இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 109 கோடியில் 19 புதிய திட்டப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்; 17 முடிவுற்ற பணிகளைத் துவக்கினார்
சென்னை, ஜன.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 11 திருக்கோயில்களில் 18 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார். 15 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் 7 திருக்கோயில்களில் 10 முடிவுற்ற திருப்பணிகள் மற்றும் 6 சரக ஆய்வாளர் அலுவலகங்களை திறந்து வைத்து, சிற்றுந்துகளின் பயன்பாட்டினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், ராமநாதசுவாமி கோயில், தென்காசி மாவட்டம், குற்றாலம், ஸ்ரீ பராசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.சி. பள்ளியில் புதியதாக 54 கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல்; திருவாரூர், தியாகராஜசுவாமி கோயில், திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர், கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில், குலமங்கலம், பசுபதீஸ்வரர் கோயில், சென்னை, வியாசர்பாடி, இரவீஸ்வரர் கோயில், தேனி மாவட்டம், குச்சனூர், சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில், புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளாளவிடுதி, அகஸ்தீஸ்வரர் கோயில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை, செல்லாண்டியம்மன் கோயில், பெருந்துறை, வாகைத்தொழுவம்மன் கோயில் என மொத்தம் 108.90 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான18 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு பள்ளியின் கூடுதல் வகுப்பறை கட்டடத்திற்குமுதலமைச்சர் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.
கோவை மாவட்டம், தேக்கம்பட்டி, வனபத்ரகாளியம்மன், தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரம், நாகநாத சுவாமி கோயில் உள்பட 7 திருக்கோயில்களில் 10 முடிவுற்ற திருப்பணிகள், 6 சரக ஆய்வாளர் அலுவலகங்கள் திறந்து வைத்தல் மற்றும் சிற்றுந்துகளை தொடங்கி வைத்தார்.
இதே போல 15.30 கோடி ரூபாய் செலவிலான 10 முடிவுற்ற பணிகள், 6 சரக ஆய்வாளர் அலுவலகங்களை திறந்து வைத்து, சிற்றுந்துகளின் பயன்பாட்டினை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் முனைவர் துரை. இரவிச்சந்திரன், தலைமைப் பொறியாளர் பொ.பெரியசாமி, கூடுதல் ஆணையர் பொ.ஜெயராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
காணொலிக் காட்சி வாயிலாக ராமேஸ்வரத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், ராமநாதசுவாமி திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலர் கே. செல்லதுரை, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.