அமெரிக்கா, இஸ்ரேலின் பயங்கரவாத ஏஜெண்ட்களே போராட்டங்களை தூண்டிவிட்டனர்: ஈரான் குற்றச்சாட்டு
Jan 10 2026
18
தெஹ்ரான்: ஈரானில் நடந்துவரும் போராட்டங்கள் மற்றும் வன்முறையைத் தூண்டியதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ‘பயங்கரவாத ஏஜெண்டுகளே’ காரணம் என்று ஈரான் அரசு ஊடகம் குற்றம் சாட்டியுள்ளது.
ஈரான் அரசு தொலைக்காட்சியில் இன்று காலை 8 மணி செய்தி ஒளிபரப்பில் வெளியான அறிக்கையில், ‘நாட்டில் நடந்துவரும் போராட்டங்கள் மற்றும் வன்முறையை தூண்டியதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ‘பயங்கரவாத ஏஜெண்டுகளே’ காரணம். இந்தப் போராட்டங்களில் வன்முறை வெடித்து உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இந்தப் போராட்டங்களின்போது மக்களின் தனிப்பட்ட கார்கள், மோட்டார் சைக்கிள்கள், மெட்ரோ ரயில் சேவை போன்ற பொது இடங்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பேருந்துகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.” என்று தெரிவிக்கப்பட்டது.
ஈரானில் பொருளாதார வீழ்ச்சி மற்றும் ஈரானிய ரியாலின் மதிப்பு சரிவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் கடந்த இரண்டு வாரங்களாகத் தொடர்கின்றன. இப்போராட்டம் நேற்று (வியாழக்கிழமை) மிகப்பெரிய அரசாங்க எதிர்ப்பு போராட்டமாக உருவெடுத்தது. நாட்டின் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக சந்தைகள் மற்றும் பஜார்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், போராட்டங்களால் ஏற்பட்ட வன்முறை காரணமாக 45 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2,260-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டிசம்பர் 28 அன்று தெஹ்ரான் பஜாரில் கடையடைப்புடன் தொடங்கிய இந்தப் போராட்டங்கள், தற்போது ஈரானின் 31 மாகாணங்களுக்கும் பரவியுள்ளன.
போராட்டம் பரவுவதை தடுக்க ஈரான் அரசாங்கம் நாட்டில் இணைய சேவையை முடக்கியதுடன், சர்வதேச தொலைபேசி அழைப்புகளையும் துண்டித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு மக்கள் தெருக்களில் இறங்க வேண்டும் என்று நாடு கடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, ஈரானில் போராட்டங்கள் வியாழக்கிழமை அன்று தீவிரமடைந்தன.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?