அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்.
நமது தமிழ்நாடு இ இதழில் நான் முதலில் படிப்பது கடைசிப் பக்கம் தான். அதில் உலக அரசியலின் ஒலியைத் தெளிவாகக் கேட்க முடிகிறதே காரணம். அதிலும் அமெரிக்காவின் குரலாக ட்ரம்ப் என்ன திருவாய் மலர்ந்துள்ளார் என்பதில் எனக்கு தனி கவனம். வழக்கம் போல் இந்தியா மீது குற்றச்சாட்டு, அபாண்டம், கடுப்பு. ராகுவும் கேதுவும் சேர்ந்து சூரியனை விழுங்குமாமே. அதுபோல வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீக்விட்டும் ட்ரம்புடன் சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக வெறுப்பை உமிழ்கிறார். "நிச்சயம் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்" என்று ட்ரம்ப் திருவாய் மலர்ந்துள்ளது சற்று ஆறுதலாக உள்ளது. "அது"இடம் போனால் என்ன வலம் போனால் என்ன. நல்லது நடந்தால் சரிதான்.
குற்றவாளி ஆட்சியாளர்களை பதவி நீக்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளனர். எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கான காரணங்களை நோக்கும்போது மசோதாவின் பாதை சரிதான் என்றாலும் இலக்கு சர்ச்சைக்கு வழிகோலுகிறதே. முக்கியமான மசோதாக்கள் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளில் அறிமுகப்படுத்தும் தந்திரம் சுட்டிக்காட்டப் படுவதும், இந்தியா பின்னோக்கி செல்கிறது என்ற அவர்களின் கூற்றும் சிந்தனைக்கு உரியது.
"தமிழக அரசு பதாகையில் மரம் வளர்க்கும். மண்ணில் மரம் வளர்க்காது. க்ளீன் இந்தியா இருக்கு. க்ரீன் இந்தியா இல்ல" என்ற சீமான் அவர்களின் வார்த்தை சீற்றம் வசீகரமாக உள்ளது.
திருச்செங்கோடு அருள் மிகு அர்த்தனாரீஸ்வரர் ஆலயத்தில் CCTV கேமரா பொருத்தும் விவகாரம் சிதம்பரம் கோயில் பிரச்சினை போல முற்றிவிடக்கூடாது. சக்தியும் சிவனும் ஓருடலாக காட்சியளிப்பதைப் போல அறிவியல் கருவி (CCTV)யும், ஆகம விதியும் இணைந்து பக்தர்களுக்கு பயன் விளைவிக்கட்டும்.
சித்த மருத்துவர்களின் வாரிசுகளை மருத்துவர்களாக ஏற்க முடியாது என்ற உயர்நீதி மன்றத் தீர்ப்பு வரவேற்கத் தக்கது.
முகில் தினகரன் அவர்கள் ஒரு உயர்ந்த சமூக விழுமியத்தை "தந்தையின் மகள்" என்ற கதையில் பொதிந்து தந்துள்ளது அருமை. கதையின் நேர்மறை அணுகுமுறை கவனம் ஈர்க்கிறது. பாராட்டுக்கள்.
காசி யாத்திரை குறித்த பயண அனுபவம் சிறப்பு. பாரதி சிலகாலம் வாழ்ந்த நகரம். குமரகுருபர சுவாமிகள் சாதனை நிகழ்த்திய நகரம். மானிட முக்திக்கு முழு விலாசமாகத் திகழும் நகரம். அதில் கால் பதிக்கும் பேறு பெற்றவராக விளங்குகிறார் திருமதி. கோமளவல்லி அவர்கள். "See Naples and die" என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு. காசியை நினைக்கும் போது "See Kasi before you die" என்று சொல்லத் தோன்றுகிறது.
வழக்கம் போல் நறுமுகை அவர்களின் "மனதோடு ஒரு குரல்" அற்புதமான கவிதை.
பி. சுரேகா அவர்களின் வாசகர் கடிதம் இ இதழின் தலைப்புச் செய்திகளின் தொகுப்பாக அமைகிறது. அவர் கடிதத்தைப் படித்தாலே போதும். முதல் நாள் தவற விட்ட இ இதழ் முழுவதையும் வசித்த அனுபவம் பெறலாம். அவ்வளவு நுணுக்கமாக இதழ் முழுவதையும் அவர் உள்வாங்கியிருக்கிறார் என்று புரிகிறது. கடினமான கணக்கு ஒன்றிற்கு சமன்பாடு Formula மாதிரி உள்ளது அவரது கடிதம். வாழ்த்துக்கள்.
பொன். கருணா அவர்களின் கவிதைத் தலைப்பைப் பார்த்தது மே தூக்கி வாரிப்போட்டது. "நீ செத்துப் போவாய்" ஐயா! அமங்கலச் சொற்களைத் தவிர்க்கலாமே.
இதற்கு மாற்றாக வந்து ஆசுவாசம் தந்தது திரு. நெல்லை குரலோன் அவர்களின் மங்கலக் கவிதை " அரியாசனம் உயர்த்தும்". அது அற்புதச் சொற்சிலம்பம். இளைய சமுதாயத்தைத் தட்டி எழுப்பும் கருத்துக்கோவை. அது வீசுவது காவியப் பேரொளி. வாழ்த்துக்கள்.
இன்று வெளியான ஜோக்ஸ் அத்தனையும் பழசு.
மீண்டும் நாளை சந்திப்போம். நன்றி.
P. கணபதி
பாளையங்கோட்டை.