அமித்ஷா சொன்னது ‘கூட்டணி ஆட்சி’ தான்: அண்ணாமலை பேட்டி

அமித்ஷா சொன்னது ‘கூட்டணி ஆட்சி’ தான்: அண்ணாமலை பேட்டி

சென்னை: ஜூலை 17–


தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் என்று அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.


இது குறித்து சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் இன்று அண்ணாமலை கூறியதாவது:–


‘‘அற்புதமான ஆட்சியாளர் காமராஜர் வீழ்த்தப்பட்டதற்கு தி.மு.க.,வே முக்கிய பொறுப்பு, முதன்மை பொறுப்பு. 1967ம் ஆண்டு தேர்தலில், எவ்வளவு பொய்களை சொல்லி கர்மவீரர் காமராஜரை வீழ்த்தினார்கள். அதன் பிறகு காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுப்பட்டபோது, இந்திரா தி.மு.க., உடன் இணைந்து தமிழகத்திலும் வரக் கூடாது, இந்தியாவிலும் வரக் கூடாது என்பதற்காக செயல்பட்டார்கள் என்பதற்கு 1971ம் ஆண்டு தேர்தல் ஒரு எடுத்துக்காட்டு.


கர்மவீரர் காமராஜர் பற்றி பேசுவதற்கு தி.மு.க.,வுக்கு அருகதை இல்லை. ஒரு சதவீதம் கூட உரிமை இருப்பதாக நான் பார்ப்பதில்லை.


1967ம் ஆண்டு தேர்தலின்போது கருணாநிதி பேசியது, எல்லாவற்றையும் எடுத்துப் போட்டுக் காட்டினால், மானம் இருக்கும் ஒரு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூட தி.மு.க., கூட்டணியில் இருக்க மாட்டார்கள்.


வரலாற்றை மாற்றி


திரித்துப் பேசுவதா?


கடைசி காலம் வரை சொத்துக்களை சேர்க்காதவர், எளிமையானவர். தி.மு.க., அ.தி.மு.க., இரண்டுமே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று காட்டமாகக் கூறியவர் காமராஜர்.


வரலாற்றை மாற்றி திரித்து பேசுவதை கண்டிக்கிறேன். மானம் இருக்கும் காங்கிரஸ் கட்சி பார்த்து கொண்டு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற தயாரா? குறைந்தபட்சம் மானத்தை காப்பாற்றுவதற்காக தனியாக போட்டியிடத் தயாரா? இன்னொரு கூட்டணிக்குள் போங்க என்று நான் சொல்லவில்லை. தி.மு.க., கூட்டணியில் இருந்து வருவதற்கு தயாரா? ஆனால் அவர்கள் வர மாட்டார்கள். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரைக்கும் இன்றைக்கு, நாளைக்கு கொஞ்சம் சவுண்ட் விடுவார்கள்.நாளை மறுதினம், தி.மு.க.,வில் இருந்து யாராவது டில்லியில் ராகுல், சோனியாவை சந்திப்பார்கள். அங்கிருந்து, டோஸ் விட்ட பிறகு, தி.மு.க.,வினரின் அடிமாடாக காங்கிரஸ் கட்சியினர் வேலை செய்வார்கள். இப்படித்தான் காலம் காலமாக காங்கிரஸ் கட்சியை மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். புதிதாக எதும் நடக்கப்போவதில்லை.


இதனால் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கும், முக்கிய தலைவர்களுக்கும் நான் கேட்க கூடிய ஒரே ஒரு விஷயம். கர்ம வீரர் காமராஜரை தவிர காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்திற்கு எந்தவொரு அடையாளமும் கிடையாது. வேறு எந்தவொரு தலைவரையும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அப்படிப்பட்ட தலைவரை அசிங்கப்படுத்திய பிறகு நீங்கள் கூட்டணியில் இருக்க வேண்டுமா என்ற கேள்வியை நான் மட்டுமல்ல சாதாரண மக்களும் கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.


தமிழ்நாட்டில் கூட்டணி


ஆட்சிதான்


தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிதான் என்று அமித்ஷா பலமுறை மிகத் தெளிவாக கூறிவிட்டார். அதிமுக - பாஜக கூட்டணி உருவானதில் என் பங்கு இல்லை. இந்த கூட்டணி எப்படி இருக்க வேண்டும் என்று பேசினார்களோ அதிலும் என் பங்கு இல்லை. அப்படி இருக்க, என் தலைவர் அமித்ஷா சொல்வதைத்தான் நான் கேட்டாக வேண்டும். அவர் ஒருமுறை அல்ல, பலமுறை கூறியிருக்கிறார். எனவே அமித் ஷா சொல்வதை மாற்றி, கூட்டணி ஆட்சி இல்லை என்று கூறினால் இந்த கட்சியில் நான் தொண்டனாக இருக்கவே தகுதி இல்லை.


கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசியிருக்கிறார்கள், அதில் எனக்கு பங்கு இல்லை. ஆனால் என்னுடைய தலைவர்கள் பேசியிருப்பதை நான் தூக்கிப்பிடித்தாக வேண்டும். அவர்கள் சொன்னதை நான் நம்புகிறேன். அதனால் நான் இதில் உறுதிபட இருக்கிறேன்.உள்துறை அமைச்சர் அமித் ஷா, கூட்டணி ஆட்சி என்று மிகத் தெளிவாக கூறிவிட்டார். அவர் சொன்னதை நான் எப்படி மாற்றி கூற முடியும்?அமித் ஷா கூறியதில் அதிமுகவுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அவர்கள் பேசி முடிவெடுக்கலாம்’’.


இவ்வாறு அவர் கூறினார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%