8 ஆவது புத்தகத் திருவிழா ‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ நிகழ்வில் 3.5 லட்சம் பேர் பங்கேற்பு

புதுக்கோட்டை, செப். 8-
8 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், திங்கள்கிழமை நடைபெற்ற ‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ நிகழ்வில் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். புதுக்கோட்டை அரசு இராணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நடைபெற்ற ‘புதுக்கோட்டை வாசிக்கிறது” நிகழ்வுக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியதாவது: 8 ஆவது புத்தகத் திருவிழா 03.10.2025 முதல், 12.10.2025 வரை 10 நாட்கள் புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள், முன்னணி பதிப்பகங்களின் பல லட்சம் புத்தகங்கள், கோளரங்கம், அறிவியல் விழிப்புணர்வு, வான் நோக்கு நிகழ்வு, பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கவியரங்கம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் இந்த புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. புத்தகத் திருவிழா குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ விழிப்புணர்வு நிகழ்வு திங்களன்று மாவட்டம் முழுவதும் சிறப்பாக நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், நூலகங்கள், வழக்கறிஞர்கள், வணிகர்கள், விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்ட 3.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புத்தகங்களை வாசித்தனர். நாள்தோறும் புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தங்களது அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும். வாசிப்பு திறனும் அதிகரிக்கும்’’ என்றார். இந்நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ்.திருமால், நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) எஸ். ஞானம், மாவட்ட நூலக அலுவலர் எம். காரல்மார்க்ஸ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்(பொ) கலாராணி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜெ. ஆரோக்கியராஜ், மாயகிருஷ்ணன், புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?