதாகவும், 22 கல்லூரிகளில் ஒரு இடமும் நிரம்பாத நிலையும்...... அட! என்ன ஒரு முரண் பட்ட நிலை என்று வியக்க வைக்கிறது. 


கோரக்பூர் எம். பி. ரவி கிஷன் சமோசாவுக்காக சூடாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார். அவர் சன்சத் ரத்னா பட்டம் பெற்றவராமே.

 அவருக்கு சமோசா ரத்னா என்ற பட்டமே பொருத்தமாகும். 


பூஜை அறையில் தண்ணீர் வைக்க வேண்டியதன் அவசியம், அதன் தாத்பர்யம், அது சம்பந்தமான ஆலோசனைகள் பற்றிய விரிவான கட்டுரை சிறந்த, பயனுள்ள படைப்பு. பாராட்டுக்கள். 


வே. காளியாபுரம், ம. முத்துக்குமார் அவர்களின் கவிதை பலவிதமான காதல் படிமங்களின் பள்ளியறை. மனதை அடிமைகொள்ளும் கவிதைச் சிறை.

"மௌனங்களின் பசியாறலில் செரிக்கப்படுவது....... இறுதி செய்யப்பட்ட கவிதை ஒன்றில் ஆதாமும், ஏவாளும் பிரிந்து தவிக்கிறார்கள், நாம் புரியாதாபடி" என்ற கற்பனை நயங்களின் சொல்லாடல்கள் என்னை மிகவும் ஈர்த்தன. பாராட்டுக்கள். 


அமரர். நா. நாகராஜன் அவர்களை நினைவு கூர்ந்து நமது இதழில் கண்ணீர் அஞ்சலி தெரிவிக்கப்பட்டுள்ளது. "அவர் மறைந்தாலும் அவருடைய படைப்புகள் மூலம் அவர் என்றும் நம்முடன் வாழ்வார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இ பேப்பர் டாட் காம் ஆசிரியக் குழுமத்தார் வாசக சொந்தங்களின் மீது கொண்டுள்ள வாஞ்சையும், மனிதபிமானமும் வெளிப்பட்டு நெகிழச் செய்கிறது. தங்களின் பரந்த மனதுக்கும், கடமை உணர்ச்சிக்கும் 

தலை வணங்குகிறேன். 


தெய்வம் இதழ் மூலமாக எட்டு சான்றோர்கள் கொண்ட ஆசிரியர் குழு (Editorial Board) அமைக்கப்பட்டுள்ளதை அறிந்து கொண்டேன். எட்டு யானைகள் - அஷ்ட திக்கு கஜங்கள் - பிரபஞ்சத்தின் எட்டு திசைகளையும் தாங்கி நிற்பதாக புராணம் சொல்கிறது. மன்னர் கிருஷ்ணதேவராயர் அரசவையை மூதறிஞர், கவிஞர் அல்லசானி பெத்தன்னா தலைமையில் அவர் உள்ளிட்ட எட்டு சான்றோர்கள் அலங்கரித்து மன்னருக்கு ஆலோசனைகளை வழங்கி சிறப்பான ஆட்சிக்கு வழியமைத்தனர். அந்த மன்னரின் காலம் (1509 - 1529) விஜயநகர சாம் ராஜ்யத்தின் பொற்காலம் எனப்பட்டது. அந்த அறிஞர் பெருமக்கள் அஷ்டதிக்கஜங்கள் என்று அறியப்பட்டனர்.


அதேபோல் தெய்வம் இதழுக்கும் அஷ்டதிக்கஜங்களாக ஏற்றம்மிகு எட்டு சான்றோர் வந்து அமைந்துள்ளனர். அவர்களது அறிவுத்திறன், சிந்தனைச் செறிவு, ஆன்மிக நாட்டம், பத்திரிகைத் துறை அனுபவம் எல்லாம் இணைந்த தொகுப்பாக தெய்வம் இதழின் மேம்பட்ட சேவைக்கு யானை பலம் சேர்க்கும் என உறுதியாக நம்புகிறேன். நமது இ இதழின் வாசக சொந்தங்களின் சார்பாக எட்டு சான்றோர்களையும் மகிழ்வுடன் வரவேற்கிறேன். வாருங்கள்! தெய்வம் இதழின் பொற்காலம் படையுங்கள். 


நாளை சந்திப்போம். நன்றி.


P. கணபதி

பாளையங்கோட்டை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%