இந்தியாவுடன் கருத்து வேறுபாட்டை உருவாக்க அமெரிக்கா முயற்சி: சீனா குற்றச்சாட்டு
சீனாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே பொய்யான கதைகள் மூலம் கருத்து வேறுபாட்டை அமெரிக்கா உருவாக்கி வருகிறது. இந்தியாவுடனான எல்லை நிலைமை நிலையானது என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பெமா வாங்ஜாம் தாங்டாக் என்பவர், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் வசித்து வருகிறார். இவர் கடந்த நவம்பர் 21ம் தேதி ஜப்பானுக்கு செல்லும் வழியில் சீனாவில் அவர் சென்ற விமானம் ஓய்வுக்காக நிறுத்தப்பட்டது. அப்போது, அவரது பாஸ்போர்ட்டை பறித்த சீன குடியேற்ற அதிகாரிகள், அருணாச்சல பிரதேசத்தில் பிறந்ததால் பாஸ்போர்ட் செல்லாது என்றனர். மேலும், அருணாச்சல பிரதேசம் சீனாவைச் சேர்ந்த பகுதி என்றும் கூறினர். இதற்கு இந்திய தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அருணாச்சல பிரதேச விவகாரத்தில் இந்தியா சீனா இடையே மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் பென்டகன் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க காங்கிரஸிடம் பென்டகன் சமர்பித்த அறிக்கை; 2049ம் ஆண்டுக்குள் சிறந்த நிலையை அடைய அருணாச்சலப் பிரதேசம், தைவான் மற்றும் தென் சீனக் கடலில் உள்ள பிற பிராந்தியங்கள் மிகவும் முக்கியம் என்று சீனா முடிவு செய்துள்ளது. இதற்காக ஒரு சர்வதேச உயர்மட்டக் குழுவையும், பலமான ராணுவ கட்டமைப்பை உருவாக்குவதை சீனா நோக்கமாக கொண்டிருக்கிறது.
எனவே, இனி வரும் ஆண்டுகளில் இந்தியா – சீனா இடையிலான உறவில் மோதல் ஏற்படலாம், என பென்டகன் கூறியிருந்தது.
இந்த அறிக்கையை சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறியதாவது:
பென்டகனின் அறிக்கை சீனாவின் பாதுகாப்புக் கொள்கையை திரிக்கும் வகையில் உள்ளது. சீனாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே பொய்யான கதைகள் மூலம் கருத்து வேறுபாட்டை உருவாக்குகிறது.
இந்தியாவுடன் முரண்பாடுகளை உருவாக்குகிறது. இந்தியாவுடனான எல்லை நிலைமை நிலையானது. அமெரிக்கா தனது ராணுவ மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஒரு சாக்குப் போக்கைக் கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அறிக்கையை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?