ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்று: பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தியது இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்று: பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தியது இந்தியா

துபாய், செப்.22-


ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானை மீண்டும் பந்தாடியது. நாங்கள் சரியான ஆட்டத்தை விளையாடவில்லை என தோல்விக்குப்பின் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆஹா கூறினார்.


17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.


இந்த நிலையில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் கோதாவில் குதித்தன. இந்திய அணியில் இரு மாற்றமாக அர்ஷ்தீப்சிங், ஹர்ஷித் ராணா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டனர்.


‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதையடுத்து சகிப்சதா பர்ஹானும், பஹர் ஜமானும் பாகிஸ்தானின் இன்னிங்சை தொடங்கினர். 3-வது பந்திலேயே சகிப்சதா கொடுத்த எளிதான கேட்ச்சை அபிஷேக் ஷர்மா வீணடித்தார். இந்த வாய்ப்பை சகிப்சதா சரியாக பயன்படுத்தி தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டார். மறுமுனையில் பஹர் ஜமான் 15 ரன்னில் பாண்ட்யாவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் சாம்சனிடம் பிடிபட்டார். 2-வது விக்கெட்டுக்கு சைம் அயூப் இறங்கினார். முந்தைய 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக டக்-அவுட் ஆன அயூப்புக்கும் இந்த முறை இந்திய பீல்டர்கள் கருணை காட்டி விட்டனர். அவர் 4 ரன்னில் இருந்த போது கொடுத்த அருமையான கேட்ச் வாய்ப்பை குல்தீப் யாதவ் நழுவ விட்டார்.


இந்தியாவின் மோசமான பீல்டிங்கை அனுகூலமாக மாற்றிக் கொண்ட இருவரும் வேகமாக ரன் எடுத்தனர். வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பவுலிங் எடுபடவில்லை. ‘பவர்-பிளே’யில் அவர் வீசிய 3 ஓவர்களில் தலா 2 பவுண்டரி வீதம் விரட்டினர். சகிப்சதா 32 ரன்னிலும் கண்டம் தப்பினார்.


சில சிக்சர்களை பறக்க விட்டு மிரட்டிய சகிப்சதா- சைம் அயூப் ஜோடி ஆடிய விதத்தை பார்த்த போது ஒரு கட்டத்தில் அவர்கள் 190 ரன்கள் வரை எடுப்பார்கள் போல் தோன்றியது. நல்லவேளையாக மிடில் ஓவர்களில் அவர்களின் உத்வேகத்துக்கு நமது பவுலர்கள் கொஞ்சம் முட்டுக்கட்டை போட்டனர். அணியின் ஸ்கோர் 93-ஆக உயர்ந்த போது (10.3 ஓவர்) சைம் அயூப் 21 ரன்களில், ஷிவம் துபேவின் பந்து வீச்சில் சிக்கினார். அடுத்த 6 ஓவர்கள் பந்து எல்லைக்கோடு பக்கமே போகவில்லை. இடையில் சகிப்சதா பர்ஹான் (58 ரன், 45 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), ஹூசைன் தலாத் (10 ரன்) வெளியேறினர்.


கடைசி கட்டத்தில் முகமது நவாஸ் (21 ரன்), கேப்டன் சல்மான் ஆஹா (17 ரன், நாட்-அவுட்), பகீம் அஷ்ரப் (20 ரன், 8 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர், நாட்-அவுட்) ஆகியோர் இரட்டை இலக்க பங்களிப்பை அளித்து சவாலான ஸ்கோருக்கு வழிவகுத்தனர்.


5 விக்கெட்டுக்கு 171 ரன்கள்


20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்தது. இந்தியர்கள் மொத்தம் 4 கேட்ச்சுகளை விட்டனர். பீல்டிங்கில் கச்சிதமாக செயல்பட்டு இருந்தால் அவர்களை இதைவிட குறைந்த ஸ்கோரில் கட்டுப்படுத்தி இருக்கலாம். இந்திய தரப்பில் ஷிவம் துபே 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்திக்கு விக்கெட் கிடைக்கவில்லை.


பின்னர் 172 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா முதல் பந்தையே சிக்சருக்கு தூக்கிவிட்டு அமர்க்களமாக தொடங்கினார். அவரும், சுப்மன் கில்லும் பாகிஸ்தானின் பந்து வீச்சை துவம்சம் செய்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். பவர்-பிளேக்குள் 69 ரன்கள் சேகரித்து வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டனர். தொடர்ந்து அதிரடி காட்டிய இவர்கள் 8.4 ஓவர்களில் ஸ்கோர் 100-ஐ தொட வைத்தனர். நடப்பு தொடரில் ஒரு விக்கெட்டுக்கு செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் ஜோடி இவர்கள் தான்.


அணியின் ரன் 105 ஆக உயர்ந்த போது (9.5 ஓவர்) சுப்மன் கில் (47 ரன், 28 பந்து, 5 பவுண்டரி) பகீம் அஷ்ரப்பின் பந்தில் போல்டானார். 2-வது விக்கெட்டுக்கு நுழைந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் (0) ஷாட்பிட்ச் பந்தை தனக்கே உரிய பாணியில் விளாச முயற்சித்து கேட்ச்சாகி ஏமாற்றம் அளித்தார். இன்னொரு பக்கம் ருத்ரதாண்டவமாடிய அபிஷேக் ஷர்மா 74 ரன்களில் (39 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் (13 ரன்) நிலைக்கவில்லை.


இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. திலக் வர்மா (30 ரன்), ஹர்திக் பாண்ட்யா (7 ரன்) களத்தில் இருந்தனர்.


நடப்பு தொடரில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடிப்பது இது 2-வது முறையாகும்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%