ஆதிதிராவிடர் – பழங்குடி இளைஞர்களுக்கான ஆதி கலைக்கோல் பயிற்சிப் பட்டறை: உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்
சென்னை, செப் 23–
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான ஆதி கலைக்கோல் பயிற்சி பட்டறை நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியையொட்டி அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் அரசு சமூக நீதி கல்லூரி விடுதி மாணவர்களின் ஓவியம் மற்றும் சிற்ப கலை படைப்புகளையும், பழங்கால பாரம்பரிமிக்க இசைக்கருவிகளையும் பார்வையிட்டு, இசைக்கலைஞர்கள் அந்த இசைக்கருவிகளைக் கொண்டு பல்வேறு விதங்களில் இசைப்பதையும் ஆர்வத்துடன் கேட்டு ரசித்தார்.
இவ்விழாவில், துணை முதலமைச்சர் பேசியதாவது:–
அடித்தட்டு மக்களுடைய கலைகள், அது பாடலாக இருக்கட்டும், நடனமாக இருக்கட்டும், இலக்கியமாக இருக்கட்டும், ஓவியமாக இருக்கட்டும், அதில் ஒருவிதமான ஏக்கம், கோபம், எதிர்பார்ப்பு எல்லாமே இருக்கும். அடித்தட்டு மக்களுடைய கலைகளில் இருப்பவைதான் மக்களுடைய, தமிழ்நாட்டினுடைய உண்மையான வரலாறு.
இன்றைக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுடைய பார்வையில் இருந்து சமுதாயத்தைப் பார்க்கும் படைப்புகள், பல வடிவங்களில் வந்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட கலை வடிவங்களை, இன்னும் ஒரு பரந்துபட்ட தளத்திற்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும். எளிய மக்களுடைய கலைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அந்த நோக்கத்தோடு தான் நம்முடைய அரசு, இந்த விழாவை இன்றைக்கு இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறது.
இந்த 3 நாள் பயிற்சி பட்டறை இன்றைய இளைஞர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக இருக்கும். இன்றைக்கு ஆதி திராவிடர், பழங்குடியினருடைய கலை, இலக்கியம், பண்பாட்டை வளர்த்தெடுக்க, ஏராளமான முன்னெடுப்புகளை நம்ம அரசு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.
கலைத்திறன் முகாம்கள்
‘களம் ஆடு’ என்கின்ற முன்னெடுப்பு மூலமாக, ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு, கலைத்திறன் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு ஆதி திராவிடர் கலை இலக்கிய கழகத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்ற சிறந்த எழுத்தாளர்களுக்கான பரிசுத்தொகை, 50 ஆயிரம் ரூபாயிலிருந்து முதலமைச்சர் ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி கொடுத்திருக்கிறார். ஆதி திராவிடர் மக்களுடைய கலை, இலக்கியம், வாழ்வியல், பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்ற இலக்கியப் படைப்புகள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.
‘தொல்குடியினர் தின விழா’ ஒவ்வொரு வருடமும் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடர்ந்து நடத்தி கொண்டு வருகிறோம். இதில் மாணவர்களுக்கு பலவகையான போட்டிகளும் நடத்தப்படுகின்றது. பழங்குடியின மக்களுடைய மொழிகளை பாதுகாக்க 3 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டு, ஒலி, ஒளி ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து அந்த சேவைகளையும் நம்முடைய அரசு செய்துகொண்டிருக்கிறது. ஆதிதிராவிட மக்களுடைய கலைகளை அனைத்து மக்களுக்குமான கலைகளாக ஆக்குவதற்கு இதுபோன்ற பயிற்சி பட்டறைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். இவ்வாறு துணை முதலமைச்சர் தெரிவித்தார்.